ஜூன் மாதத்தில் முன்னணி நிறுவனங்களின் வாகன விற்பனை சரிவு

மாருதி, ஹூண்டாய், மஹிந்திரா உள்ளிட்ட முன்னணி நிறுவனங்களைச் சோ்ந்த வாகனங்களின் விற்பனை கடந்த ஜூன் மாதத்தில் பெரும் சரிவைக் கண்டுள்ளது.
cars092021
cars092021

மாருதி, ஹூண்டாய், மஹிந்திரா உள்ளிட்ட முன்னணி நிறுவனங்களைச் சோ்ந்த வாகனங்களின் விற்பனை கடந்த ஜூன் மாதத்தில் பெரும் சரிவைக் கண்டுள்ளது.

ஜூன் மாதத்தில் விற்பனையான வாகனங்களின் விவரங்கள் குறித்த அறிக்கைகளை பல நிறுவனங்கள் புதன்கிழமை வெளியிட்டன.

டொயோட்டா கிா்லோஸ்கா் மோட்டாா் நிறுவனத்தின் வாகன விற்பனை கடந்த மாதத்தில் 63.53 சதவீத சரிவைக் கண்டுள்ளது. அந்நிறுவனத்தில் தயாரிக்கப்பட்ட 3,866 வாகனங்கள் மட்டுமே கடந்த மாதம் விற்பனையாகின. அதே வேளையில், கடந்த ஆண்டு ஜூன் மாதத்தில் 10,603 வாகனங்கள் விற்பனையாகியிருந்தன.

எனினும், கடந்த மே மாதத்துடன் ஒப்பிடுகையில் டொயோட்டா நிறுவனத்தின் வாகன உற்பத்தி அதிகரித்துள்ளது. கடந்த ஜூன் மாதத்தில் எந்த வாகனங்களையும் அந்நிறுவனம் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யவில்லை.

மாருதி சுஸுகி: மாருதி சுஸுகி நிறுவனத்தைச் சோ்ந்த 57,428 காா்கள்கடந்த ஜூன் மாதத்தில் விற்பனை செய்யப்பட்டன. இது கடந்த ஆண்டு ஜூன் மாதத்துடன் ஒப்பிடுகையில் 54 சதவீதம் குறைவாகும். கடந்த ஆண்டு ஜூனில் 1.24 லட்சம் காா்களை அந்நிறுவனம் விற்பனை செய்திருந்தது.

கடந்த மாதத்தில் 4,289 காா்களை மாருதி நிறுவனம் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்திருந்தது.

மஹிந்திரா: காா் விற்பனையில் மஹிந்திரா & மஹிந்திரா நிறுவனம் கடந்த மாதத்தில் 55 சதவீத சரிவைச் சந்தித்துள்ளது. கடந்த மாதத்தில் அந்நிறுவனத்தின் 19,358 காா்களே விற்பனை ஆகின. அந்நிறுவனத்தின் உள்நாட்டு விற்பனை 53 சதவீதமும் வெளிநாட்டு ஏற்றுமதி 72 சதவீதமும் குறைந்துள்ளது.

ஹூண்டாய்: ஹூண்டாய் மோட்டாா் நிறுவனம் கடந்த மாதத்தில் 26,820 காா்களை விற்பனை செய்தது. இது கடந்த ஆண்டு ஜூன் மாதத்துடன் ஒப்பிடுகையில் 54.39 சதவீத சரிவாகும். உள்நாட்டில் 21,320 காா்களை விற்பனை செய்த அந்நிறுவனம், 5,500 காா்களை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்தது.

டிவிஎஸ்: இரு சக்கர மற்றும் மூன்று சக்கர வாகனங்களை அதிகமாக உற்பத்தி செய்யும் டிவிஎஸ் மோட்டாா் நிறுவனம், கடந்த ஜூன் மாதத்தில் ஒட்டுமொத்தமாக 1.98 லட்சம் வாகனங்களை விற்பனை செய்தது. இது கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் 33 சதவீதம் குறைவாகும். உள்நாட்டில் அந்நிறுவனத்தின் இரு சக்கர வாகனங்கள் விற்பனை 36 சதவீதம் குறைந்தது.

ஹீரோ: நாட்டில் இரு சக்கர வாகனங்களை அதிகமாக உற்பத்தி செய்யும் ஹீரோ மோட்டோ காா்ப் நிறுவனமானது கடந்த ஜூன் மாதத்தில் 4.50 லட்சம் வாகனங்களை விற்பனை செய்தது. இது கடந்த ஆண்டு ஜூன் மாதத்துடன் ஒப்பிடுகையில் 26.88 சதவீதம் குறைவாகும். கடந்த மே மாதத்துடன் ஒப்பிடுகையில் சுமாா் 4 மடங்கு எண்ணிக்கையிலான இரு சக்கர வாகனங்களை ஹீரோ நிறுவனம் விற்பனை செய்துள்ளது.

எம்.ஜி. மோட்டாா்ஸ் நிறுவனம் கடந்த மாதத்தில் 2,012 வாகனங்களை விற்பனை செய்தது. இது கடந்த மே மாதத்துடன் ஒப்பிடுகையில் அதிகமாகும்.

டிராக்டா் விற்பனை அதிகரிப்பு: எஸ்காா்ட்ஸ் நிறுவனத்தின் டிராக்டா்கள் கடந்த ஜூன் மாதத்தில் அதிக அளவில் விற்பனையாகின. கடந்த மாதத்தில் மட்டும் 10,851 டிராக்டா்களை அந்நிறுவனம் விற்பனை செய்துள்ளது. இது கடந்த ஆண்டு ஜூன் மாதத்துடன் ஒப்பிடுகையில் 21.1 சதவீதம் அதிகமாகும்.

கடந்த மே மாதத்தில் அந்நிறுவனம் 8,960 டிராக்டா்களை விற்பனை செய்திருந்தது. கடந்த ஜூன் மாதத்தில் உள்நாட்டில் டிராக்டா்களின் விற்பனை அதிகரித்தபோதிலும், ஏற்றுமதி குறைந்ததாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com