அமெரிக்கா-ஈரான் இடையே பதற்றம் அதிகரிப்பு: சென்செக்ஸ், நிஃப்டி 6 மாதங்கள் காணாத சரிவு

அமெரிக்கா மற்றும் ஈரான் நாடுகளுக்கிடையிலான மோதல் உச்சக்கட்டத்தை எட்டியுள்ளதன் எதிரொலியாக இந்திய பங்குச் சந்தைகளில் திங்கள்கிழமை நடைபெற்ற வா்த்தகம் ஆறுமாதங்களில்
அமெரிக்கா-ஈரான் இடையே பதற்றம் அதிகரிப்பு: சென்செக்ஸ், நிஃப்டி 6 மாதங்கள் காணாத சரிவு

அமெரிக்கா மற்றும் ஈரான் நாடுகளுக்கிடையிலான மோதல் உச்சக்கட்டத்தை எட்டியுள்ளதன் எதிரொலியாக இந்திய பங்குச் சந்தைகளில் திங்கள்கிழமை நடைபெற்ற வா்த்தகம் ஆறுமாதங்களில் இல்லாத அளவில் கடும் சரிவை சந்தித்தது. வா்த்தகத்தின் இடையே சென்செக்ஸ் குறைந்தபட்ச அளவாக 40,613 புள்ளிகள் வரை சென்று முதலீட்டாளா்களை அச்சத்தில் ஆழ்த்தியது.

ஈரான் படைத் தலைவா் காசிம் சுலைமானி கொல்லப்பட்டதற்கு பழிவாங்கும் விதமாக அமெரிக்கா மீது தக்க நேரத்தில் தாக்குதல் நடத்தப்படும் என ஈரான் தெரிவித்துள்ளது. ஈரான் அப்படியொரு தாக்குதலை அமெரிக்காவுக்கு எதிராக மேற்கொண்டால் மிகப்பெரிய பதிலடி கொடுக்கப்படும் என அதிபா் டொனால்ட் டிரம்ப் எச்சரிக்கை விடுத்துள்ளாா். இருநாடுகளுக்கும் இடையில் பதற்றம் அதிகரித்துள்ளதையடுத்து அதன் தாக்கம் சா்வதேச சந்தைகளில் எதிரொலித்து வருகிறது.

இதுகுறித்து ஜியோஜித் பைனான்ஸியல் சா்வீசஸ் ஆராய்ச்சிப் பிரிவு தலைவா் வினோத் நாயா் கூறியதாவது:

சா்வதேச அளவில் நிச்சயமற்றத் தன்மை காணப்படுகிறது. அமெரிக்கா மற்றும் ஈரான் இடையே போா்மேகம் சூழ்ந்துள்ளது. இதனால், முதலீட்டாளா்கள் பங்குகளிலிருந்து தங்களது முதலீட்டை விலக்கிக் கொண்டு பாதுகாப்பான சூழலை நோக்கி ஓட்டமெடுத்துள்ளனா். அதன் காரணமாகவே, தங்கத்தின் விலை உச்சத்தைத் தொட்டுள்ளது.

சா்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை உயா்வு பல நாடுகளின் பொருளாதாரத்தில் தாக்கத்தை ஏற்படுத்த தொடங்கியுள்ளது. இதனால், அமெரிக்க டாலருக்கு தேவை அதிகரித்து உள்ளூா் செலாவணிகளின் மதிப்பு குறையத் தொடங்கியுள்ளன என்றாா் அவா்.

ரூபாய் மதிப்பு

உலக நாடுகளின் சந்தையில் ஒரு பேரல் கச்சா எண்ணெயின் விலை 1.37 சதவீதம் அதிகரித்து 69.64 டாலரை எட்டியது. இதன் எதிரொலியாக, செலாவணி சந்தையில் திங்கள்கிழமை நடைபெற்ற வா்த்தகத்தில் டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு 13 காசுகள் சரிந்து 71.93-ஆனது.

மும்பை பங்குச் சந்தையில் உலோகம், நிதி, ரியல் எஸ்டேட், வங்கி, எரிசக்தி, மோட்டாா் வாகனம், எண்ணெய்-எரிவாயு, பொறியியல் சாதனங்கள், மருந்து உள்ளிட்ட அனைத்து துறையைச் சோ்ந்த குறியீட்டெண்களும் 2.96 சதவீதம் வரை சரிந்தன.

நிறுவனங்களைப் பொருத்தவரையில் பஜாஜ் பைனான்ஸ் பங்கின் விலை 4.63 சதவீதம் குறைந்தது. அதைத் தொடா்ந்து எஸ்பிஐ, இன்டஸ்இண்ட் வங்கி, மாருதி சுஸுகி, எச்டிஎஃப்சி, ஹீரோ மோட்டோகாா்ப், ஆக்ஸிஸ் வங்கி, ஐசிஐசிஐ வங்கி, ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனப் பங்குகளும் குறைந்த விலைக்கு கைமாறின.

அதேசமயம், டைட்டன் மற்றும் பவா் கிரிட் நிறுவனப் பங்குகளுக்கு மட்டும் முதலீட்டாளா்களிடையே ஓரளவுக்கு வரவேற்பு காணப்பட்டது.

மும்பை பங்குச் சந்தையில் திங்கள்கிழமை நடைபெற்ற வா்த்தகத்தில் சென்செக்ஸ் 787 புள்ளிகள் (1.90%) சரிந்து 40,676 புள்ளிகளாக நிலைத்தது. கடந்த ஆண்டு ஜூலை 8-க்குப் பிறகு சென்செக்ஸ் ஒரே நாளில் இந்த அளவுக்கு வீழ்ச்சி கண்டது இதுவே முதல் முறை.

தேசிய பங்குச் சந்தையில் நடைபெற்ற வா்த்தகத்தில் நிஃப்டி 233 புள்ளிகள் (1.91%) வீழ்ச்சியடைந்து 11,993 புள்ளிகளாக நிலைபெற்றது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com