அதிகரித்து வரும் எம்-சாண்ட் பயன்பாடு: அரசு குவாரிகளில் ஆற்று மணல் விற்பனையை முறைப்படுத்த கோரிக்கை

கட்டுமானப் பணிக்கான முக்கிய இடுபொருள்களில் ஒன்று மணல். இது ஆற்றிலிருந்து நேரடியாகவும் மறைமுகமாகவும் எடுத்து விற்பனை செய்யப்பட்டு வருகிறது. ஆங்காங்கே ஆற்றுப்படுகைகளில்
அதிகரித்து வரும் எம்-சாண்ட் பயன்பாடு: அரசு குவாரிகளில் ஆற்று மணல் விற்பனையை முறைப்படுத்த கோரிக்கை

கட்டுமானப் பணிக்கான முக்கிய இடுபொருள்களில் ஒன்று மணல். இது ஆற்றிலிருந்து நேரடியாகவும் மறைமுகமாகவும் எடுத்து விற்பனை செய்யப்பட்டு வருகிறது. ஆங்காங்கே ஆற்றுப்படுகைகளில், இரு சக்கர வாகனத்தில் மூட்டைகளாகக் கட்டி எடுத்துச் செல்வது முதல் டிராக்டர், லாரிகள் வைத்து அள்ளிச் செல்லும் மணல் திருட்டு நடந்துகொண்டுதான் இருக்கிறது.
இதனால், ஏற்படும் அசம்பாவிதங்களும் அதிகம். மணல் திருட்டால் இயற்கை வளம் பாதிக்கப்படுவது மட்டுமின்றி, ஆறுகளில் குளிக்கச் சென்று நீரில் மூழ்கி பலர் உயிரிழக்கும் சம்பவங்களும் அவ்வப்போது நடைபெற்று கொண்டு தான் இருக்கின்றன. 
கடந்த சில ஆண்டுகளுக்கு முன் தஞ்சாவூர், திருச்சி, கரூர், நாமக்கல், நாகப்பட்டினம் உள்ளிட்ட மாவட்டங்களில் 10-க்கும் மேற்பட்ட மணல் குவாரிகள் செயல்பட்ட நிலையில், மணல் தட்டுப்பாடு, திருட்டுப் போவதை தடுக்க, தமிழக அரசு குவாரிகளை 2 ஆண்டுகளுக்கு முன் முறைப்படுத்தியது. பொதுப்பணித்துறை கட்டுப்பாட்டின் கீழ் செயல்படும் குவாரிகளில், மணல் லாரி உரிமையாளர்கள் முன்பதிவு செய்து தங்களுக்குத் தேவையான மணலை அதற்கான கிடங்குகளில் இருந்து பெற்றுச் செல்லும் வகையிலான நடவடிக்கையை செய்தது.
அந்த வகையில், தற்போது நாமக்கல் மாவட்டம் ஆரியூர், புதுக்கோட்டை மாவட்டம் கோவில்வயல் மற்றும் முல்லையூர், வேலூர் மாவட்டம் வடுகந்தாங்கல், தஞ்சாவூர் மாவட்டம் நீரத்தநல்லுர் ஆகிய 5 இடங்களில் மட்டுமே அரசு மணல் குவாரிகள் செயல்பட்டு வருகிறது. மாநிலம் முழுவதும் 55 ஆயிரம் மணல் லாரிகள் உள்ளன. ஒவ்வொரு லாரி உரிமையாளரும் சம்பந்தப்பட்ட அரசு குவாரிகளில், வாரத்தில் வெள்ளிக்கிழமை அன்று பிற்பகல் 4 மணிக்கு தங்களுக்கு தேவைப்படும் யூனிட் மணலை இணையதளம் வழியாக முன்பதிவு செய்து கொள்ள வேண்டும்.
