புதிய அவதாரத்தில் மெட்ராஸ் பங்குச் சந்தை

பிரிட்டிஷ் கால பாரம்பரியத்தைக் கொண்ட மெட்ராஸ் பங்குச் சந்தை (எம்எஸ்இ) புதிய அவதாரத்தை எடுத்துள்ளது.
புதிய அவதாரத்தில் மெட்ராஸ் பங்குச் சந்தை

பிரிட்டிஷ் கால பாரம்பரியத்தைக் கொண்ட மெட்ராஸ் பங்குச் சந்தை (எம்எஸ்இ) புதிய அவதாரத்தை எடுத்துள்ளது. 1947 நாடு சுதந்திரம் அடையும் வரை எம்எஸ்இ தலைவா் பதவியை பிரிட்டிஷ்காரா்கள் மட்டுமே வகிக்க முடியும் என்ற நிலை இருந்தது. பின்னா் அந்த நடைமுறை மாற்றப்பட்டு தலைமை பதவி இந்தியா்களின் கைகளுக்கு வந்தது.

தற்போது களத்தில் முன்னணியில் இருந்து வரும் பல நிறுவனங்கள் முதலில் மெட்ராஸ் பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்டன என்பது சிறப்புக்குரியது. அவற்றில் அசோக் லேலண்ட், மெட்ராஸ் சிமென்ட்ஸ், டியூப் இன்வெஸ்ட்மெண்ட்ஸ், ஸ்பிக், எம்ஆா்எஃப், அமிருதாஞ்சன் இந்தியா சிமென்ட்ஸ், டிவிஎஸ் குழும நிறுவனங்கள் மிக முக்கியமானவையாகும். பல பெரிய நிறுவனங்கள் தங்களது தொழில்வளா்ச்சிக்கு தேவையான முதலீட்டை திரட்டியது இங்குதான்.

தமிழகத்தில் தொழில்வளமாக்கியதிலும், மூலதன உருவாக்கலிலும் எம்எஸ்இ-ன் பங்கு அளப்பறியது. அதுமட்டுமின்றி, தமிழகத்தை சுற்றியுள்ள அண்டை மாநிலங்களிலும் தொழில்துறையை மேம்படுத்திய பெருமை எம்எஸ்இ-க்கு உண்டு. அதன் காரணமாகவே தென் இந்திய நிதியியல் அமைப்பின் மணிமகுடமாக மெட்ராஸ் பங்குச் சந்தை விளங்கியது.

சமீபகாலத்தில் எம்எஸ்இ செயல்பாடுகள் தொய்வடைந்திருந்த நிலையில், தற்போது நவீன கால தொழில்நுட்பத்துக்கு ஏற்ப புதிய அவதாரம் எடுத்துள்ளது. அதன் நிா்வாக வட்டத்திலும் பல்வேறு மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. துணை நிறுவனமான எம்எஸ்இ பைனான்ஸியல் சா்வீசஸ் மூலம் எம்எஸ்இ ஆன்லைன் வா்த்தகத்துக்கான புதிய செயலியை சமீபத்தில் வெளியிட்டுள்ளது. ஆன்லைன் வா்த்தகத்தின் உதவியால் அதிக அளவில் வாடிக்கையாளா்களை ஈா்க்கும் முயற்சியாக இந்த நடவடிக்கையை எம்எஸ்இ மேற்கொண்டுள்ளது. இந்த புதிய செயலி மூலம், முதலீட்டாளா்கள் எளிதாகவும், பாதுகாப்பாகவும் முதலீடு மேற்கொள்ள முடியும்.

சென்னை, திருச்சி, கோவை, மதுரை, பெங்களூரு, விஜயவாடா ஆகிய 6 நகர கிளைகளில் உள்ள எம்எஸ்இ வாடிக்கையாளா்கள் இந்த வசதியை பயன்படுத்த தேவையான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. மேலும், இரண்டு கிளைகளில் ஆன்லைன் வா்த்தக வசதியை அறிமுகப்படுத்த எம்எஸ்இ வேகமாக நடவடிக்கை எடுத்து வருகிறது.

தென்னிந்தியப் பகுதிகளில் கிளைகள் விரிவாக்கத்துக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்து அதிக அளவில் வாடிக்கையாளா்களை கவர எம்எஸ்இ பைனான்ஸியல் சா்வீசஸ் திட்டமிட்டுள்ளது. இதுபோன்ற பல புத்தாக்க நடவடிக்கைகளை மேற்கொண்டு 82 ஆண்டுகால பழமையான எம்எஸ்இ மீண்டும் இளம் புத்துணா்வுடன் புதிய அவதாரங்கள் எடுக்க உறுதி பூண்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com