மேக் இன் இந்தியா திட்டத்துக்கு உத்வேகம் எதிர்பார்ப்பில் தொழில்துறை

"மேக் இன் இந்தியா' எனப்படும் இந்தியாவில் தயாரிப்போம்' திட்டம் கடந்த 2014-ஆம் ஆண்டு செப்டம்பர் 25-ஆம் தேதி பிரதமர் மோடி அவர்களால் தொடக்கி வைக்கப்பட்டது.
மேக் இன் இந்தியா திட்டத்துக்கு உத்வேகம் எதிர்பார்ப்பில் தொழில்துறை

"மேக் இன் இந்தியா' எனப்படும் இந்தியாவில் தயாரிப்போம்' திட்டம் கடந்த 2014-ஆம் ஆண்டு செப்டம்பர் 25-ஆம் தேதி பிரதமர் மோடி அவர்களால் தொடக்கி வைக்கப்பட்டது. நிறுவனங்கள் தங்களது தயாரிப்புகளை இந்தியாவில் உற்பத்தி செய்வதை ஊக்குவிப்பதே இந்த திட்டத்தின் முக்கிய நோக்கம்.

மிகவும் எதிர்பார்ப்புடன் தொடங்கப்பட்ட இந்த திட்டத்தின் மூலமாக, 2014 செப்டம்பர் 2016 பிப்ரவரிக்கு இடைப்பட்ட காலத்தில் மட்டும் இந்தியா ரூ.16.40 லட்சம் கோடி முதலீட்டுக்கான உத்தரவாதத்தைப் பெற்றது. அதனால், கடந்த 2015-இல் அமெரிக்கா, சீனா நாடுகளை விஞ்சி 60.1 பில்லியன் டாலர் அந்நிய நேரடி முதலீட்டை ஈர்த்து உலக அளவில் இந்தியா முதலிடத்தைப் பிடித்தது.

மேக் இன் இந்தியா திட்டத்தின் கொள்கை, அனைத்து துறைகளிலும் 100 சதவீத அந்நிய நேரடி முதலீட்டை மேற்கொள்வதற்கு அனுமதியளிப்பதாக உள்ளது. இருப்பினும், விண்வெளித் துறையில் 74 சதவீதம், பாதுகாப்பு துறையில் 49 சதவீதம், இந்திய ஊடகத் துறையில் 26 சதவீதம் மட்டுமே அந்நிய நேரடி முதலீட்டை மேற்கொள்ள முடியும் என்ற வரம்பு உள்ளது. இது, பாதுகாப்பு கருதி மத்திய அரசு எடுத்த முன்னெச்சரிக்கை முடிவு.

மத்திய அரசின் மேக் இன் இந்தியா திட்டத்தைப் பின்பற்றி, குஜராத், தமிழகம், ஹரியாணா, மகாராஷ்டிரம் போன்ற மாநிலங்களும் முதலீடுகளை ஈர்க்க சுயமாக மாநாடுகளை நடத்தி அதில் வெற்றியும் பெற்றன.

பொருளாதார சுணக்க நிலையால் மேக் இன் இந்தியா திட்டத்துக்கு அண்மைக் காலமாகவே வரவேற்பு குறைந்து வருவதை சந்தை வல்லுநர்கள் சுட்டிக் காட்டினர். மேலும், மத்திய அரசு கொள்கை திட்டங்களை செயல்படுத்துவதில் முனைப்பு காட்டாமல், அரசியல் ரீதியில் கவனம் செலுத்தி வருவதால் உள்நாட்டு தொழில்துறையில் முதலீடுகளும் குறைந்து வருவதாக அவர்கள் குற்றம் சாட்டினர்.

இதுபோன்ற குற்றச்சாட்டுகளுக்கு தீர்வு காணும் விதத்தில், வரும் பட்ஜெட்டை சாதகமாக பயன்படுத்திக் கொள்ள மத்திய அரசு ஆயத்தமாகி வருகிறது. அதன் ஒரு பகுதியாக, இறக்குமதி செய்யப்படும் பல்வேறு பொருள்களுக்கு சுங்க வரியை உயர்த்துவதன் மூலமாக மேக் இன் இந்தியா திட்டத்துக்கு மீண்டும் வரவேற்பை ஏற்படுத்தும் முயற்சியில் மத்திய அரசு களமிறங்கும் என தெரிகிறது.