ஐந்து நிமிடம் மட்டுமே இதற்கான வாய்ப்பு வழங்கப்படும். அதனை தவறவிட்டால், அடுத்து ஒரு வாரம் காத்திருக்க வேண்டும். அவ்வாறு முன்பதிவு செய்திருந்தாலும், குறைந்தபட்சம் 3 யூனிட் மட்டுமே கிடைக்கும் என்ற குற்றச்சாட்டு உள்ளது. இவ்வாறான நடவடிக்கையால் மணல் தட்டுப்பாடு அதிகரித்து, செயற்கை மணலான எம்-சாண்ட் வாங்குவதை கட்டுமானம் மேற்கொள்வோர் விரும்புகின்றனர். காத்திருக்க தேவையில்லை, கேட்டவுடன் கிடைத்து விடுவதால், ஆற்று மணல் வாங்குவதை பலர் மறந்து விட்டனர் என்றே கூறலாம்.

எம்-சாண்ட் என்பது கல்குவாரிகளில் இருந்து எடுக்கப்படும் ஜல்லிகளை, அதற்கான கிரஷர் இயந்திரங்களில் போட்டு மணல் போல் பிரித்து எடுப்பதாகும். தமிழகத்தில், அரசால் அங்கீகரிக்கப்பட்ட வகையில் சுமார் 80 குவாரிகளும், மறைமுகமாக 250-க்கும் மேற்பட்ட குவாரிகளும் செயல்படுவதாக கூறப்படுகிறது. எம்-சாண்ட் மணல் பயன்படுத்துவது தொடர்பான விழிப்புணர்வை மக்களிடையே கொண்டு செல்ல வேண்டும் என்பதுதான் அரசின் எதிர்பார்ப்பு.
ஆனால், பல அரசுக் கட்டடங்கள், மக்கள் நலத்திட்டங்களுக்கானவற்றில், ஆற்று மணலையே ஒப்பந்ததாரர்கள் பயன்படுத்துகின்றனர். எம்-சாண்ட் மணலை பயன்படுத்தி எவ்வித கட்டுமானத்தையும் மேற்கொள்வதில்லை, ஒரு சில இடங்களில் மட்டும் பயன்படுத்தி கட்டுமானப் பணிகளை செய்து விட்டு, அரசு குவாரிகளில் கொள்முதல் செய்யும் மணலை வெளிச்சந்தையில் விற்பனை செய்வதாக புகார் கூறப்படுகிறது.

தமிழ்நாடு மணல் லாரி உரிமையாளர்கள் சம்மேளன தலைவர் செல்ல. ராசாமணி கூறியது: தமிழகத்தில் தற்போதைய நிலையில், 5 இடங்களில் மட்டுமே மணல் குவாரிகள் செயல்படுகிறது. தினசரி சுமார் 600 முதல் 700 லோடுகள் மணல் மட்டுமே கிடைக்கிறது. மணல் தட்டுப்பாட்டால் மாநிலம் முழுவதும் கட்டுமானப் பணிகள் முடங்கியுள்ளன. இந்த தொழிலை நம்பி 55 ஆயிரம் மணல் லாரிகள் உள்ளன. சரியான வேலைவாய்ப்பு கிடைக்காததால் அவை ஆங்காங்கே நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.
அண்மையில், அரசு மணல் குவாரிகள் இயக்க திட்ட இயக்குநர் அருண்தம்புராஜை நேரில் சந்தித்து மனு அளித்தோம். அப்போது, நாமக்கல் மாவட்டம் மோகனூர் அருகே ஆரியூர், வேலூர் மாவட்டம் வடுகந்தாங்கல் ஆகிய அரசு மணல் குவாரிகளில், இணையதளம் மூலம் மணல் லாரி உரிமையாளர்கள் முன்பதிவு செய்தால் வரிசைப்படி வழங்குவதில்லை. அரசு ஒப்பந்த வேலைகளுக்கு மட்டுமே முன்னுரிமை கொடுக்கப்படுகிறது.
