கரோனா பொது முடக்கம் எதிரொலி: மூலப்பொருள்கள் விலையேற்றத்தால் கட்டுமானத் தொழில் பாதிப்பு

கரோனா பொது முடக்கத்தால் கட்டுமானப் பணிக்கான மூலப்பொருள்களின் விலை பெருமளவில் உயர்ந்துள்ளது. இதனால் கட்டடப் பணிகளைத் தொடர முடியாமல் பலர் தவித்து வருகின்றனர். 
கரோனா பொது முடக்கம் எதிரொலி: மூலப்பொருள்கள் விலையேற்றத்தால் கட்டுமானத் தொழில் பாதிப்பு



கரோனா பொது முடக்கத்தால் கட்டுமானப் பணிக்கான மூலப்பொருள்களின் விலை பெருமளவில் உயர்ந்துள்ளது. இதனால் கட்டடப் பணிகளைத் தொடர முடியாமல் பலர் தவித்து வருகின்றனர். 

உலக நாடுகளை அச்சுறுத்தி வரும் கரோனா தீநுண்மித் தொற்று, கடந்த மார்ச் மாதம் இந்தியாவிலும் பரவ ஆரம்பித்தது. இந்த நோய்த் தொற்றை தடுப்பதற்காக மார்ச் 25 முதல் பொது முடக்கம் அமல்படுத்தப்பட்டது. தற்போது வரை 5 கட்டங்களாக பொது முடக்கம் நீட்டிக்கப்பட்டுள்ளது. இதனால் தொழில் நிறுவனங்களும், அவற்றை நம்பியுள்ள தொழிலாளர்களும் வேலையிழந்து, வருவாயிழந்து தவிக்கும் நிலை உள்ளது.

அவற்றில் கட்டுமானத் தொழிலும் ஒன்று. இத்தொழிலுக்குச் சென்றால் தினமும் ரூ. 500 முதல் ரூ. 1000 வரை கூலி கிடைக்கும் என்பதால் ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் ஆர்வமுடன் வேலைக்குச் சென்றனர். இந்த பொது முடக்கத்தால் 2 மாதங்களுக்கும் மேலாக பணிகள் முடங்கின. ஜூன் மாதத்திலிருந்துதான் ஓரளவு பணிகள் நடைபெற்று வருகின்றன.  

இதற்கு முன் பணிகளை விரைந்து முடிப்பதற்காக ஒப்பந்ததாரர்களும், பொறியாளர்களும் பிற மாநிலத் தொழிலாளர்களைக் கொண்டு கட்டடப் பணிகளை செய்து வந்தனர். கரோனா நோய்த்தொற்று காரணமாக பல தொழிலாளர்கள் தங்களுடைய  சொந்த மாநிலங்களுக்குச் சென்று விட்டனர். அவர்கள் காலை 8 மணிக்குத் தொடங்கினால் இரவு 8 மணி வரை தொடர்ச்சியாக பணி செய்வது வழக்கம். அவர்களைப் பொருத்த வரை ஊதியத்தில் நெருக்கடியும் இருக்காது. இதனால் பல கட்டடங்கள் விரைவாக வளர்ந்தன.

ஆனால் கரோனா தொற்று காரணமாக, ஒவ்வொரு மாவட்டத்திலிருந்தும் சராசரியாக 5,000 முதல் 8,000 தொழிலாளர்கள் தங்களுடைய சொந்த மாநிலங்களுக்குச் சென்று விட்டனர். நாமக்கல் மாவட்டத்தில் இருந்து சுமார் 6,900 பேர் சென்றுள்ளனர். அவர்கள் மீண்டும் வேலைக்கு திரும்பிவர பல மாதங்களாகலாம். 

பொது முடக்கத்தால் தொழிலாளர் பாதிப்பு ஒருபுறம் என்றால், சிமென்ட், ஜல்லி, மணல், எம்-சாண்ட், இரும்புக் கம்பி உள்ளிட்டவற்றின் மூலப்பொருள்களின் விலையும் உயர்ந்துள்ளது.

