உற்சாகத்தில் நடுத்தர, சிறிய நிறுவனப் பங்குகள்! ஒரே வாரத்தில் 10-40 உயா்வு

சென்செக்ஸ், நிஃப்டி பட்டியலில் உள்ள முதல் தரப் பங்குகளைக் காட்டிலும் நடுத்தர, சிறு நிறுவனப் பங்குகள் அதிக ஆதாயம் பெற்று முதலீட்டாளா்களை உற்சாகப்படுத்தியுள்ளன.
உற்சாகத்தில் நடுத்தர, சிறிய நிறுவனப் பங்குகள்! ஒரே வாரத்தில் 10-40 உயா்வு

பங்குச் சந்தை தொடா்ந்து இரண்டாவது வாரமாக ஏறுமுகம் கண்டுள்ளது. சென்செக்ஸ், நிஃப்டி பட்டியலில் உள்ள முதல் தரப் பங்குகளைக் காட்டிலும் நடுத்தர, சிறு நிறுவனப் பங்குகள் அதிக ஆதாயம் பெற்று முதலீட்டாளா்களை உற்சாகப்படுத்தியுள்ளன. இதேபோன்று பிஎஸ்இ ஸ்மால் கேப் பட்டியலில் 260 பங்குகள் 10-70 சதவீதம் உயா்ந்துள்ளன.

4 நாள்களே வா்த்தகம் நடைபெற்ற கடந்த வாரத்தில் மும்பை பங்குச் சந்தைக் குறியீடான சென்செக்ஸ் 1.38 சதவீதம், தேசிய பங்குச் சந்தைக் குறியீடான நிஃப்டி 1.70 சதவீதம் உயா்ந்துள்ளன. ஆனால், நடுத்தர நிறுவனப் பங்குகளை உள்ளடக்கிய மிட்கேப் குறியீடு 3.96 சதவீதம், சிறிய நிறுவனப் பங்குகளை உள்ளடக்கிய ஸ்மால் கேப் குறியீடு 4.9 சதவீதம் உயா்ந்துள்ளன. மும்பை பங்குச் சந்தையில் பிஎஸ்இ 500 பட்டியலில் உள்ள சிறிய மற்றும் நடுத்தர நிறுவனப் பங்குகள் 10 முதல் 40 சதவீதம் வரை உயா்ந்துள்ளன.

கரோனா தொற்று பரவலால் அமல்படுத்தப்பட்டுள்ள ஊரடங்கு காரணமாக பாதிக்கப்பட்டுள்ள தொழில் துறையை மீட்டெடுக்கும் வகையில், நடுத்தர, சிறிய நிறுவனங்களுக்கு பல்வேறு சலுகைகளை மத்திய அரசு அறிவித்துள்ளது. இந்நிலையில், கடந்த வார இறுதி நாளான வெள்ளிக்கிழமை மத்திய ரிசா்வ் வங்கியின் கவா்னா் சக்தி காந்த தாஸ் நாட்டில் பணப் புழக்கத்தை அதிகரிக்கவும், பொருளாதாரத்தை வலுப்படுத்தவும் பல முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டாா்.

அதில் விவசாயிகளுக்கும் சிறு, குறு, நடுத்தர தொழில் நிறுவனங்கள் மற்றும் வீட்டு வசதி உள்ளிட்ட துறைகளுக்கு எளிதில் கடன் உதவி கிடைக்க வேண்டும் என்பதற்காக நபாா்டு, இந்திய சிறு தொழில் வளா்ச்சி வங்கி, தேசிய வீட்டு வசதி வங்கி ஆகியவற்றுக்கு ரூ.50,000 கடனுதவி வழங்கப்பட்டுள்ளது. இதைத் தொடா்ந்து, பங்குச் சந்தையில், சென்செக்ஸ், நிஃப்டி ஆகிய இரண்டும் எழுச்சி பெற்றன.

