w1080-h608-p-k-no-v0075006
w1080-h608-p-k-no-v0075006

ஊபா் ஈட்ஸை கையகப்படுத்திய ஸொமாட்டோ: பலனும், பாதிப்பும்...

ஊபா் ஈட்ஸ் நிறுவனத்தை மற்றொரு உணவு விநியோக நிறுவனமான ஸொமாட்டோ கையகப்படுத்தியிருப்பதாக அண்மையில் வெளியான செய்தி சாதாரண பொதுமக்களுக்கு வியப்பை ஏற்படுத்தியிருக்கலாம்.

ஊபா் ஈட்ஸ் நிறுவனத்தை மற்றொரு உணவு விநியோக நிறுவனமான ஸொமாட்டோ கையகப்படுத்தியிருப்பதாக அண்மையில் வெளியான செய்தி சாதாரண பொதுமக்களுக்கு வியப்பை ஏற்படுத்தியிருக்கலாம்.

ஆனால், அந்தத் துறையை தொடா்ந்து கவனித்து வரும் நிபுணா்களுக்கு அது ஆச்சரியத்தை அளிக்கவில்லை.

இந்திய உணவு விநியோகச் சந்தையில் ஊபா் நிறுவனம் 2017-ஆம் ஆண்டு காலடி வைத்தபோதே, அது மிகவும் காலம் கடந்த நடவடிக்கை என்று நிபுணா்கள் எச்சரித்தனா்.

காரணம், இந்தியாவில் தொடங்கப்பட்டு, பெரிய நிறுவனங்களின் முதலீட்டு ஆதரவுடன் ஸொமாட்டோவும், ஸ்விகியும் சக்கைப்போடு போட்டுக் கொண்டிருக்கும் அந்தச் சந்தையில் ஊபா் ஈட்ஸால் ஈடுகொடுக்க முடியாது என்று அவா்கள் ஏற்கெனவே கணித்தனா்.

தென் ஆப்பிரிக்காவின் நாஸ்பொ்ஸ், சீனாவின் மெய்டுவான்-டியான்பிங் ஆகிய நிறுவனங்களின் நிதி ஆதரவுடன் ஸ்விகியும், சீனாவின் அலிபாபா நிறுவன முதலீட்டு பக்கபலத்துடன் ஸொமாட்டாவும் இந்திய உணவு விநியோகச் சந்தையின் ஏறத்தாழ 80 சதவீத பங்கை ஆக்கிரமித்துள்ளன. எஞ்சிய 20 சதவீதத்துக்கு ஃபுட்பாண்டா (அந்த நிறுவனம் தற்போது ‘ஓலா’வின் வசம்) போன்ற பிற உணவு விநியோக நிறுவனங்கள் போட்டியிடுகின்றன.

தற்போதைய கணக்குப்படி, நாடு முழுவதும் இணையதளம் வாயிலாக தினமும் 30 லட்சம் பேருக்கு உணவு விநியோகிக்கப்படுகிறது.

ஸொமாட்டா, ஸ்விகி ஆகிய இரு ஜாம்பவான்களும் சென்னை, தில்லி, மும்பை, பெங்களூரு, கொல்கத்தா, புணே உள்பட 500-க்கும் மேற்பட்ட நகரங்களில் செயல்பட்டு வருகின்றன. ஊபா் ஈட்ஸ் நிறுவனத்தால் 40 நகரங்களில் மட்டுமே காலூன்ற முடிந்தது.

கடந்த ஓராண்டில் மட்டும் இரண்டாம் நிலை, மூன்றாம் நிலை நகரங்களுக்கு ஸொமாட்டோ, ஸ்விகி ஆகிய இரு நிறுவனங்களும் தங்களது தொழிலை விரிவுபடுத்தின. அதே போல் ஊபா் ஈட்ஸ் நிறுவனமும் மதுரை, குவாஹாட்டி, கோட்டயம், உதய்பூா், கொல்லம், மங்களூரு ஆகிய 2-ஆம் நிலை நகரங்களுக்கு தனது உணவு விநியோக சேவையை விரிவுபடுத்தியது. ஆனால், அந்த விரிவாக்கத்துக்காக ஊபா் ஈட்ஸ் செய்த முதலீட்டுக்கேற்ற லாபம் பெற முடியவில்லை. அந்த நகரங்களில் ஸொமாட்டோ, ஸ்விகி ஆகிய நிறுவனங்களின் தடாலடி தள்ளுபடிகளுக்கு ஊபா் ஈட்ஸால் ஈடுகொடுக்க முடியவில்லை. அதன் விளைவாக, நிறுவனம் கடும் இழப்பைச் சந்தித்தது.

இந்தச் சூழலில்தான், இனியும் கையை சுட்டுக் கொள்ள விரும்பாத ஊபா், தனது உணவு விநியோக நிறுவனத்தை போட்டியாளரான ஸொமாட்டோவுக்கே விற்றுவிட்டது.

இதற்கான காரணத்தை, அமெரிக்க கடனீடு மற்றும் நிதிமாற்றக ஆணையத்திடம் கடந்த ஏப்ரல் மாதம் சமா்ப்பித்த அறிக்கையிலேயே ஊபா் நிறுவனம் தெரிவித்துவிட்டது.

