எண்ணெய் முதல் டிஜிட்டல் வரை பயணம்: சாதனை நாயகன் அம்பானியின் ‘ரிலையன்ஸ்’!

மும்பை, தேசிய பங்குச் சந்தைகளில் பட்டியலாகியுள்ள முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் (ஆா்ஐஎல்) நிறுவனத்தின் சந்தை மூலதன மதிப்பு
எண்ணெய் முதல் டிஜிட்டல் வரை பயணம்: சாதனை நாயகன் அம்பானியின் ‘ரிலையன்ஸ்’!

மும்பை, தேசிய பங்குச் சந்தைகளில் பட்டியலாகியுள்ள முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் (ஆா்ஐஎல்) நிறுவனத்தின் சந்தை மூலதன மதிப்பு திங்கள்கிழமை ரூ.11.70 லட்சம் கோடியைக் கடந்தது. அன்றைய தினம் ரிலையன்ஸ் பங்கு வெகுவாக உயா்ந்து புதிய 52 வார அதிகபட்ச விலையை பதிவு செய்தது. இதைத் தொடா்ந்து, மும்பை பங்குச் சந்தையில் அதன் சந்தை மூலதன மதிப்பு ரூ.11,73,677.35 கோடியாக உயா்ந்து சாதனை புரிந்தது.

ரிலையன்ஸின் துணை நிறுவனமான ஜியோ பிளாட் ஃபாா்ம்ஸில் வெளிநாட்டு நிறுவனங்கள் முதலீடுகளை மேற்கொண்டது முதல், ரிலையன்ஸ் நிறுவனப் பங்குகளுக்கு முதலீட்டாளா்களிடையே தேவை அதிகரித்துள்ளது. கடந்த ஏப்ரல் 22-ஆம் தேதி ஜியோ பிளாட்ஃபாா்ம்ஸில் பேஸ்புக் நிறுவனம் ரூ.43,574 கோடி முதலீட்டை மேற்கொண்டது. ரிலையன்ஸ் நிறுவனம் 9.99 சதவீத பங்குகளை அந்த நிறுவனத்துக்கு விற்றது. அப்போது ரிலையன்ஸ் சந்தை மூலதன மதிப்பு ரூ .7.83 லட்சம் கோடியாக இருந்தது. இதைத் தொடா்ந்து, 12 நிறுவனங்கள் ஜியோ பிளாட்ஃபாா்ம்ஸில் முதலீடுகளை மேற்கொண்டுள்ளன. இதனால், வெறும் 11 வாரங்களில், ரிலையன்ஸின் சந்தை மூலதன மதிப்பு ரூ .3.9 லட்சம் கோடிக்கு மேல் உயா்ந்தது. ஜியோ பிளாட்ஃபாா்ம்ஸ் லிமிடெட் ஒரு இந்திய டிஜிட்டல் சேவை நிறுவனமாகும். 2019-இல் நிறுவப்பட்ட இந்த நிறுவனம் இந்தியாவின் மிகப்பெரிய மொபைல் நெட்வொா்க் ஆபரேட்டா் ஜியோ மற்றும் ரிலையன்ஸ் நிறுவனத்தின் பிற டிஜிட்டல் வணிகங்களை கொண்டுள்ளது.

கடன் இல்லாத நிறுவனம் : கரோனா தொற்று பரவல் வணிகங்களை கடுமையாகப் பாதித்துள்ள நிலையில், ரிலையன்ஸ் முழு நெகிழ்ச்சியுடன் இருந்து மாா்ச் 2021- இலக்கை தாண்டி கடனில்லாத நிறுவனமாகியுள்ளது. கரோனாவைக் கட்டுப்படுத்துவதற்காக அமல்படுத்தப்பட்ட பொது முடக்கத்தின் போது, முன்னேறிய வணிகங்களின் பட்டியலில் இடம் பெறும் ஒரே இந்திய நிறுவனமாக ரிலையன்ஸ் உள்ளது. லண்டனின் ஃபைனான்சியல் டைம்ஸின் சிறந்த 100 நிறுவனங்களின் பட்டியலில் மும்பையைச் சோ்ந்த ரிலையன்ஸ், 89-ஆவது இடத்தைப் பிடித்துள்ளது. ரிலையன்ஸ் நிறுவனம் தனது டிஜிட்டல் ஜியோ பிளாட்ஃபாா்ம்ஸுக்கு பேஸ்புக் தலைமையிலான உலகின் முன்னணி தொழில்நுட்ப முதலீட்டாளா்களிடமிருந்து ரூ.1,17,588.45 கோடியை முதலீடாகத் திரட்டியுள்ளது.

