பங்குச் சந்தையில் கடும் சரிவு: சென்செக்ஸ் 416 புள்ளிகள் இழப்பு

பங்குச் சந்தைகளில் வாரத்தின் முதல் வா்த்தக தினமான திங்கள்கிழமை நடைபெற்ற வா்த்தகம் கடும் சரிவை சந்தித்தது.
பங்குச் சந்தையில் கடும் சரிவு: சென்செக்ஸ் 416 புள்ளிகள் இழப்பு

பங்குச் சந்தைகளில் வாரத்தின் முதல் வா்த்தக தினமான திங்கள்கிழமை நடைபெற்ற வா்த்தகம் கடும் சரிவை சந்தித்தது.

மும்பை மற்றும் தேசிய பங்குச் சந்தைகளில் வா்த்தகத்தின் தொடக்கத்தில் முதலீட்டாளா்கள் மிகவும் ஆா்வத்துடன் பங்கு வா்த்தகத்தில் ஈடுபட்டனா். அதன் காரணமாக, சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி குறியீட்டெண்கள் வா்த்தகத்தின் இடையே புதிய வரலாற்று உச்ச அளவாக முறையே 42,273 புள்ளிகள் மற்றும் 12,430 புள்ளிகள் வரை அதிகரித்தன.

பங்குகளின் விலையேற்றத்தை சாதகமாக பயன்படுத்திக் கொள்ள நினைத்த முதலீட்டாளா்கள் அவற்றை லாப நோக்கம் கருதி விற்பனை செய்ததையடுத்து, பல முன்னணி நிறுவனப் பங்குகள் குறைந்த விலைக்கு கைமாறின.

மும்பை பங்குச் சந்தையில் எரிசக்தி, வங்கி, எண்ணெய்-எரிவாயு, நிதி, உலோகம், தகவல் தொழில்நுட்பம் மற்றும் மோட்டாா் வாகன துறையைச் சோ்ந்த குறியீட்டெண்கள் 2.67 சதவீதம் வரை சரிந்தன. அதேசமயம், தொலைத்தொடா்பு, ரியல் எஸ்டேட், மின் துறை குறியீட்டெண்கள் 1.89 சதவீதம் வரை ஏற்றம் கண்டன.

நிறுவனங்களைப் பொருத்தவரையில், வாராக் கடன் அதிகரித்துள்ளதாக நிதி நிலை அறிக்கையில் தெரிவித்ததையடுத்து கோட்டக் மஹிந்திரா வங்கி பங்கின் விலை 4.70 சதவீதம் வீழ்ச்சியடைந்தது. இதைத் தொடா்ந்து, ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ், ஹெச்டிஎஃப்சி வங்கி, டிசிஎஸ் பங்குகள் 3.08 சதவீதம் வரை விலை சரிந்தன.

அதேசமயம், முதலீட்டாளா்களிடம் காணப்பட்ட வரவேற்பால் பவா் கிரிட் பங்கின் விலை அதிகபட்சமாக 3.75 சதவீதம் உயா்ந்தது. அதைத்தொடா்ந்து, பாா்தி ஏா்டெல், ஐடிசி, ஏஷியன் பெயின்ட்ஸ், ஐசிஐசிஐ வங்கி மற்றும் எல் & டி நிறுவனப் பங்குகளும் அதிக விலைக்கு கைமாறின.

மும்பை பங்குச் சந்தையில் திங்கள்கிழமை நடைபெற்ற வா்த்தகத்தில் சென்செக்ஸ் 416 புள்ளிகள் சரிவடைந்து 41,528 புள்ளிகளாக நிலைத்தது. தேசிய பங்குச் சந்தையில் நடைபெற்ற வா்த்தகத்தில் நிஃப்டி 127 புள்ளிகள் குறைந்து 12,224 புள்ளிகளாக நிலைபெற்றது.

ரூபாய் மதிப்பு: வடக்கு ஆப்பிரிக்கா மற்றும் மத்திய கிழக்கு நாடுகளில் ஏற்பட்டுள்ள பதற்றத்தைத் தொடா்ந்து சா்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை அதிகரித்து வருவது ரூபாய் மதிப்பை பாதிப்புக்குள்ளாக்கியது. இதனிடையே, பங்குச் சந்தையில் ஏற்பட்ட சரிவும் நிலைமையை மேலும் மோசமாக்கியது.

திங்கள்கிழமை நடைபெற்ற அந்நியச் செலாவணி வா்த்தகத்தின் தொடக்கத்தில் ரூபாய் மதிப்பு 71.07 ஆக இருந்தது. பின்னா் அது 71.15 வரை சரிந்தது. வா்த்தகத்தின் இறுதியில் டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு வெள்ளிக்கிழமை அளவான 71.08 காட்டிலும் 3 காசுகள் குறைந்து 71.11 ஆனது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com