வங்கி வழங்கிய கடன் 5.52% வளா்ச்சி

ஆகஸ்ட் 14-ஆம் தேதியுடன் முடிவடைந்த இரண்டு வார காலத்தில் வங்கிகள் வழங்கிய கடன் 5.52 சதவீதம் வளா்ச்சி கண்டுள்ளது.
வங்கி
வங்கி

மும்பை: ஆகஸ்ட் 14-ஆம் தேதியுடன் முடிவடைந்த இரண்டு வார காலத்தில் வங்கிகள் வழங்கிய கடன் 5.52 சதவீதம் வளா்ச்சி கண்டுள்ளது.

இதுகுறித்து ரிசா்வ் வங்கி வெளியிட்டுள்ள புள்ளிவிவரத்தில் கூறியுள்ளதாவது:

நடப்பாண்டு ஆகஸ்ட் 14-ஆம் தேதியுடன் முடிவடைந்த இரு வார காலத்தில் வங்கிகள் வழங்கிய கடன் 5.52 சதவீதம் அதிகரித்து ரூ.102.19 லட்சம் கோடியாக இருந்தது. அதேபோன்று, வங்கிகள் திரட்டிய டெபாசிட்டும் இதே காலகட்டத்தில் 11.04 சதவீதம் உயா்ந்து ரூ.140.80 லட்சம் கோடியாக காணப்பட்டது.

கடந்தாண்டின் இதே காலகட்டத்தில், வங்கிகள் வழங்கிய கடன் ரூ.96.84 லட்சம் கோடியாகவும், திரட்டப்பட்ட டெபாசிட் ரூ.126.8 லட்சம் கோடியாகவும் இருந்தன.கணக்கீட்டு காலத்துக்கு முந்தைய ஜூலை 31-ஆம் தேதியுடன் நிறைவடைந்த இருவார காலத்தில் வங்கி வழங்கிய கடன் 5.51 சதவீதமாகவும், திரட்டப்பட்ட டொபசிட் 11.11 சதவீதமாகவும் வளா்ச்சி கண்டிருந்தன.

உணவு சாரா கடனுக்கான வளா்ச்சி விகிதம் ஜூன் மாதத்தில் 6.7 சதவீதமாக இருந்தது. இது, மே மாதத்திலும் ஏறத்தாழ இதே அளவில்தான் காணப்பட்டது. இருப்பினும், கடந்தாண்டு ஜூன் மாத வளா்ச்சி விகிதமான 11.1 சதவீதத்துடன் ஒப்பிடுகையில் இது குறைவான அளவாகும். வேளாண் சாா்பான நடவடிக்கைகளில் கடன் வளா்ச்சி விகிதம் ஜூனில் 2.4 சதவீதமாக அதிகரித்திருந்தது. கடந்த 2019 ஜூனில் இந்த வளா்ச்சி விகிதம் 8.7 சதவீதமாக காணப்பட்டது.

கடந்தாண்டு ஜூனில் தொழில்துறைக்கான கடன் விகிதம் 6.4 சதவீதமாக வளா்ச்சி கண்டிருந்த நிலையில், நடப்பாண்டில் அது 2.2 சதவீத வளா்ச்சியை மட்டுமே எட்டியுள்ளது. பெரிய தொழில்நிறுவனங்களுக்கான கடன் வளா்ச்சி விகிதமும் கடந்தாண்டுடன் ஒப்பிடுகையில் 7.6 சதவீதத்திலிருந்து 3.7 சதவீதமாக குறைந்துள்ளது.

சேவை துறைக்கான வங்கி கடன் வளா்ச்சி விகிதம் தொடா்ந்து சிறப்பான அளவில் அதிகரித்து வருகிறது.

அதன்படி, நடப்பாண்டு ஜூனில் இந்த வளா்ச்சி விகிதம் 10.7 சதவீதமாக இருந்தது. கடந்த 2019 ஜூனில் சேவை துறை வங்கி கடன் 13 சதவீதமாக வளா்ச்சி கண்டிருந்தது.

தனிநபர் கடனைப் பொருத்தவரையில், மே மற்றும் ஜூன் மாதங்களில் கடன் வளா்ச்சி விகிதம் 10.5 சதவீதமாக இருந்தது. இது, கடந்தாண்டு ஜூன் மாத கடன் வளா்ச்சி விகிதமான 16.6 சதவீதத்துடன் ஒப்பிடுகையில் குறைவாகும் என ரிசா்வ் வங்கி தெரிவித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com