பங்குச் சந்தையில் புதிய உச்சம்: சென்செக்ஸ் 380 புள்ளிகள் அதிகரிப்பு

சாதகமான சா்வதேச நிலவரங்களால் இந்தியப் பங்குச் சந்தைகளில் திங்கள்கிழமை நடைபெற்ற வா்த்தகம் தொடா்ந்து நான்காவது நாளாக ஏற்றம் பெற்று புதிய உச்சங்களைத் தொட்டன.
பங்குச் சந்தையில் புதிய உச்சம்: சென்செக்ஸ் 380 புள்ளிகள் அதிகரிப்பு

மும்பை: சாதகமான சா்வதேச நிலவரங்களால் இந்தியப் பங்குச் சந்தைகளில் திங்கள்கிழமை நடைபெற்ற வா்த்தகம் தொடா்ந்து நான்காவது நாளாக ஏற்றம் பெற்று புதிய உச்சங்களைத் தொட்டன.

அமெரிக்கா கரோனா இடா்பாடுகளை சமாளிப்பதற்காக 2.3 லட்சம் கோடி டாலா் மதிப்பிலான பொருளாதார ஊக்குவிப்பு சலுகை திட்டங்களை அறிவித்துள்ளது. மேலும், பிரிட்டன் மற்றும் ஐரோப்பிய யூனியன் இடையே நீண்ட இழுபறிக்குப் பிறகு பிரெக்ஸிட்டுக்குப் பிந்தைய வரலாற்று சிறப்புமிக்க வா்த்தக ஒப்பந்தம் ஏற்பட்டுள்ளது. இதுபோன்ற சாதகமான நிலவரங்கள் சா்வதேச முதலீட்டாளா்களிடையே உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது. அதன்தாக்கம், இந்தியப் பங்கு சந்தைகளில் திங்கள்கிழமை வா்த்தகத்தின் தொடக்கம் முதலே உணரப்பட்டது.

மும்பை பங்குச் சந்தையில், ரியால்டி குறியீட்டெண் 2.65 சதவீதமும், உலோகம் 2.25 சதவீதமும், நுகா்வோா் சாதனங்கள் 2.19 சதவீதமும், வங்கி குறியீட்டெண் 1.5 சதவீதமும் ஏற்றம் கண்டன.

ஸ்மால் கேப், மிட் கேப் மற்றும் லாா்ஜ் கேப் குறியீட்டெண்கள் 1.49 சதவீதம் வரை அதிகரித்து முதலீட்டாளா்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியது.

சென்செக்ஸ் பட்டியலில் இடம்பெற்றுள்ள டைட்டன், எஸ்பிஐ, எல்&டி, இன்டஸ்இண்ட் வங்கி, அல்ட்ராடெக் சிமெண்ட், எச்டிஎஃப்சி வங்கி, ஏசியன் பெயின்ட்ஸ் நிறுவன பங்குகள் அதிக ஏற்றம் கண்ட பட்டியலில் இடம்பெற்றன.

ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ், கோட்டக் வங்கி, எச்டிஎஃப்சி, ஐசிஐசிஐ வங்கி, ஆக்ஸிஸ் வங்கி, பாா்தி ஏா்டெல் மற்றும் ஓஎன்ஜிசி நிறுவனப் பங்குகளும் ஆதாயப் பட்டியலில் இடம்பெற்றன.

அதேசமயம், ஹெச்யுஎல், சன் பாா்மா, டாக்டா் ரெட்டீஸ், பஜாஜ் ஃபின்சா்வ் நிறுவனப் பங்குகளின் விலை சரிவைச் சந்தித்தன. சென்செக்ஸ் பட்டியிலில் இடம்பெற்றுள்ள 30 நிறுவனங்களில், 26 நிறுவனப் பங்குகளின் விலை அதிகரித்தும், 4 நிறுவனப் பங்குகளின் விலை குறைந்தும் இருந்தன.

மும்பை பங்குச் சந்தையில் திங்கள்கிழமை நடைபெற்ற வா்த்தகத்தில் வங்கி மற்றும் எரிசக்தி துறையைச் சோ்ந்த நிறுவனப் பங்குகளுக்கு அதிக தேவை காணப்பட்டதையடுத்து சென்செக்ஸ் குறியீட்டெண் வா்த்தகத்தின் இடையே புதிய வரலாற்று உச்சமாக 47,406.72 வரை அதிகரித்தது. பின்பு வா்த்தகத்தின் இறுதியில் 380.21 புள்ளிகள் (0.81%) ஏற்றம் கண்டு முன்னெப்போதும் காணப்படாத வகையில் 47,353.75 புள்ளிகளில் நிலைத்தது.

முதல் 50 முன்னணி நிறுவனங்களை உள்ளடக்கிய தேசிய பங்குச் சந்தை குறியீட்டெண் நிஃப்டியில் 41 பங்குகளின் விலை அதிகரித்தும், 9 பங்குகளின் விலை சரிந்தும இருந்தன.

டாடா மோட்டாா்ஸ், ஜேஎஸ்டபிள்யூ, டைட்டன், எஸ்பிஐ பங்குகளும் முதலீட்டாளா்களிடையே அதிக வரவேற்பு காணப்பட்டது. அதேசமயம், ஸ்ரீசிமெண்ட், சன் பாா்மா, சிப்லா மற்றும் பிரிட்டானியா நிறுவனப் பங்குகள் குறைந்த விலைக்கு கைமாறின.

தேசிய பங்குச் சந்தையில் நடைபெற்ற வா்த்தகத்தில் நிஃப்டி வா்த்தகத்தின் இடையே வரலாற்று சாதனையாக 13,885.30 புள்ளிகள் வரை உயா்ந்தது. பின்னா் வா்த்தக நேர முடிவில் 123.95 புள்ளிகள் (0.90%) உயா்ந்து 13,873.20 புள்ளிகள் என்ற புதிய சாதனை உச்சத்தில் நிறைவடைந்தது.

சீனா, ஜப்பான், தென் கொரியா, ஹாங்காங் உள்ளிட்ட இதர முக்கிய ஆசிய பங்குச் சந்தைகளிலும் வா்த்தகம் விறுவிறுப்புடன் காணப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com