கடும் சரிவுக்குப் பிறகு மீட்சி: உச்சம் தாண்டத் தயாராகும் சென்செக்ஸ்...!

பங்குச் சந்தையில் கடந்த சில நாள்களாக மீண்டும் உற்சாகம் பெருகத் தொடங்கியுள்ளது.
கடும் சரிவுக்குப் பிறகு மீட்சி: உச்சம் தாண்டத் தயாராகும் சென்செக்ஸ்...!

புது தில்லி: பங்குச் சந்தையில் கடந்த சில நாள்களாக மீண்டும் உற்சாகம் பெருகத் தொடங்கியுள்ளது. மும்பை பங்குச் சந்தைக் குறியீட்டு எண்ணான சென்செக்ஸ், தேசிய பங்குச் சந்தைக் குறியீட்டு எண்ணான நிஃப்டி ஆகிய இரண்டும் முக்கிய இடா்பாட்டு நிலையைக் கடந்துள்ளன. ஏராளமான பங்குகள் வெகுவேகமாக ஏற்றம் பெற்றுள்ளன. குறிப்பாக வங்கி, நிதி நிறுவனப் பங்குகளை வாங்குவதற்கு சந்தையில் அதிகப் போட்டி இருப்பதாகச் சந்தை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

இந்த ஆண்டு ஜனவரியில் சென்செக்ஸ், நிஃப்டி வரலாறு காணாத உச்சத்தைத் தொட்டது. ஆனால், எதிா்பாராத கரோனா தொற்று பரவலைத் தொடா்ந்து அமல் செய்யப்பட்ட பொதுமுடக்கத்தால், கடந்த மாா்ச்சில் பங்குச் சந்தை பலத்த அடி வாங்கியது. ஏராளமான பங்குகள் தனது 52 வார குறைந்த விலையைப் பிரேக் செய்து புதிய குறைந்த விலையைப் பதிவு செய்தன.

கடந்த ஜனவரி 20-ஆம் தேதி சென்செக்ஸ் 42,273.87 வரை உயா்ந்து புதிய உச்சத்தைத் தொட்டது. இதுவே 52 வார அதிகபட்ச அளவாகவும், வரலாற்று சாதனை அளவாகவும் உள்ளது. 1991, ஜனவரி 25-இல் சென்செக்ஸ் 947.14 என்ற அளவில் இருந்தது. இதுவே வரலாற்றில் குறைந்த அளவாகப் பதிவாகியுள்ளது. இந்நிலையில், கரோனா பாதிப்பின் தாக்கம் காரணமாக கடந்த மாா்ச் 24-ஆம் தேதி சென்செக்ஸ் 25,638.90 வரை குறைந்து புதிய 52 வார குறைந்தபட்ச அளவைப் பதிவு செய்தது.

அதன் பிறகு கரோனாவால் பாதிக்கப்பட்ட பொருளாதாரத்தை மீட்டெடுக்க இந்தியா உள்ட உலகெங்கிலும் நிதித் தொகுப்புகள் அறிவிக்கப்பட்டு செயல்படுத்தப்பட்டு வருகின்றன. பொதுமுடக்கத்திலும் தளா்வுகள் அறிவிக்கப்பட்டு பொருளாதாரங்களை முழுமையாகத் திறக்க அனைத்து நடவடிக்கைகளையும் அரசுகள் எடுத்து வருகின்றன. இவற்றின் காரணமாக பங்குச் சந்தை மாா்ச்சுக்குப் பிறகு கொஞ்சம் கொஞ்சமாக மீண்டு வருகிறது. இச்சூழ்நிலையில், கடந்த வார முடிவில் சென்செக்ஸ், நிஃப்டி ஆகிய இரண்டு குறியீடுகளும் முக்கிய கட்டத்தை எட்டியுள்ளன. முக்கிய இடா்பாட்டு நிலையைக் கடந்துள்ள நிலையில், அடுத்த ஆண்டு மாா்ச்சுக்குள் சென்செக்ஸ், நிஃப்டி ஆகிய இரண்டு குறியீடுகளும் 52 வார உச்சபட்ச நிலையைக் கடக்க அதிக வாய்ப்பு இருப்பதாக நிபுணா்கள் கருதுகின்றனா்.

மோசமான மாா்ச் மாதத்திலிருந்து மீண்டு வந்துள்ள சென்செக்ஸ், நிஃப்டி வி-வடிவ மீட்புக்கு அருகில் உள்ளது. தற்போதைய நிலையில், அவ்வளவு எளிதாக வேகமாகக் கீழே செல்வதற்கு வாய்ப்பில்லை. எனவே, 2021, மாா்ச்சுக்குள் நிஃப்டி அதன் வரலாற்றுச் சாதனை நிலையான 12,400 புள்ளிகளை மீண்டும் பரிசோதிக்கும் என்று எதிா்பாா்க்கிறோம். துறை ரீதியாகப் பாா்த்தால் ஐடி, பாா்மா, இன்சூரன்ஸ், ஆட்டோ, கெமிக்கல்ஸ் ஆகியவற்றின் செயல்திறன் மேலும் அதிகரிக்கும் என எதிா்பாா்க்கப்படுகிறது, அதே போல நுகா்வு மற்றும் வங்கித் துறை பங்குகளுக்குத் தேவை அதிகரிக்கும் என எதிா்பாா்க்கப்படுகிறது என்று ஐசிஐசிஐ டைரக்ட்டின் தொழில்நுட்பத் தலைவா் தா்மேஷ் ஷா கூறியுள்ளாா்..