அத்தியாவசியமான பல பொருள்கள் இறக்குமதி செய்யப்படுவதால் உள்நாட்டில் அப்பொருள்களின் உற்பத்தியில் ஈடுபட்டு வரும் நிறுவனங்கள் பாதிக்கப்படுகின்றன.

இதனை கவனத்தில் கொண்ட மத்திய வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சகம், இறக்குமதி செய்யப்படும் 300 பொருள்களுக்கு வரும் பட்ஜெட்டில் சுங்க வரியை உயர்த்த வேண்டும் என நிதி அமைச்சகத்திடம் பரிந்துரைத்துள்ளது.

ஆசியான் நாடுகளுடன் தாராள வர்த்தக ஒப்பந்தத்தை இந்தியா ஏற்படுத்திக் கொண்டுள்ளது. அதன் காரணமாக, ஏராளமான இறக்குமதிகள் அந்த நாடுகளிலிருந்துதான் மேற்கொள்ளப்படுகின்றன. சீனா இதுபோன்ற நாடுகளுக்கு தங்களது பொருள்களை ஏற்றுமதி செய்து பின்னர் ஆசியான் நாடுகளிலிருந்து இறக்குமதி என்ற பெயரில் இந்தியாவில் மலிவான விலையில் பொருள்களை குவிக்கிறதா என்ற சந்தேகமும் மத்திய அரசுக்கு உள்ளது.

தடையற்ற வர்த்தக ஒப்பந்தத்தின் மூலம் ஆசியான் நாடுகளிலிருந்து மலிவான விலையில் பொருள்கள் இறக்குமதி செய்யப்படுவது உள்நாட்டு தொழில்துறையை பாதிப்படையச் செய்கிறது.

உதாரணமாக, மலிவு விலை காலணிகளின் இறக்குமதி கணிசமாக அதிகரித்து வருவது உள்நாட்டில் இத்தொழில் ஈடுபட்டு வரும் நிறுவனங்களை பாதிப்புக்குள்ளாக்குகிறது. எனவே, உள்நாட்டு தொழிலை பாதுகாக்கவும், முதலீட்டை அதிகரிக்கவும் அவற்றின் இறக்குமதி வரியை வரும் பட்ஜெட்டில் தற்போதைய 25 சதவீதத்திலிருந்து 35 சதவீதமாக அதிகரிக்க வேண்டும் என நிதி அமைச்சகத்திடம் வர்த்தக அமைச்சகம் பரிந்துரைத்துள்ளது.

அதேபோன்று, இறக்குமதியாகும் டயர்களுக்கான சுங்க வரியையும் தற்போதைய 10-15 சதவீதத்திலிருந்து 40 சதவீதமாக அதிகரிக்க பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

இவைதவிர, இறக்குமதி செய்யப்படும் மர பர்னிச்சர் பொருள்களுக்கான சுங்க வரியை 20 சதவீதத்திலிருந்து 30 சதவீதமாகவும், காகித வகைகளுக்கான வரியை இரண்டு மடங்காக அதிகரிக்கவும், உலோகம், குழந்தைகளுக்கான பிளாஸ்டிக் விளையாட்டு பொருள்கள் ஆகியவற்றுக்கான சுங்க வரியை தற்போதைய 20 சதவீதத்திலிருந்து 100 சதவீதமாக அதிகரிக்கவும் ஆலோசனைகள் வழங்கப்பட்டுள்ளன.

மத்திய வர்த்தக அமைச்சகத்தின் இதுபோன்ற பரிந்துரைகளை பட்ஜெட்டில் ஏற்று நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் செயலாக்கத்துக்கு கொண்டு வரும் நிலையில், அது மேக் இன் இந்தியா திட்டத்துக்கு புதிய பொலிவை தருவதுடன், முதலீட்டு நடவடிக்கையிலும் உத்வேகம் ஏற்படும் என்கின்றனர் பொருளாதார நிபுணர்கள்.

இந்தியாவிடம் உள்ள அபரிமிதமான தொழில்முனைவுத் திறன் உரிய முறையில் பயன்படுத்தப்பட்டால் நாம் வேலை தேடுவோராக இல்லாமல் வேலைதரும் நாடாக மாற முடியும் என்ற பிரதமரின் கனவை நனவாக்கிடும் வகையில் பட்ஜெட் அமையுமா என்பதே அனைவரின் எதிர்பார்ப்பு.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com