கரோனா வைரஸ்... இந்தியப் பொருளாதாரத்துக்கு அச்சுறுத்தலா?

உலகை பயமுறுத்தி வரும் கரோனா வைரஸ் இந்தியப் பொருளாதாரத்துக்கும் அச்சுறுத்தலாக உருவெடுக்குமா என்பதே தற்போது பலரின் கேள்வியாக உள்ளது.
கரோனா வைரஸ்... இந்தியப் பொருளாதாரத்துக்கு அச்சுறுத்தலா?

உலகை பயமுறுத்தி வரும் கரோனா வைரஸ் இந்தியப் பொருளாதாரத்துக்கும் அச்சுறுத்தலாக உருவெடுக்குமா என்பதே தற்போது பலரின் கேள்வியாக உள்ளது.
 கரோனா வைரஸின் பிறப்பிடமான சீனாவுடன் இந்தியாவுக்கு மிக நெருங்கிய வர்த்தக தொடர்பிருப்பது அனைவரும் அறிந்ததே. இந்தியாவுக்கு அதிக மதிப்பிலான பொருள்களை ஏற்றுமதி செய்வதில் சீனா முதலிடத்தில் உள்ளது. அதனைத் தொடர்ந்தே அமெரிக்கா, பிரிட்டன் போன்ற நாடுகள் ஆகிய நாடுகள் உள்ளன. கடந்த 2018-ஆம் ஆண்டில் மட்டும் சீனா இந்தியாவுக்கு ஏற்றுமதி செய்த பொருள்களின் மதிப்பு மட்டும் 9,040 கோடி டாலர். இந்திய மதிப்பில் இது சுமார் ரூ.6.32 லட்சம் கோடி. இந்தியாவின் ஒட்டுமொத்த ஏற்றுமதியில் சீனா 14.63 சதவீத பங்களிப்பை வழங்கி வருகிறது.
 இந்தச் சூழ்நிலையில், அங்கு கரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டிருப்பது உலக நாடுகளில் தாக்கத்தை ஏற்படுத்தியிருந்தாலும், நெருங்கிய வர்த்தக நட்பு நாடான இந்தியாவில் அதன் தாக்கம் அதிகமாகவே இருக்கும் என்கின்றனர் சந்தை வல்லுநர்கள். குறிப்பாக, மருந்து, எலக்ட்ரானிக்ஸ், செல்லிடப்பேசி, மோட்டார் வாகனம் ஆகிய துறைகளில் பாதிப்பு அதிகம் இருக்கும் என்பது அவர்களின் கணிப்பு.
 கரோனா வைரஸ் வேகமாக பரவி வருவதன் காரணமாக சீனாவில் இயல்பு வாழ்க்கை முடங்கியுள்ளது. பல்வேறு தொழில் நிறுவனங்கள் மூடப்பட்டுள்ளன. இதனால், அங்கு செல்லிடப்பேசி, கணினி, வாகன உதிரிபாகங்கள் உள்ளிட்ட தொழில் நிறுவனங்களின் உற்பத்தி முடங்கியுள்ளது.
 செல்லிடப்பேசி தயாரிப்பில் ஈடுபட்டுள்ள ஓப்போ, விவோ போன்ற நிறுவனங்கள் தங்களது புதிய மாடல் ஸ்மார்ட்போன்களை பிப்ரவரியில் அறிமுகப்படுத்த திட்டமிட்டிருந்த நிலையில், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அதனை ஒத்திவைத்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. அதேபோன்று, மோட்டார் வாகன துறையைச் சேர்ந்த டொயோட்டாவும் அதன் சீன ஆலைகளில் உற்பத்தியை பிப்ரவரி 16 வரையில் தற்காலிகமாக நிறுத்தி வைப்பதாக தெரிவித்துள்ளது. சுஸுகியும் சீனாவுக்கு வெளியிலிருந்து மோட்டார் வாகன உதிரிபாகங்களை வாங்க திட்டமிட்டுள்ளதாக தெரிவித்துள்ளது.
 மற்றொரு ஜப்பானிய நிறுவனமான சுஸுகியை பொருத்தவரையில் இந்தியாவில் உள்ள ஆலைகளுக்காக சீனாவிலிருந்து மோட்டார் வாகன உதிரிபாகங்களை கொள்முதல் செய்து வருகிறது.
 இதுகுறித்து சுஸுகியின் நிர்வாக அதிகாரி மாசாகிகோ நகோ கூறுகையில்," சீனாவில் ஏற்பட்டுள்ள கரோனா வைரஸ் பாதிப்பால் நிறுவனத்தின் உலகளாவிய கார் உற்பத்தி இன்னும் பாதிக்கப்படவில்லை. இருப்பினும், சீனாவின் உதிரிபாக கொள்முதலில் திடீரென தடை ஏற்பட்டால் அதனை சமாளிக்கும் வாய்ப்புகளையும் ஆலோசித்து வருகிறோம். சீனாவை தவிர்த்து இதர பகுதிகளிலும் வாகன உதிரிபாகங்களை கொள்முதல் செய்ய ஆலோசித்து வருகிறோம்' என்றார்.
 இந்திய மருந்து துறை நிறுவனங்கள் 85% மூலப் பொருள்களை சீனாவிலிருந்தே இறக்குமதி செய்கின்றன. இந்த சூழ்நிலையில், சீனாவின் மருந்து மூலக்கூறுகளுக்கு தட்டுப்பாடு ஏற்படும்பட்சத்தில் அது இந்திய மருந்து துறையை கடுமையாக பாதிக்கும் என்கின்றனர் வல்லுநர்கள். இந்தியாவுக்கான சீன இறக்குமதியில் தொலைத்தொடர்பு சாதனங்கள், மின்னணு சாதனங்கள், கணினி வன்பொருள், ஆலைகளுக்கான இயந்திரங்கள், இயற்கை உரங்கள் ஆகிய 5 பொருள்களின் பங்களிப்பு 46 சதவீதம் அளவுக்கு உள்ளது.
 இந்த சூழ்நிலையில், சீனாவிலிருந்து இறக்குமதி தொடர்ந்து தடைபடும்பட்சத்தில் அது இந்திய தொழில்துறையை கணிசமாக பாதிக்கும் என்கின்றனர் பொருளாதார வல்லுநர்கள்.
 தற்போதைய நிலையில், கையிருப்பைக் கொண்டு நிலைமையை சமாளித்து வந்த போதிலும், கரோனா வைரஸ் பாதிப்பு நீடிக்குமானால் அது விநியோகச் சங்கிலி தொடரில் இடையூறை விளைவிக்கும். இருநாடுகளுக்கும் இடையேயான பயணத் தடை புதிய தயாரிப்புகளின் திட்டமிடல், மேம்பாடு ஆகியவற்றில் தாக்கத்தை ஏற்படுத்தி ஆலை சரியான முறையில் இயங்காத நிலைக்கு வழிவகுக்கும்.
 எனவே, கரோனா வைரஸ் இந்தியப் பொருளாதாரத்துக்கே அச்சுறுத்தலாக மாறுமா என்பது அப்பிரச்னைக்கு தீர்வு காணும் கால அளவை வைத்துத்தான் கூற முடியும் என்பதே நிதர்சனமான உண்மை.
 - அ. ராஜன் பழனிக்குமார்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com