அரசு கட்டுமானப் பணிகளும், செலவினத்தைத் தாங்கும் சக்தி கொண்டவர்களின் கட்டடப் பணிகளும் மட்டுமே தடையின்றி தொடர்கின்றன. நடுத்தர மக்கள், ஏழைகள் தற்போதைய நிலையில் வீடு கட்டுவது எட்டாக்கனியாக மாறியுள்ளது. ரூ. 15 லட்சம் மதிப்பீட்டில் கணக்கிட்டு வங்கிக் கடன், அடமானக் கடன் உள்ளிட்டவற்றைக் கொண்டு வீடு கட்டும் பணியைத் தொடங்கியவர்கள், பொது முடக்கத்துக்கு பின்னர் மூலப்பொருள்களின் திடீர் விலையேற்றத்தால் மேலும் ரூ. 5 லட்சம் கடன் வாங்கும் சூழலுக்கு ஆளாகியுள்ளனர்.

இதுகுறித்து நாமக்கல் கட்டுமானப் பொறியாளர் சங்கத்தின் துணைத் தலைவர் சௌந்தரராஜன் கூறியதாவது:
கரோனா தீநுண்மித் தொற்றுப் பரவலால் ஏற்பட்ட பொது முடக்கம் கட்டுமானத் தொழிலை கடுமையாக பாதிப்படையச் செய்துள்ளது. குறிப்பாக சிமென்ட் ஒரு மூட்டைக்கு ரூ. 150 வரை உயர்ந்துள்ளது. மணல் குவாரிகள் இயங்காத நிலையில் மணல் தட்டுப்பாட்டைப் போக்க எம்-சாண்ட் அறிமுகப்படுத்தப்பட்டது. தற்போது அதன் விலை யூனிட்டுக்கு ரூ. 500-லிருந்து ரூ. 1,000 வரை உயர்ந்துள்ளது. அதேபோல இரும்புக் கம்பியின் விலை டன்னுக்கு ரூ. 10,000 உயர்ந்துவிட்டது. வங்கிகள் மூலமாக நிலம் வாங்கவும், வீடு கட்டவும் கடன் வாங்கிய மக்கள் மூலப்பொருள்கள் விலையேற்றத்தால் தவித்து வருகின்றனர். 

இதுமட்டுமின்றி தொழிலாளர் பற்றாக்குறையும் நிலவுகிறது. பிற மாநிலத் தொழிலாளர்கள் இல்லாத நிலையில், உள்ளூரைச் சேர்ந்த தொழிலாளர்களுக்கு போதிய சம்பளம் கொடுத்தாலும் எதிர்பார்க்கும் வகையில் அவர்களிடம் இருந்து உழைப்பைப் பெற முடிவதில்லை.  தவிர இதனால் பணியில் சுணக்கம் ஏற்படுவதுடன் 6 மாதங்களில் முடிக்க வேண்டிய கட்டடப் பணிகள் கூடுதலாக 2 மாதங்கள் தள்ளிப்போகும் நிலை ஏற்பட்டுள்ளது. 

கட்டடம் சார்ந்த அனைத்துப் பணிகளுக்கும் தொழிலாளர் பற்றாக்குறை உள்ளது. மூலப்பொருள்கள் விலையைக் கட்டுப்படுத்த,  சிமென்ட், இரும்புக் கம்பி, எம்-சாண்ட், இதர பொருள்கள் உற்பத்தி செய்யும் நிறுவனத்தினரை அழைத்து தமிழக அரசு பேச்சுவார்த்தை நடத்தி விலைக் குறைப்புக்கான நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும் என்றார்.

கூலியும் அதிகரிப்பு
கரோனா பொது முடக்கத்துக்கு முன்னர் தினசரி காலை 7 மணி முதல் பிற்பகல் 6 மணி வரை பணியாற்றும் பிற மாநிலத் தொழிலாளர்களுக்கு குறைந்தபட்சக் கூலியாக ரூ. 700 வழங்கப்பட்டது. தற்போது தமிழகத் தொழிலாளர்களுக்கு காலை 10 மணி முதல் பிற்பகல் 5 மணி வரையில் ரூ. 800 குறைந்தபட்சக் கூலி வழங்க வேண்டிய சூழல் இருப்பதாக கட்டுமானப் பொறியாளர்கள் தெரிவித்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com