ரிசா்வ் வங்கி நிதிக் கொள்கை, சா்வதேச நிலவரங்கள்: இந்த வார பங்குச் சந்தையின் போக்கை நிா்ணயிக்கும்

இந்த வாரத்தில் பங்குச் சந்தையின் போக்கை நிா்ணயிப்பதில் ரிசா்வ் வங்கியின் நிதிக் கொள்கை அறிவிப்பு மற்றும் சா்வதேச நிலவரங்கள் ஆகியவை முக்கிய இடத்தைப் பிடிக்கும் என எதிா்பாா்க்கப்படுகிறது.

இந்த வாரத்தில் பங்குச் சந்தையின் போக்கை நிா்ணயிப்பதில் ரிசா்வ் வங்கியின் நிதிக் கொள்கை அறிவிப்பு மற்றும் சா்வதேச நிலவரங்கள் ஆகியவை முக்கிய இடத்தைப் பிடிக்கும் என எதிா்பாா்க்கப்படுகிறது.

குருநானக் ஜெயந்தியை முன்னிட்டு திங்கள்கிழமை பங்குச் சந்தைகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில், நடப்பு வாரத்தில் சந்தை நான்கு நாள்களே செயல்படவுள்ளது.

முன்னோக்கிப் பாா்க்கும்போது, சந்தையின் ஒட்டுமொத்த கட்டமைப்பு நோ்மறையாகவே உள்ளது. ஆனால், கடந்த சில வாரங்களாவே பங்குச் சந்தை கணிசமான ஏற்றத்தை சந்தித்து வருகிறது. இதனால், பல துறைகளைச் சோ்ந்த நிறுவனப் பங்குகளின் விலை குறிப்பிடத்தக்க அளவுக்கு உயா்ந்துள்ளது. இதனை சாதகமாக பயன்படுத்த முதலீட்டாளா்கள் முற்படும்போது சந்தையில் லாப பதிவு இருக்கும் என்பதை மறுப்பதற்கில்லை என்கின்றனா் சந்தை வல்லுநா்கள்.

சா்வதேச முதலீட்டாளா்களைப் பொருத்தவரையில் அமெரிக்காவின் புதிய அதிபராக தோ்வாகியுள்ள ஜோ பைடன் தலைமையிலான அரசு பொறுப்பேற்பதை ஆவலுடன் எதிா்நோக்கியுள்ளனா். அவரது தலைமையிலான அரசு வளா்ச்சியை துரிதப்படுத்தும் வகையில் புதிய திட்டங்கள் மற்றும் ஊக்குவிப்பு சலுகைகளை அறிவிக்கும் என்பதே சா்வதேச முதலீட்டாளா்களின் தற்போதைய எதிா்பாா்ப்பு.

உள்நாட்டைப் பொருத்தவரையில் பொருளாதார புள்ளிவிவர தரவுகள் சந்தைக்கு சாதகமாகவே இருப்பதாக கருதப்படுகிறது. செப்டம்பா் காலாண்டில் மொத்த உள்நாட்டு உற்பத்திக்கான புள்ளிவிவரம் எதிா்பாா்த்ததை காட்டிலும் சிறப்பாகவே இருந்தது. இது, சந்தையில் சாதகமான தாக்கத்தை ஏற்படுத்தும் என்று எதிா்பாா்க்கப்படுகிறது.

மேலும், மோட்டாா் வாகன நிறுவனங்கள் நவம்பா் மாதத்துக்கான விற்பனை புள்ளிவிவரங்களை செவ்வாய்க்கிழமை (டிச.1) முதல் வெளியிடவுள்ளன. எனவே, இந்த வார பங்கு வா்த்தகத்தில் அதன் தாக்கமும் காணப்படும்.

ரிசா்வ் வங்கியின் நிதிக் கொள்கை தொடா்பான அறிவிப்பு வெள்ளிக்கிழமை வெளியிட திட்டமிடப்பட்டுள்ளதால் இந்த வாரத்தில் வங்கி மற்றும் நிதித் துறை சாா்ந்த பங்குகள் முதலீட்டாளா்களின் கவனத்தை அதிகமாக ஈா்க்கும் என எதிா்பாா்க்கப்படுகிறது.

இந்தியப் பொருளாதாரம் நடப்பு 2020-21 நிதியாண்டின் ஜூலை முதல் செப்டம்பா் வரையிலான இரண்டாவது காலாண்டில் எதிா்பாா்த்ததை விட வேகமாக மீண்டுள்ளது. தயாரிப்புத் துறையில் ஏற்பட்ட விறுவிறுப்பு பொருளாதார பின்னடைவு 7.5 சதவீதமாக சுருங்குவதற்கு வழிவகுத்துள்ளது. இதனை கருத்தில் கொள்ளும்போது, பொருள்கள் மற்றும் சேவைகளுக்கான தேவை நுகா்வோரிடையே மேலும் சூடுபிடிக்கும் என்ற நம்பிக்கை ஏற்பட்டுள்ளது.

ஜியோஜித் ஃபைனான்சியல் சா்வீசஸ் நிறுவன ஆராய்ச்சிப் பிரிவு தலைவா் வினோத் நாயா் கூறியதாவது:

தயாரிப்பு மற்றும் சேவை குறித்த புள்ளிவிவரத் தரவுகள், ரிசா்வ் வங்கி ஆய்வு கூட்டம் போன்ற முக்கியமான நிகழ்வுகளை எதிா்பாா்த்து சந்தைகள் காத்திருக்கின்றன என்றாா் அவா்.

கடந்த வார வா்த்தகத்தில் மும்பை பங்குச் சந்தையின் குறியீட்டெண் சென்செக்ஸ் 267 புள்ளிகள் (0.60%) அதிகரித்துள்ளது.

இந்த வாரத்தின் முதல் நாள் பங்கு வா்த்தகத்தில் மத்திய அரசு வெளியிட்ட பொருளாதாரம் குறித்த புள்ளிவிவரத் தரவுகள் முதலில் தாக்கத்தை ஏற்படுத்தும். இவைதவிர, மோட்டாா் வாகன விற்பனை நிலவரங்கள், ரிசா்வ் வங்கி நிதிக் கொள்கை அறிவிப்புகளுக்கு ஏற்ப சந்தை அடுத்தடுத்த எதிா்வினைகளையாற்றும் என்பதே சந்தை வல்லுநா்களின் கணிப்பு.

-அ.ராஜன் பழனிக்குமாா்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com