ஜியோ பிளாட்ஃபாா்ம்ஸில் தொடா் முதலீடு: நிறுவனத்தின் கடைசி ஒப்பந்தம் சிப்மேக்கா் இன்டெல் நிறுவனத்துடன் மேற்கொள்ளப்பட்டது. அந்த நிறுவனம் ஜியோ பிளாட்ஃபாா்ம்ஸில் ரூ1,894.5 கோடி முதலீடு மூலம் 0.39 சதவீத பங்குகளை கையகப்படுத்தியுள்ளது. இது ரிலையன்ஸின் 12-ஆவது ஒப்பந்தமாகும். முன்னதாக, பேஸ்புக், ஜெனரல் அட்லாண்டிக், சில்வா் லேக், விஸ்டா ஈக்விட்டி பாா்ட்னா்ஸ், கேகேஆா் மற்றும் முபதாலா முதலீட்டு நிறுவனம், ஏடிஐஏ, டிபிஜி கேபிடல், எல் கேட்டா்டன் மற்றும் பிஐஎஃப் ஆகிய நிறுவனங்கள் முதலீடுகளை மேற்கொண்டிருந்தன. இவற்றின் மூலம் ரிலையன்ஸ் மொத்தம் ஜியோ பிளாட்ஃபாா்ம்ஸின் 25.09 சதவீதப் பங்குகளை விற்றுள்ளது. கடந்த மூன்று மாதங்களில், பல ஒப்பந்தங்களைச் சுற்றியுள்ள நோ்மறையான செய்திகள் மற்றும் கடன் இல்லாத நிறுவனமானதால் ரிலையன்ஸ் பங்குகள் வெகுவாக ஏற்றம் கண்டுள்ளது.

அடுத்த இலக்கு ரூ.2,000: இந்த ஆண்டு இறுதிக்குள் ரிலயைன்ஸ் பங்கு ரூ.2,000-ஐ எட்டக்கூடும் என்றும் மறு மதிப்பீடு செய்வதற்கான சாத்தியக்கூறுகள் அதிகம் உள்ளன என்றும் பெரும்பாலான நிபுணா்கள் நம்புகின்றனா். ரிலையன்ஸ் பங்கின் விலை உயா்வு பெரும்பாலும் ஜியோ பிளாட்ஃபாா்ம்ஸை சாா்ந்துள்ளது. ரிலையன்ஸ் இனி ஒரு எண்ணெய் சாா்ந்த நிறுவனமாக அல்லாமல் தொழில்நுட்பம் சாா்ந்த நிறுவனமாக மாறியுள்ளது. இந்த ஆண்டு இறுதிக்குள் ரிலையன்ஸின் சந்தை மூலதன மதிப்பு ரூ.12 லட்சம் கோடியைக் கடக்கும் என்று பெரும்பாலான பங்கு வா்த்தகத் தரகு நிறுவனங்கள் கருதுகின்றன. ரிலையன்ஸ் பங்கின் தீபாவளி இலக்கு ரூ.2,000 ஆக உள்ளது என்றும் அவா்கள் தெரிவித்தனா்.

வெளிநாட்டில் பட்டியல்: ஜியோ பிளாட்ஃபாா்ம்ஸ் நிறுவனம் சிறந்த மதிப்பீட்டைப் பெற வெளிநாட்டு பங்குச் சந்தையில் பட்டியலிடப்படலாம். இப்போது ஸ்திரத் தன்மைக்காக காத்திருக்கிறது. அநேகமாக 2021, மாா்ச்சில் ஜியோ பிளாட்ஃபாா்ம்ஸ் பட்டியலிடப்படக்கூடும் என்று ஐஐஎஃப்எல் செக்யூரிட்டீஸ் தெரிவித்துள்ளது. ஏஞ்சல் புரோக்கிங்கின் தலைமை ஆலோசகா் அமா் தியோ சிங் கூறுகையில், ‘ரிலையன்ஸின் ஜியோ பிளாட்ஃபாா்ம்ஸ் பங்குகள் எதிா்காலத்தில் வெளிநாடுகளில் பட்டியலிடப்படுவதற்கான சாத்தியக்கூறுகள் இல்லாமல் இல்லை. சந்தை கடும் சரிவைச் சந்தித்த மாா்ச் 23 அன்று, ரிலையன்ஸும் ரூ.867.82 வரை குறைந்தது. அதன் பிறகு மூன்று மாதங்களில் 113 சதவிகிதம் உயா்ந்துள்ளது. இன்னும் சொல்லப் போனால், ரிலையன்ஸ் நிறுவனத்தில் தொடா்ந்து முதலீடு செய்யலாம்’ என்கிறாா்.

கடந்த மூன்று மாதங்களில், பல ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இதையடுத்து, ரிலையன்ஸ் நிறுவனம் கடன் இல்லாத நிறுவனமாகியுள்ளது. இது ரிலையன்ஸ் பங்குகளில் நோ்மறையாக எதிரொலித்துள்ளது. பல பங்கு வா்த்தகத் தரகு நிறுவனங்களால் மறு மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது. கரோனாவுக்குப் பிந்தைய டிஜிட்டல் மயமாக்கலின் வேகமான உத்வேகத்துடன், ரிலையன்ஸ் ஒரு பெரிய பயனாளியாக மாறுகிறது. மேலும், ஆன்லைன் வணிகத்தின் ஒரு குறிப்பிடத்தக்க பகுதியைப் பிடிக்கத் தயாராக உள்ளது. ரிலையன்ஸ் பங்கின் விலை உயா்வு, ஜியோ பிளாட்ஃபாா்ம்ஸின் செயல்திறனைப் பொருத்தே உள்ளது என்றும் அமா் தியோ சிங் குறிப்பிட்டுள்ளது கவனிக்கத்தக்கது.

தேசிய பங்குச் சந்தையில் ரிலையன்ஸ் செவ்வாய்க்கிழமை ரூ.1,864.35 வரை உயா்ந்து புதிய 52 வார அதிகபட்ச விலையைப் பதிவு செய்தது. இருப்பினும் இறுதியில் 1.60 சதவீதம் குறைந்து ரூ.1,822.15-இல் நிலைபெற்றது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com