மூலப்பொருள் கிடைக்காமல் தவிக்கும் ஓ.இ. மில்கள்

நூற்பாலைகளில் இருந்து வெளியேற்றப்படும் கழிவுப் பஞ்சை மூலப்பொருளாகக் கொண்டு 2ஆம் நம்பர் கவுண்ட் முதல் 30ஆம் நம்பர் கவுண்ட் வரை நூல் உற்பத்தி செய்யும்
மூலப்பொருள் கிடைக்காமல் தவிக்கும் ஓ.இ. மில்கள்

நூற்பாலைகளில் இருந்து வெளியேற்றப்படும் கழிவுப் பஞ்சை மூலப்பொருளாகக் கொண்டு 2ஆம் நம்பர் கவுண்ட் முதல் 30ஆம் நம்பர் கவுண்ட் வரை நூல் உற்பத்தி செய்யும் 450க்கும் மேற்பட்ட ஓ.இ.மில்கள் (ஓபன் எண்ட் ஸ்பின்னிங் மில்) தமிழகத்தில் கோவை, வெள்ளக்கோவில், பல்லடம், சோமனூர், உடுமலை, அன்னூர், அவிநாசி, ராஜபாளையம் உள்ளிட்ட பகுதிகளில் இயங்கி வருகின்றன.
 இந்த மில்கள் மூலமாக நாள்தோறும் ரூ.15 கோடி மதிப்புள்ள 14 லட்சம் கிலோ கிரே மற்றும் கலர் நூல்கள் உற்பத்தி செய்யப்படுகின்றன. இதன் மூலம் நேரடியாக 75 ஆயிரம் தொழிலாளர்களும், மறைமுகமாக 2 லட்சம் பேரும் வேலைவாய்ப்பு பெற்று வருகின்றனர்.
 இந்த மில்களில் உற்பத்தி செய்யப்படும் நூல்கள் 5 லட்சத்துக்கும் மேற்பட்ட விசைத்தறிக் கூடங்களில் காடா துணி உற்பத்தி செய்ய பயன்படுத்தப்படுகின்றன. மேலும், நாடு முழுவதும் உள்ள விசைத்தறிகளில் கலர் நூல்களைக் கொண்டு மக்கள் அதிகம் பயன்படுத்தும் ஜீன்ஸ் பேன்ட், பெட்ஷீட், லுங்கி, துண்டுகள், தலையணை உறை, மெத்தை விரிப்புகள் உள்ளிட்ட பல்வேறு துணி ரகங்கள் தயாரிக்கப்படுகின்றன.
 தற்போது, தேவையான மூலப்பொருளான கழிவுப் பஞ்சு விலை உயர்வு மற்றும் பற்றாக்குறையால் கிரே நூல்கள் உற்பத்தி செய்யும் 175 ஓ.இ.மில்கள் பாதிப்படைந்துள்ளன.
 இதுகுறித்து தமிழ்நாடு ஓபன் எண்ட் ஸ்பின்னிங் மில் சங்க பொதுச்செயலாளர் அருள்மொழி கூறியதாவது:
 உலக மக்களுக்கு சவாலாக விளங்கும் பிளாஸ்டிக் கழிவுப் பொருள்களால் சுற்றுச்சூழல் மாசு ஏற்படுகிறது. பிளாஸ்டிக் பொருள்களை உபயோகப்படுத்தி பழக்கமாகிவிட்டதால் அதனைக் கைவிட முடியாத நிலையும் உருவாகியுள்ளது. பிளாஸ்டிக் கழிவுப் பொருள்களை மறுசுழற்சி செய்து நூலாக உருமாற்றம் செய்யும் தொழிலாக ஓ.இ.மில்கள் விளங்கி வருகின்றன. இதன் மூலம் பிளாஸ்டிக் கழிவுகளை உருமாற்றம் செய்து பயன்படுத்துவதோடு மண்ணை மாசுபடுத்தாமல் ஓ.இ.மில்கள் செயல்பட்டு வருகின்றன. பழையத் துணிகளை மறுசுழற்சி செய்து அன்றாட தேவைக்குப் பயன்படும் மிதியடி, தரைவிரிப்பு, தலையணை, தரை துடைப்பான் போன்ற பொருள்கள் தயாரிக்கவும் ஓ.இ.மில்கள் நூல்களைத் தயாரித்து தருகின்றன.
 இந்தியா முழுவதும் 5 கோடி நூல் கதிர்கள் திறன் கொண்ட ஓ.இ. மில்கள் கழிவுப் பஞ்சை நூலாக்கி பல்லடம், அவிநாசி, மங்கலம், சோமனூர், கரூர் பகுதி விசைத்தறிக் கூடங்களுக்கு காடா துணி உற்பத்திக்கான மூலப்பொருளை வழங்கி வருகின்றன.
 மறுசுழற்சி முறையில் நூல்களை உற்பத்தி செய்த ஓ.இ.மில்கள் கடந்த 6 மாதங்களாக மிகப்பெரிய சவாலை சந்தித்து வருகின்றன. முதன்மையான மூலப்பொருளான கோம்பர் கழிவுப் பஞ்சு அதிக அளவில் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது. இதனால் உள்நாட்டில் பற்றாக்குறையும், தட்டுப்பாடும் ஏற்பட்டுள்ளது.