அவ்வாறு மணல் எடுத்து செல்லும் ஒப்பந்ததாரர்களில் சிலர் அவற்றை வெளிச்சந்தையில் கூடுதல் விலைக்கு விற்பனை செய்வதாக தகவல் வருகிறது. ஒரு யூனிட் மணல் ரூ.1,330. லாரிகளை பொருத்து 6 சக்கர லாரியாக இருந்தால் 2 யூனிட், 10 சக்கரமாக இருந்தால் 3 யூனிட் மணல் லோடு ஏற்றப்படும். வாரத்தில் வெள்ளிக்கிழமை பிற்பகல் 4 மணிக்கு மட்டுமே முன்பதிவு செய்ய முடியும். அதை தவறவிட்டால், ஒரு வாரம் காத்திருக்க வேண்டும். அதேபோல் லாரி எண்ணை ஒரு முறை இணையத்தில் பதிவு செய்து லோடு எடுத்து விட்டால், அடுத்த லோடு எடுப்பதற்கு இரண்டு அல்லது மூன்று மாதங்கள் வரை காத்திருக்க வேண்டும்.
இதனால் பல மணல் லாரி உரிமையாளர்கள் நிதிநிறுவனங்களிடம் வாங்கிய கடனை திருப்பி செலுத்த முடியாமல் தவிக்கின்றனர். அரசு மணல் குவாரிகளில் இருந்து பொதுமக்கள் பயன்பாட்டுக்கு மணல் கொண்டு செல்லப்படுவது மிக மிக குறைவு. குறிப்பாக, மோகனூர் மணல் குவாரியில் இருந்து திருச்செங்கோடு, உதகமண்டலம், கோவை, எடப்பாடி, சேலம், தான்தோன்றிமலை, மேட்டுப்பாளையம், பவானி உள்ளிட்ட இடங்களுக்கு, அரசு ஒப்பந்த வேலைகளுக்காக அதிகளவில் மணல் எடுத்துச் செல்லப்படுகிறது. தினசரி அவர்களுக்கு 60 லோடுகள் என்றால் மணல் லாரி உரிமையாளர்களுக்கு 20 லோடு மட்டுமே வழங்கப்படுகிறது. எங்களுக்கு ஒரு வாரம் காலக்கெடு என்றால், அரசு ஒப்பந்தப் பணிகளுக்கு 24 மணி நேரமும் பதிவு செய்து கொள்ளும் வசதி உள்ளது.
அரசு ஒப்பந்த வேலைகளில், கட்டுமானப் பணிகளுக்கு எம்-சாண்ட் பயன்படுத்தியே கட்ட வேண்டும் என்ற விதிமுறை உள்ளது. ஆனால் அதை யாரும் பின்பற்றுவதில்லை. தமிழக முதல்வர் இது தொடர்பாக கண்டிப்பான உத்தரவை பிறப்பிக்க வேண்டும். எம்-சாண்ட் மூலம் அரசு கட்டடங்களை கட்டி மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். மணல் லாரி உரிமையாளர்களின் குறைகள், கோரிக்கைகளை அரசு நிறைவேற்ற வேண்டும். இல்லையெனில் உயர்நீதிமன்றத்தை நாடுவோம் என்றார்.

நாமக்கல் மணல் லாரி உரிமையாளர் ஆர்.எம்.பாலமுருகன் தெரிவித்தது: தற்போது செயல்படும் 5 குவாரிகளில், வேலூர் மாவட்டம் வடுகந்தாங்கல் குவாரிக்கு, பாலாற்றில் இருந்து மணல் எடுக்கப்படுகிறது. நாமக்கல் மாவட்டம் மோகனூர் ஆரியூர் குவாரிக்கு, காவிரி ஆற்றில் இருந்தும், புதுக்கோட்டை மாவட்டம் கோவில்வயல், முல்லையூர், தஞ்சாவூர் மாவட்டம் நீரத்தநல்லூர் குவாரிகளுக்கு, கொள்ளிடம் ஆற்றில் இருந்தும் மணல் எடுக்கப்படுகிறது. எம்-சாண்ட் பயன்பாடு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. ஆற்று மணல் தரத்துக்கு இணையானது என்று அதனை கூற முடியாது. கிரஷர் ஆலைகளில் ஜல்லியை துளாக்கி அதில் தண்ணீர் பீய்ச்சி அடித்து ஓர் கலவையாக அம்மணலை தயாரிக்கின்றனர். தற்போது ஒரு யூனிட் எம்-சாண்ட் மணல் ரூ. 2,100-க்கு விற்பனையாகிறது. ஆற்று மணலைப்போல் இணையதளத்தில் முன்பதிவு செய்து காத்திருக்க வேண்டிய தேவையில்லை. தொடர்பு கொண்டு தகவல் தெரிவித்தால் உடனடியாக கொண்டு வருகின்றனர்.
