கரோனா வைரஸ் எதிரொலி: ரூ.900 கோடி தென்னை நார் ஏற்றுமதி வர்த்தகம் பாதிப்பு

கோவை மாவட்டம், பொள்ளாச்சியில் இருந்து சீனாவுக்கு 70 சதவீத தென்னை நார் ஏற்றுமதி செய்யப்படும் நிலையில் கரோனா வைரஸ் பாதிப்பால் ரூ.900 கோடி அளவிலான வர்த்தகம் பாதிக்கப்படும் நிலை உருவாகியுள்ளது.
கரோனா வைரஸ் எதிரொலி: ரூ.900 கோடி தென்னை நார் ஏற்றுமதி வர்த்தகம் பாதிப்பு

கோவை மாவட்டம், பொள்ளாச்சியில் இருந்து சீனாவுக்கு 70 சதவீத தென்னை நார் ஏற்றுமதி செய்யப்படும் நிலையில் கரோனா வைரஸ் பாதிப்பால் ரூ.900 கோடி அளவிலான வர்த்தகம் பாதிக்கப்படும் நிலை உருவாகியுள்ளது.

உலக அளவில் இந்தியா, இந்தோனேசியா, பிலிப்பின்ஸ், இலங்கை, மலேசியா உள்ளிட்ட 93 நாடுகளில் தென்னை சாகுபடி செய்யப்படுகிறது. உலக அளவில் இந்தியாவில் தென்னை சாகுபடி அதிகமாக உள்ளது. குறிப்பாக கர்நாடகம், கேரளம், தமிழகம், ஆந்திர மாநிலங்களில் தென்னை சாகுபடி அதிகம். 

இந்தியா முழுவதும் 18.95 லட்சம் ஹெக்டேர் தென்னை சாகுபடி பரப்பு உள்ளது. இதில் 16 ஆயிரத்து 940 மில்லியன் தேங்காய்கள் உற்பத்தி செய்யப்படுகின்றன.

தமிழகத்தில் 4.19 லட்சம் ஹெக்டேர் பரப்பில் தென்னை சாகுபடி செய்யப்படுகிறது. இதில் கோவை மாவட்டத்தில் 36 ஆயிரம் ஹெக்டேர் பரப்பில் தென்னை விவசாயம் உள்ளது. அதில் 80% பொள்ளாச்சி பகுதியில் உள்ளது.

பொள்ளாச்சியில் தென்னை சாகுபடி அதிகம் என்பதால் தென்னை சார்ந்த பொருள்கள் உற்பத்தி செய்யும் 750 ஆலைகள் உள்ளன. இந்தத் தொழிற்சாலைகளில் தென்னை நார், நார்கட்டி ஆகிய பொருள்களும், மெத்தை, கால்மிதி, விவசாயத்துக்குப் பயன்படும் தொட்டிகள், சுவாமி சிலைகள், பொம்மைகள் உள்ளிட்ட 14 வகையான மதிப்பு கூட்டப்பட்ட பொருள்களும் தயாரிக்கப்படுகின்றன. குறிப்பாக தென்னை நார், நார்கட்டிகள் தயாரிப்புதான் அதிகம். 

தென்னை நார் பொருள்கள் உற்பத்தியில் பிற மாநிலங்களை விட தமிழகம் முன்னிலையில் உள்ளது. குறிப்பாக பொள்ளாச்சியில் அதிகம். இந்தியாவில் இருந்து சீனா, அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகள், கொரியா உள்ளிட்ட 90-க்கும் மேற்பட்ட நாடுகளுக்கு தென்னைநார் மற்றும் மதிப்பு கூட்டப்பட்ட பொருள்கள் ஏற்றுமதி ஆகின்றன. குறிப்பாக பொள்ளாச்சியில் இருந்து ஏற்றுமதியாகும் தென்னைநாரில் 70 சதவீதத்துக்கு மேல் சீனாவுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது.

அதிகமான தென்னைநார் வாங்க காரணம்

இந்தியாவில் தென்னைநாரை வாங்கும் சீனா அதனை பொம்மைகள், நார்மரம், நார் ஆபரணங்கள் போன்ற பல மதிப்பு கூட்டப்பட்ட பொருள்களாகத் தயாரித்து பிற நாடுகளுக்கு ஏற்றுமதி செய்கிறது. 

இந்தியாவிடம் இருந்து தென்னை நாரை அதிகம் வாங்கும் நாடாக சீனா உள்ளது. இதனால், தென்னை நார் ஏற்றுமதியால் பொள்ளாச்சிக்கு குறிப்பிடத்தக்க அளவில் வருவாய் கிடைக்கிறது. 