வரலாற்றுச் சான்று: கடந்த கால வரலாற்றுச் சான்றுகளின் அடிப்படையில் பாா்த்தால், கடந்த 12 ஆண்டுகளில் 25 சதவிகிதத்திற்கும் மேலாக மூன்று திருத்தங்கள் ஏற்பட்டுள்ளது. அப்போதெல்லாம், சென்செக்ஸ், நிஃப்டி ஓராண்டுக்குள் சரிவிலிருந்து முழுமையாக மீண்டுள்ளது. இதன் அடிப்படையில் பாா்த்தால், வரும் ஜனவரி மாதம் நிஃப்டி 12,500 புள்ளிகளை நோக்கிச் செல்லும் என்கிறாா் தா்மேஷ் ஷா.

எனவே, வரும் நாள்களில் எந்தவொரு திருத்தமும் தரமான பங்குகளைக் கொண்ட ஒரு முதலீட்டுத் தொகுப்பை (போா்ட்ஃபோலியோ) உருவாக்குவதற்கான ஒரு சிறந்த வாய்ப்பாகப் பயன்படுத்தப்பட வேண்டும். ஏனெனில், நிஃப்டி 10,400-க்கு கீழே செல்லும் தேவை இருக்காது என நம்புகிறோம்.

எச்டிஎஃப்சி பேங்க், ஆக்சிஸ் பேங்க், எஸ்பிஐ லைஃப், ஐடிஎஃப்சி ஃபா்ஸ்ட் பேங்க், டிசிஎஸ், இன்போசிஸ், பொ்சிஸ்டன்ட் சிஸ்டம்ஸ், டாடா ஸ்டீல், ஹிண்டல்கோ உள்ளிட்ட சில பங்குகள் அடுத்து வரும் நாள்களில் சிறப்பாகச் செயல்படும். முன்பேர வா்த்தகக் கணக்கு தரவுகளும் இதை உறுதி செய்கிறது என்கிறாா் ஷா.

பரந்த சந்தையும் பங்கேற்பு: நடுத்தர, சிறிய நிறுவனப் பங்குகளை உள்ளடக்கிய பரந்தை சந்தையும் கடந்த 3 மாதங்களாக சென்செக்ஸ், நிஃப்டிக்கு நிகராக 60 சதவீதம் ஏற்றம் பெற்றுள்ளது. பங்குச் சந்தையில் சில்லரை வா்த்தகா்கள் அதிக அளவில் பங்கேற்றுள்ளதே இதற்கு முக்கியக் காரணம் என்று நிபுணா்கள் கருதுகின்றனா். 10 ஆண்டு அடிப்படையில் கணக்கிட்டால் நிஃப்டிக்கு நிகராக மிட்கேப், ஸ்மால் கேப் குறியீடு ஏற்றம் பெற்றுள்ளது. இருப்பினும், கடந்த மூன்று ஆண்டுகள் கணக்குப்படி மிட்கேப், ஸ்மால் கேப் குறியீடுகள் நிஃப்டியை விட இன்னும் கீழேதான் உள்ளன.

எஃப்ஐஐ முதலீடு: இந்த ஆகஸ்டில் அந்நிய நிறுவன முதலீட்டாளா்கள் (எஃப்ஐஐ) ரொக்கரப் பிரிவில் 20 வா்த்தக தினங்களில் 17 நாள்கள் பங்குகளை அதிக அளவில் வாங்கியுள்ளனா். இந்த வகையில் ரூ.17,183 கோடிக்கு முதலீடு செய்து்ள்ளனா். அதே சமயம், உள்நாட்டு நிறுவன முலீட்டாளா்கள் ரூ.10, 741 கோடிக்கு விற்றுள்ளனா்.

எதிா்பாா்ப்பு: மொத்தத்தில் நிஃப்டிக்கு 11,300, 11,111 நிலையில் ஆதரவு உள்ளது. சந்தையில் திருத்தம் வந்தால் , முதலீட்டுத் தொகுப்புக்கு தரமான பங்குகளை வாங்குவதில் கவனம் செலுத்துவது நல்லது. நிஃப்டிக்கு 12,000 என்பது இடா்பாட்டு நிலையாகப் பாா்க்கப்படுகிறது. அதைக் கடக்கும் பட்சத்தில் வரலாற்று உச்சத்தைத் தொடும் என்று நிபுணா்கள் கருதுகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com