ரூ.1,400 கோடி நிலுவைத் தொகை: காத்திருக்கும் திருப்பூர் பின்னலாடை ஏற்றுமதியாளர்கள்

திருப்பூர் பின்னலாடை ஏற்றுமதியாளர்கள் 1,100 பேருக்கு ஜிஎஸ்டி, டிராபேக் மற்றும் சலுகைகள் ஆகியவற்றின் மூலம் வழங்க வேண்டிய ரூ.1,400 கோடியை மத்திய அரசு எப்போது வழங்கும் என
ரூ.1,400 கோடி நிலுவைத் தொகை: காத்திருக்கும் திருப்பூர் பின்னலாடை ஏற்றுமதியாளர்கள்

திருப்பூர் பின்னலாடை ஏற்றுமதியாளர்கள் 1,100 பேருக்கு ஜிஎஸ்டி, டிராபேக் மற்றும் சலுகைகள் ஆகியவற்றின் மூலம் வழங்க வேண்டிய ரூ.1,400 கோடியை மத்திய அரசு எப்போது வழங்கும் என பின்னலாடை ஏற்றுமதியாளர்கள் காத்திருக்கின்றனர்.
திருப்பூரின் பின்னலாடைத் தொழிலை நம்பி நேரடியாக 3 லட்சம் பேர், மறைமுகமாக 5 லட்சம் பேர் என மொத்தம் 8 லட்சம் தொழிலாளர்கள் பணியாற்றி வருகின்றனர். இதில் பின்னலாடை மற்றும் அதனைச் சார்ந்த டையிங், பிரிண்டிங், எம்பிராய்டரி, காம்பேக்டிக், ஸ்டிச்சிங் துணைத் தொழில்களில் ஐயாயிரத்துக்கும் மேற்பட்ட சிறிய, பெரிய நிறுவனங்களும் உள்ளன. 
பின்னலாடை ஏற்றுமதியிலும், உள்நாட்டு விற்பனையிலும் ஆண்டுக்கு ரூ. 50 ஆயிரம் கோடிக்கும் மேல் வர்த்தகம் நடைபெற்று வருகிறது. மேலும் நாட்டின் ஒட்டுமொத்த வர்த்தகத்தில் பின்னலாடைத் தொழில் மிகவும் முக்கியமான இடத்தைப் பிடித்துள்ளது. 
இந்த நிலையில் கடந்த சில மாதங்களாக ஜிஎஸ்டி வரியை திரும்பப் பெறுவதில் தாமதம், நூல் விலை உயர்வு, மத்திய அரசின் மானியங்கள் கிடைப்பதில் சிக்கல் போன்ற பல்வேறு பிரச்னைகளால் திருப்பூர் பின்னலாடைத் தொழில் கடுமையான நெருக்கடியைச் சந்தித்து வருகிறது.
திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் 1,100 பேருக்கு மத்திய அரசு ஜிஎஸ்டி, டிராபேக், ஆர்ஓஎஸ்எல் (மாநில அரசுகள் திருப்பி செலுத்தும் வரியினங்கள்), எம்இஐஎஸ் (ஏற்றுமதியை ஊக்கப்படுத்த வழங்கப்படும் சலுகை), இயந்திரங்கள் வாங்கியதற்கான சலுகை என மொத்தம் ரூ. 1,400 கோடியை மத்திய அரசு நிறுத்திவைத்துள்ளது. 