இந்தியாவில் இருந்து ஆண்டுக்கு ரூ.2800 கோடிக்கு அளவுக்குத் தென்னை நார் பொருள்கள் ஏற்றுமதி செய்யப்படுகின்றன. பொள்ளாச்சியில் இருந்து மட்டும் ரூ.1400 கோடி அளவுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது.

பொள்ளாச்சியில் உள்ள தென்னை நார் தொழிற்சாலைகள் மூலம் நேரடியாகவும், மறைமுகமாகவும் சுமார் ஒரு லட்சம் பேர் வரை வேலைவாய்ப்பு பெறுகின்றனர். 

வர்த்தகம் பாதிப்பு

இந்நிலையில், கடந்த இரண்டு மாதங்களாக சீனாவில் கரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டுள்ளதால் பொள்ளாச்சியில் இருந்து சீனாவுக்குத் தென்னை நார் மற்றும் அதனைச் சார்ந்த பொருள்கள் ஏற்றுமதி பாதிப்படைந்துள்ளது. 

பொள்ளாச்சியில் செயல்படும் 750 தொழிற்சாலைகளில் தற்போது பெரும்பாலானவை தற்காலிகாமாக உற்பத்தியை நிறுத்திவிட்டன. சிலவற்றில் குறைந்த அளவில் உற்பத்தி நடைபெறுகிறது.

தற்போது, பொள்ளாச்சியில் இருந்து மட்டும் ரூ.900 கோடிக்கு அளவுக்கு ஏற்றுமதி பாதிக்கும் நிலை உருவாகியுள்ளது. கடந்த2 மாதங்களில் மட்டும் சுமார் ரூ.200 கோடிக்கு ஏற்றுமதி பாதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. பொதுவாக ஜனவரி முதல் ஜூன் வரைதான் சீனாவுக்கு அதிகமான ஏற்றுமதி நடைபெறும். தற்போது, கரோனா வைரஸ் பாதிப்பால் ஏற்றுமதி பாதிக்கப்பட்டுள்ளது.

தென்னை நார் ஏற்றுமதியில் பாதிப்பு ஏற்பட்டுள்ளதால் ஏற்றுமதியாளர்களுக்கு மத்திய அரசு உதவி வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.  ஏற்றுமதி பாதிக்கப்பட்டுள்ளதால் 6 மாத காலத்துக்கு வங்கிக் கடன் செலுத்துவதிலும், வட்டி செலுத்துவதிலும் சலுகை வழங்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.

""கரோனா வைரஸ் பாதிப்பால் சீனா தென்னை நார் இறக்குமதியை நிறுத்தியுள்ளது. இதைத் தொடர்ந்து, இங்கு பல தொழிற்சாலைகள் உற்பத்தியைக் குறைத்தும், நிறுத்தியும் உள்ளதால் பல ஆயிரம் பேர் வேலை இழக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. இந்தத் தொழிற்சாலைகள் வங்கிக் கடன்களுக்கு வட்டி செலுத்தும் காலத்தை மத்திய அரசு நீட்டித்து தர வேண்டும்'' என்கிறார் தென்னை நார் உற்பத்தியாளர் கௌதமன்.

நடவடிக்கை எடுப்பேன்

தமிழக சட்டப் பேரவை துணைத் தலைவர் பொள்ளாச்சி வி.ஜெயராமன் கூறியதாவது:

தென்னை நார் ஏற்றுமதி பாதிக்கப்பட்டுள்ளதால் உற்பத்தியாளர்களுக்கும் ஏற்றுமதியாளர்களுக்கும் வங்கிக் கடன் செலுத்துவதில் உள்ள சிரமம் குறித்து தமிழக முதல்வரின் கவனத்துக்கும் மத்திய அரசின் கவனத்துக்கும் கொண்டு சென்று நடவடிக்கை எடுப்பேன். 

பொள்ளாச்சி தென்னை நார் ஏற்றுமதிக்கான சிறப்பு பொருளாதார நகரமாக மாற்றக் கோரி மத்திய அரசுக்கு நான் பலமுறை கோரிக்கை வைத்திருந்தேன். தொடர்ந்து தென்னை நார் ஏற்றுமதியாளர்கள், உற்பத்தியாளர்களுக்கு ஏற்படும் தொழில் ரீதியான பிரச்னைகளை சரிசெய்ய நடவடிக்கை எடுப்பேன் என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com