 உள்நாட்டில் பஞ்சு விலைக்கு நிகராக கழிவுப் பஞ்சு விற்பனையாகிறது. கடந்த ஆகஸ்ட் மாதம் ஒரு கிலோ பஞ்சு ரூ.126க்கு விற்பனையானபோது, கோம்பர் கழிவுப் பஞ்சு ரூ. 77க்கு விற்பனையானது. அதன் பின்னர் புதிய அறுவடைப் பஞ்சு வரத்து அதிகரித்த பின்னர் பஞ்சு விலை கிலோ ரூ.109க்கு விற்பனையானது.
 ஆனால், டிசம்பர் மாதம் கோம்பர் கழிவுப் பஞ்சு ஒரு கிலோ ரூ. 86க்கு விற்றது. பஞ்சு விலை ஒரு கிலோவுக்கு ரூ. 17 விலை குறைந்தும் கூட கோம்பர் கழிவுப் பஞ்சு ரூ. 9 அதிகரித்தது.
 மூலப்பொருள் விலையேற்றப்படி நூல்களை விலையேற்றி விற்பனை செய்ய முடியாத நிலை இருந்து வருகிறது. தமிழகத்தில் 450க்கு மேல் ஓ.இ.மில்கள் 50 சதவீதம் கலர் நூல்களையும், 50 சதவீதம் கிரே காடா நூல்களையும் உற்பத்தி செய்து வருகின்றன.
 அதில் 40 வகையான கலர் நூல்கள் உற்பத்தி செய்யப்படுகின்றன. இவை பெட் பாட்டில்கள், வெட்டப்படும் துண்டுத் துணிகளை மூலப்பொருளாக கொண்டு பாலியஸ்டர் நூல் உற்பத்தி செய்யப்படுகிறது. நூற்பாலை மில் கழிவுப் பஞ்சுகளைக் கொண்டு காடா துணி உற்பத்திக்குத் தேவையான கிரே காடா நூல் உற்பத்தி செய்யப்படுகிறது.
 மூலப்பொருள் தட்டுப்பாடு காரணமாக கிரே காடா உற்பத்தி 30 சதவீதம் குறைந்துள்ளது. மேலும், பெரும்பாலான மில்கள் கடந்த 6 மாதங்களில் கலர் நூல் உற்பத்திக்காக வங்கதேசம், வியத்நாம் ஆகிய நாடுகளில் இருந்து துண்டுத் துணிகளை இறக்குமதி செய்து வருகின்றன. இதன் மூலம் துணி உற்பத்திக்குத் தேவையான மூலப்பொருள் இறக்குமதி செய்யும் நிலை ஏற்பட்டுள்ளது.
 இதே நிலை நீடித்தால் விசைத்தறி ஜவுளி உற்பத்தி தொழில் பாதிப்படையும். 5 லட்சம் தறிகளுக்கு நூல் கிடைக்காத நிலை ஏற்படும். லட்சக்கணக்கானோர் வேலையிழக்கும் அபாயம் ஏற்படும். விசைத்தறி ஜவுளித் தொழில், ஓ.இ.மில் தொழில் ஆகியவற்றைப் பாதுகாக்க மூலப்பொருள் சீரான விலையில் ஆண்டு முழுவதும் கிடைக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
 கோம்பர் கழிவுப் பஞ்சு ஏற்றுமதிக்கு வரி விதிக்க வேண்டும். உள்நாட்டுத் தேவையைப் பூர்த்தி செய்ய வேண்டும். அபரிமிதமான கழிவுப் பஞ்சு விலை உயர்வு ஒருபுறமும், மறுபுறம் நூலுக்கு தகுந்த விலை கிடைக்காத நிலையும் உள்ளது. உலகம் முழுவதும் ஜவுளி உற்பத்திப் பொருள்களை வாங்கும் முன்னணி நிறுவனங்கள் மறுசுழற்சி முறையில் உற்பத்தி செய்யப்பட்ட நூல்கள் மூலம் தயாராகும் ஜவுளிப் பொருள்களைக் கொள்முதல் செய்ய ஆர்வம் காட்டுகின்றன.
 ஏனெனில் இந்திய ஜவுளிப் பொருள்கள் உற்பத்தி தொழிலில் கோடிக்கணக்கான லிட்டர் தண்ணீர் விரயம் ஆவதும், சாயம் மற்றும் ரசாயன பொருள்கள் பயன்படுத்துவதும் தவிர்க்கப்படுகிறது.
 இத்தகைய சிறப்புக்குரிய ஓ.இ.மில்களுக்குத் தேவையான மூலப்பொருளான கோம்பர் கழிவுப் பஞ்சை சீரான விலையில் கிடைக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். தற்போது, கழிவுப் பஞ்சு ஒரு கிலோ ரூ. 85 என்ற விலையில் ஏற்றுமதியாகிறது.
 அதுவே ஜவுளி மதிப்புக்கூட்டுப் பொருளாக ஏற்றுமதி செய்தால் 5 மடங்கு அந்நிய செலாவணி நமது நாட்டுக்கு கிடைக்கும். எங்களுக்குத் தேவையான மூலப்பொருளான கோம்பர் கழிவுப் பஞ்சை ஏற்றுமதி செய்யாமல் உள்நாட்டில் தட்டுப்பாடு இன்றி சீரான விலையில் கிடைக்க மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.
 - அ. குணசேகரன்
 
 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com