இதில், அபாயகரமான ஏற்றுமதியாளர்கள் (Risky Exporters) என்று வகைப்படுத்தப்பட்ட திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் 227 பேர் கடும் நெருக்கடியைச் சந்தித்து வருகின்றனர். இவர்களுக்கு கடந்த 6 மாதங்களாக மத்திய அரசால் வழங்கப்பட வேண்டிய ரூ. 230 கோடி நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
அபாயகரமான ஏற்றுமதியாளர்களை வகைப்படுத்தும் முறை: 
மத்திய சுங்கத் துறையில் ஏற்றுமதி செய்யப்படும் பின்னலாடைகளை அதிகாரிகள் ஆய்வு செய்கிறார்கள். அப்போது பின்னலாடைகளை அதிக விலைக்கு ஏற்றுமதி செய்வதைத் தடுக்கும் நோக்கத்துடன் சந்தேகம் ஏற்படும் நிறுவனங்களில் தணிக்கை மேற்கொள்ளப்படுகிறது. உதாரணமாக ரூ. 30-க்கு வாங்கப்படும் ஆடையை ரூ.300 என விலையை உயர்த்தி ஏற்றுமதி செய்வது தவறாகும்.
இந்தத் தணிக்கையில் 100 சதவீதம் ஆவணங்கள் சரியாக இருக்க வேண்டும். இல்லாவிட்டால் தணிக்கைக் குழு அறிக்கையின்படி அவர்களை "அபாயகரமான ஏற்றுமதியாளர்கள்' என வகைப்படுத்தி அவர்களுக்கு வழங்க வேண்டிய அனைத்துச் சலுகைகளையும் மத்திய அரசு நிறுத்தி வைக்கிறது. இதன் காரணமாக திருப்பூரில் சுமார் 500-க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் மூடப்பட்டுள்ளன. இதனால் பின்னலாடைத் தொழிலை நம்பியுள்ள ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் வேலையிழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. 
அதேவேளையில் ஏற்றுமதியாளர்கள் பணம் திரும்பவராத காரணத்தால் வங்கிகளில் வாங்கிய கடனுக்காக சொத்துகளை இழக்கும் நிலையும் ஏற்பட்டுள்ளது.
பிரதமரின் கவனம்: கடந்த சில நாள்களாக பிரதமர் நரேந்திர மோடி திருப்பூரின் பின்னலாடைத் தொழில் பிரச்னை குறித்து கவனம் செலுத்தி வருகிறார். தமிழக தொழில் துறையினர், பிரதமர் மோடியை அவரது இல்லத்தில் கடந்த டிசம்பர் 26ஆம் தேதி சந்தித்தனர். 
இந்தக் குழுவில் இடம்பெற்றிருந்த திருப்பூர் ஏற்றுமதியாளர் சங்கத் தலைவர் ராஜா எம்.சண்முகம், திருப்பூர் பின்னலாடைத் தொழிலில் உள்ள பிரச்னைகள் குறித்து பிரதமரிடம் விரிவாகத் தெரிவித்திருந்தார்.
அதைத் தொடர்ந்து டிசம்பர் 29ஆம் தேதி "மனதின் குரல்' என்ற வானொலி நிகழ்ச்சி மூலமாக திருப்பூர் பின்னலாடை நிறுவனத்தில் பணியாற்றி வரும் காஷ்மீர் மாநிலத்தைச் சேர்ந்த பர்வீன் பாத்திமாவுடன் பிரதமர் மோடி உரையாடினார்.
பிரதமர் மோடியின் வேண்டுகோளின்படி ஜவுளித் துறையின் அனைத்து கோரிக்கைகளும் அடங்கிய கருத்துரு தயாரிக்கப்பட்டுள்ளது. இதில் திருப்பூர் பின்னலாடைத் தொழிலில் தற்போது நிலவி வரும் பிரச்னைகளும் இடம்பெற்றுள்ளன. எனவே, திருப்பூர் ஏற்றுமதியாளர்களுக்கு மத்திய அரசு வழங்க வேண்டிய ரூ.1,400 கோடி நிலுவைத் தொகையை விரைவில் விடுவிக்கும் வாய்ப்பு உள்ளதாக ஏற்றுதியாளர் சங்க நிர்வாகிகள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர். 