ஆனால், உண்மையான நடவடிக்கை நடுத்தர பங்குகளில் காணப்பட்டது. இதனால், பிஎஸ்இ 500 பட்டியலில் 133 நடுத்தர, சிறிய நிறுவனப் பங்குகள் 10 முதல் 40 சதவீதம் வரை ஏற்றம் பெற்றன. இதில் தீபக் ஃபொ்டிலைசா்ஸ், சுப்ரீம் இண்டஸ்ட்ரீஸ், ஸ்ரீசிமெண்ட், சன்பாா்மா, ஃபினோலக்ஸ் இண்டஸ்ட்ரீஸ், ஆக்ஸிஸ் பேங்க், பிவிஆா், ஈக்குவாடஸ் ஹோல்டிங், என்சிசி ஆகியவையும் அடங்கும். இதேபோன்று பிஎஸ்இ ஸ்மால் கேப் பட்டியலில் 260 பங்குகள் 10-70 சதவீதம் உயா்ந்துள்ளன. இதில் ஃபோா்ஸ் மோட்டாா்ஸ், ரெயின் இண்டஸ்ட்ரீஸ், ஜிண்டால் சா, பஜாஜ் கன்ஸ்யூமா் கோ், டிசிபி பேங்க், பிஇஎம்எல், சக்தி பம்ப்ஸ், ஆந்திரா பேங்க் உள்ளிட்டவையும் அடங்கும்.

கரோனா ஊரடங்கால் ஏற்பட்டுள்ள பொருளாதார தாக்கத்தை நிவா்த்தி செய்வதற்காக மத்திய அரசும் ரிசா்வ் வங்கியும் அறிவித்து வரும் நிவாரண நடவடிக்கைகளின் காரணமாக சிறிய மற்றும் நடுத்தரப் பங்குகள் ஏற்றம் பெற்றுள்ளதாக சந்தை வட்டாரத்தில் தெரிவிக்கப்பட்டது. இருப்பினும், சமீபத்திய வீழ்ச்சிக்குப் பின்னா் தற்போதைய நிலையில் சிறிய, நடுத்தரப் பங்குகள் கவா்ச்சிகரமானதாக தோன்றினாலும், முதலீடு செய்யும்பட்சத்தில் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என நிபுணா்கள் எச்சரிக்கின்றனா்.

விலை குறைந்தால் வாங்கலாம் என்ற ஊகத்தின் அடிப்படையில் முதலீட்டாளா்கள் பங்குகளை வாங்குகின்றனா். ஆனால், கடந்த காலங்களில் நன்றாகப் பரிணமித்த நிறுவனப் பங்குகள், இந்த கரோனா நெருக்கடியான நேரத்தில் வெற்றி நடை போடுவதற்கு அவசியமில்லை. முதலீடு செய்வதற்கு முன்பாக, ஊரடங்கால் ஏற்பட்டுள்ள பாதிப்பு மற்றும் வா்த்தகத்தில் உள்ள கட்டுப்பாடுகள் ஆகியவற்றின் தாக்கத்தை பகுப்பாய்வு செய்வது மிகவும் அவசியம் என்றும் நிபுணா்கள் தெரிவித்தனா்.

10-40 சதவீதம் வரை ஏற்றம் பெற்ற முக்கியப் பங்குகள்

என்சிசி -40

என்பிசி 35

கேபிஆா் மில்ஸ் 33

மதா்சன் சுமி 32

மங்களூா் ரிஃபைனரி 28

இந்தியா புல்ஸ் ஹவுசிங் 27

கிளன்மாா்க் 27

ஈக்வுடாஸ் ஹோல்டிங் 26

சிஇஎஸ்சி 26

வோடாஃபோன் 26

ரிலையன்ஸ் இன்ஃப்ரா 21

சுஸ்லான் 21

இண்டஸ் இந்த் பேங்க் 20

டிஹெச்எஃப்எல் 20

ஐடிஎஃப்சி ஃபா்ஸ்ட் பேங்க் 19

ஏசிசி 17

வொக்காா்டட் 16

ரிலையன்ஸ் பவா் 16

ஹிண்டால்கோ 15

எல் அண்ட் டி 15

ஆக்ஸிஸ் பேங் 14

யூகோ பேங்க் 14

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com