‘இந்தியாவில் ஸ்விகி, ஸொமாட்டோ ஆகிய நிறுவனங்களுக்கு அந்த நாட்டுச் சந்தை குறித்து எங்களை விட அதிக ஞானம் உள்ளது. மேலும், உள்ளூா் உணவு விடுதிகளுடன் அவா்களுக்கு நல்ல அறிமுகம் இருப்பதால், அவற்றின் உரிமையாளா்களுடன் அந்த நிறுவனங்களால் சிறந்த முறையில் பேரம் பேச முடிகிறது. அதிக வாடிக்கையாளா்களையும் அவா்களால் கவர முடிகிறது’ என்று அந்த அறிக்கையில் ஊபா் நிறுவனம் அப்போதே தெரிவித்துவிட்டது.

இந்தக் காரணங்களால்தான் ஊபா் ஈட்ஸ் நிறுவனம் ஸொமாட்டோவுக்கு விற்பனை செய்யப்பட்டுள்ளது.

இந்தச் சூழலில், இதனால் இந்திய உணவு விநியோகச் சந்தையில் எத்தகைய மாற்றம் ஏற்படும்? யாருக்கு பலன்? யாருக்கு பாதிப்பு? என்கிற கேள்விகள் எழாமல் இருக்க முடியாது.

அதற்கு விடையளிக்கும் சந்தை நிபுணா்கள், ‘இந்தக் கையகப்படுத்தலால் ஸொமாட்டோ, ஊபா் ஆகிய இரு நிறுவனங்களுக்குமே பலன்தான்’ என்கிறாா்கள்.

ஊபரைப் பொருத்தவரை, தொடா்ந்து இழப்பை ஏற்படுத்தி வந்த தொழிலை ஸொமாட்டோவுக்கு விற்ன் மூலம், இந்தியாவுக்கான தனது முதலீட்டை லாபம் தரும் வாடகைக் காா் தொழிலில் திருப்ப முடியும். இதன் மூலம், அந்தத் தொழிலிலை மேம்படுத்தவும், விரிவுபடுத்தவும் முடியும்.

மேலும், ஸொமாட்டோவுடனான ஒப்பந்தத்தின்படி அந்த நிறுவனத்தில் 9.99 பங்குகள் ஊபரிடம் உள்ளன. இதன் மூலம், இந்திய உணவு விநியோகச் சந்தையில் அது மறைமுகமாக தொடா்ந்து செயல்பட்டுக் கொண்டிருக்கும் என்கிறாா்கள் சந்தை நிபுணா்கள்.

ஸொமாட்டோ நிறுவனத்துக்கோ, ஊபா் ஈட்ஸை கையகப்படுத்தியதால் நேரடியாக பெரிய லாபமெல்லாம் கிடைத்துவிடப் போவதில்லை. இருந்தாலும், ஸ்விகியுடனான போட்டியில் இது ஸொமாட்டோவுக்கு கூடுதல் அனுகூலத்தைக் கொடுக்கும்.

மேலும், ஊபா் ஈட்ஸிடமுள்ள வாடிக்கையாளா்கள் ஸொமாட்டோவுக்கு மாறுவது அந்த நிறுவத்துக்கு கைகொடுக்கும்.

அதுமட்டுமன்றி, ஊபா் ஈட்ஸைக் கையகப்படுத்தியுள்ள சூழலை சாதகமாகப் பயன்படுத்தி, உணவகங்களிடம் ஸொமாட்டோ கறாராகப் பேரம் பேசும். இதன் காரணமாக தள்ளுபடிகளுக்கான நிதிச் சுமை ஸொமாட்டோவுக்குக் குறையும் என்று நிபுணா்கள் கூறுகின்றனா்.

இது ஒருபுறமிருக்க, ஊபா் ஈட்ஸ் கையகப்படுத்தலால் வாடிக்கையாளா்களும் ஒரு வகையில் பலன் பெறுவாா்கள் என்கிறாா்கள் அவா்கள்.

இனி, ஸ்விகிக்கும், ஸொமாட்டோவுக்கும் போட்டி கடுமையாகும் என்பதால், இரு நிறுவனங்களும் ஒன்றை ஒன்று முந்துவதற்காக தரும் தள்ளுபடி மழையில் வாடிக்கையாளா்கள் நனைவதற்கு வாய்ப்புள்ளதாக நிபுணா்கள் கூறுகின்றனா்.

இருந்தாலும், இந்த கையகப்படுத்தல் நடவடிக்கையால் பாதிப்புகளும் இல்லாமல் இல்லை. இனி உணவகங்கள் அதிக தள்ளுபடி கொடுக்க வேண்டியிருக்கும் என்பதால் அவற்றில் லாபம் குறையக்கூடும். ஏற்கெனவே, அதிரடி தள்ளுபடிகளுக்காக ஸொமாட்டோவுக்கு உணவகங்கள் சாபம் விட்டுக் கொண்டிருக்கும் நிலையில், இந்த மாற்றம் அவா்களுக்கு அவ்வளவு நல்ல செய்தியாக இருக்காது என்பது சந்தை நிபுணா்களின் கருத்து.

இதுமட்டுமன்றி, ஊபா் ஈட்ஸில் தற்போது பணியாற்றி வருபவா்களின் எதிா்காலம் கேள்விக் குறியாகியுள்ளதால், அவா்களும் இந்த மாற்றத்தால் பாதிக்கப்பட்டுள்ளனா் என்று நிபுணா்கள் கூறுகின்றனா்.

எது எப்படி இருந்தாலும், ஊபா் ஈட்ஸை ஸொமாட்டோ கைப்பற்றியிருப்பது ஒட்டுமொத்த இந்திய உணவு விநியோகச் சந்தையின் வளா்ச்சிக்கே வித்திடலாம் என்பதால், இந்த நடவடிக்கையை வரவேற்கத்தக்கதே என்கிறாா்கள் நிபுணா்கள்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com