இதுகுறித்து திருப்பூர் ஏற்றுமதியாளர் சங்கத்தின் பொதுச்செயலாளர் டி.ஆர்.விஜயகுமார் கூறியதாவது: "ரிஸ்கி எக்ஸ்போர்ட்டர்ஸ்' என்று வகைப்படுத்தப்பட்டதில் 90 சதவீத ஆவணங்கள் சரியாக இருந்தால் அவர்களை அந்தப் பட்டியலில் இருந்து விடுவிக்க வேண்டும் என்று மத்திய நிதி அமைச்சகத்திடம் வலியுறுத்தியுள்ளோம். 
ஏற்றுமதியாளர்களுக்கு வழங்கப்படும் ஆர்ஓஎஸ்எல், எம்ஐஇஎஸ், சலுகைகளுக்கு டிசம்பர் மாதத்துடன் காலக்கெடு முடிவடைந்துள்ளது. ஆகவே இந்தச் சலுகைகளை இலவச வர்த்தக ஒப்பந்தம் வரும் வரையில் வேறு பெயரில் தொடர வேண்டும் என்று பிரதமருக்கு அனுப்பப்படும் கருத்துருவில் தெரிவித்துள்ளோம். 
மேலும் பின்னலாடை வாரியம், தொழிலாளர் குடியிருப்பு, ஐரோப்பா, அமெரிக்காவுடன் இலவச வர்த்தக ஒப்பந்தத்தையும் வலியுறுத்தியுள்ளோம். இதன்மூலம் ஜவுளி ஏற்றுமதியாளர்கள் செலுத்தும் 10 சதவீத சுங்கவரி குறையும். தற்போது, வியத்நாம், வங்கதேசம், இலங்கை போன்ற நாடுகளுக்குதான் இந்தச் சலுகை உள்ளது. எனவே இந்த ஒப்பந்தத்தின் மூலம் மற்ற நாடுகளுடனும் போட்டியிட முடியும். 
பருத்தி விலையை மத்திய அரசு அதிகமாக நிர்ணயித்துள்ளது. வெளி மார்க்கெட் அளவுக்கு பருத்தியை நூற்பாலைகளுக்கு விற்பனை செய்ய மத்திய அரசு விலை நிர்ணயிக்க வேண்டும். விலை நிர்ணயத்துக்கு முன்னதாக மற்ற நாடுகளுடன் ஒப்பிட வேண்டும் என்றார். 
இதுகுறித்து ஏஇபிசி (ஆயத்த ஆடை ஏற்றுமதி மேம்பாட்டுக் கழகம்) அமைப்பின் புதிய தலைவர் ஆ.சக்திவேல் கூறியதாவது:
ஏஇபிசி தலைவராக 4 ஆவது முறையாக கடந்த திங்கள்கிழமை தில்லியில் பொறுப்பேற்றுக் கொண்டேன். இதைத் தொடர்ந்து மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், ஜவுளித் துறை அமைச்சர் ஸ்மிருதி இரானி, ஜவுளித் துறை செயலாளர் ரவி கபூர், டிஜிஎஃப்டி பொது இயக்குநர் அமித் யாதவ் ஆகியோரைச் சந்தித்து திருப்பூர் தொழில் துறையினரின் பிரச்னைகள் குறித்துப் பேசினேன். 
இதில், ரிஸ்கி எக்ஸ்போர்ட்டர்ஸுக்கு வழங்க வேண்டிய நிலுவைத் தொகை, ஏற்றுமதியாளர்களுக்கு வழங்க வேண்டிய ஆர்ஓஎஸ்எல், எம்இஐஎஸ் சலுகைகளை உடனடியாக வழங்கும்படி கோரிக்கை விடுத்துள்ளேன். விரைவில் திருப்பூர் தொழில் துறையினரின் பிரச்னைகள் தீர்க்கப்படும் என்று நம்பிக்கை தெரிவித்தார்.


- ஆர். தர்மலிங்கம்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com