இதனால் மெல்ல மெல்ல ஆற்று மணல் தேவையை மக்கள் மறந்து வருகின்றனர். இந்த நிலை நீடித்தால் கட்டடங்களின் ஸ்திரத்தன்மைக்கு ஆபத்து வந்துவிடும். மணல் லாரி உரிமையாளர்களுக்கு முறையாக லோடுகள் வழங்கி வந்தால் வேலைவாய்ப்பு பாதிக்காது, மக்களிடமும் மணல் பயன்பாடு அதிகரிக்கும். அரசு ஒப்பந்ததாரர்களுக்கு, வேலை நடைபெறும் இடத்தின் உதவி பொறியாளர் தான் இணையத்தில் முன்பதிவு செய்து பெற்றுத் தருகிறார்கள் என்கின்றனர். ஆனால் 24 மணி நேரமும் முன்பதிவு நடைபெற்று வருகிறது. இதன்மூலம் அதிகளவில் முறைகேடு நடக்க வாய்ப்புள்ளது. தமிழக முதல்வர் இப்பிரச்னையில் தலையிட்டு அனைத்து தரப்பினரும் பயனடையும் வகையில் ஆற்று மணல் விற்பனையை முறைப்படுத்த வேண்டும் என்றார்.
இது தொடர்பாக மோகனூர் வட்டம் ஆரியூர் மணல் விற்பனை கிடங்கு பொதுப்பணித் துறை உதவி பொறியாளர் அருள்மணி கூறியது; மணல் இணைய முன்பதிவை பொருத்தமட்டில், சென்னையில் உள்ள அலுவலகத்தில் இருந்து தான் தினசரி பட்டியல் வெளியிடப்படும். அதனடிப்படையிலேயே உரியவர்களுக்கு மணல் ஒதுக்கீடு செய்யப்படுகிறது. வாரத்தில் ஒரு நாள் மட்டும் 5 நிமிடம் வழங்கப்படும் என்பது தவறானது. ஒரு மணி நேரம் ஒதுக்கப்படுகிறது. குறிப்பாக 5 ஆயிரம் யூனிட் மணல் மட்டுமே இருப்பில் உள்ளது என்றால், 5 நிமிடத்திற்குள்ளாக முன்பதிவாகி விடுகிறது. அதன்பின் பதிவு செய்தால் எவ்வாறு ஏற்கமுடியும். அதேபோல், அரசு ஒப்பந்தப்பணிகளுக்கு 100 யூனிட் மணல் கொடுத்தால், மணல் லாரி உரிமையாளர்களுக்கு 200 யூனிட் என்ற முறையில் அதிகமாகவே வழங்கப்பட்டு வருகிறது. தற்போது ஒரு யூனிட் மணல் ரூ.1,330க்கு வழங்கப்படுகிறது.
எத்தனை லாரி வைத்திருந்தாலும் முன்பதிவு செய்து விட்டால் அவற்றுக்கு தகுந்தாற்போல் மணல் வழங்கப்படுகிறது. இதுகுறிப்பிட்ட பகுதிக்குதான் வழங்கப்படும் என்றில்லை. தமிழகத்தில் எங்கிருந்து வேண்டுமானாலும் மணல் லாரி உரிமையாளர்கள் முன்பதிவு செய்து மணலை பெற முடியும். ஆரம்பத்தில் 10-க்கும் மேற்பட்ட மணல் குவாரிகள் இருந்த நிலையில், தற்போது 5 மட்டுமே செயல்பாட்டில் உள்ளது. விரைவில் மேலும் சில குவாரிகள் திறக்கப்பட இருக்கின்றன. தவறு நிகழாதவாறு சரியான முறையில்தான் பொதுப்பணித் துறை மூலம் ஆற்று மணல் விற்பனைக்கு அனுப்பப்பட்டு வருகிறது என்றார்.
- எம்.மாரியப்பன்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com