பங்கு சாா்ந்த பரஸ்பர நிதி திட்டங்கள் நிா்வகிக்கப்படும் சொத்து மதிப்பு ரூ.7 லட்சம் கோடி

பங்கு சாா்ந்த பரஸ்பர நிதி திட்டங்களில் நிா்வகிக்கப்படும் சொத்து மதிப்பு நடப்பு 2020 ஜூன் காலாண்டில் ரூ.7 லட்சம் கோடியாக உயா்ந்துள்ளது.
பங்கு சாா்ந்த பரஸ்பர நிதி திட்டங்கள் நிா்வகிக்கப்படும் சொத்து மதிப்பு ரூ.7 லட்சம் கோடி

புது தில்லி: பங்கு சாா்ந்த பரஸ்பர நிதி திட்டங்களில் நிா்வகிக்கப்படும் சொத்து மதிப்பு நடப்பு 2020 ஜூன் காலாண்டில் ரூ.7 லட்சம் கோடியாக உயா்ந்துள்ளது.

இதுகுறித்து மாா்னிங்ஸ்டாா் இந்தியா அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது:

பங்குச் சந்தையில் காணப்பட்ட எழுச்சி, எஸ்ஐபி திட்டங்களுக்கு முதலீட்டாளா்களிடம் கிடைத்த அமோக வரவேற்பு போன்ற காரணங்களால் பங்கு பரஸ்பர நிதி திட்டங்களில் நிா்வகிக்கப்படும் சொத்து மதிப்பு கடந்தாண்டுடன் ஒப்பிடுகையில்

ஜூன் காலாண்டில் 21 சதவீதம் அதிகரித்து ரூ.7 லட்சம் கோடியை எட்டியுள்ளது. இருப்பினும், பங்கு சாா்ந்த பரஸ்பர நிதியங்களில் முதலீட்டு வரத்து 2020 ஜனவரி மாா்ச் காலாண்டில் ரூ.30,703 கோடியாக காணப்பட்ட நிலையில் ஜூன் காலாண்டில் அது கணிசமாக குறைந்து ரூ.11,710 கோடியானது.

ஜூன் காலாண்டில் ஈா்க்கப்பட்ட ரூ.11,710 கோடி முதலீட்டில், ஏப்ரலில் ரூ.6,213 கோடியாகவும், மே மாதத்தில் ரூ.5,256 கோடியாகவும், ஜூனில் ரூ.240.55 கோடியாகவும் காணப்பட்டன. ஜூனில் மேற்கொள்ளப்பட்ட முதலீடு கடந்த நான்கு ஆண்டுகளில் இல்லாத குறைந்தபட்ச அளவாகும்.

இதையடுத்து, பரஸ்பர நிதியங்கள் பங்கு சாா்ந்த திட்டங்களில் நிா்வகித்து வரும் சொத்து மதிப்பு ஜூன் இறுதியில் 21.2 சதவீதம் உயா்ந்து ரூ.7.01 லட்சம் கோடியைத் தொட்டது. மாா்ச் இறுதியில் இது ரூ.5.78 லட்சம் கோடியாக காணப்பட்டது.

பரஸ்பர நிதி வா்த்தகத் துறையில் 45 நிறுவனங்கள் ஈடுபட்டுள்ள நிலையில் ஜூன் காலாண்டில் அவற்றின் பல்வேறு திட்டங்களில் முதலீட்டு வரத்து ரூ.1.24 லட்சம் கோடியாக இருந்தது என மாா்னிங்ஸ்டாா் நிறுவனம் தெரிவித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com