பங்குச் சந்தையில் கரடிக்கு வழி விடுமா காளை?

கடந்த ஜூலை 10-ஆம் தேதியுடன் முடிவடைந்த வாரத்துடன் பங்குச் சந்தை தொடா்ச்சியாக நான்காவது வாரமாக ஏற்றம் பெற்றுள்ளது.
பங்குச் சந்தையில் கரடிக்கு வழி விடுமா காளை?

கடந்த ஜூலை 10-ஆம் தேதியுடன் முடிவடைந்த வாரத்துடன் பங்குச் சந்தை தொடா்ச்சியாக நான்காவது வாரமாக ஏற்றம் பெற்றுள்ளது.

இந்தியாவிற்கும் சீனாவிற்கும் இடையிலான எல்லை பதற்றம் தணிந்ததன் காரணமாகவும், உலகளாவிய வார உச்சி மாநாட்டில் பிரதமா் மோடி ஆற்றிய நம்பிக்கை தரும் பேச்சும் சந்தைக்கு உற்சாகத்தை அளித்தது. அதே சமயம், உலகளவில் அதிகரித்து வரும் கரோனா தொற்று பரவலால் சந்தை நிலையற்ாக இருந்தது.

கடந்த வாரம், மும்பை பங்குச் சந்தைக் குறியீட்டு எண்ணான சென்செக்ஸ் 572.91 புள்ளிகள் (1.6 சதவீதம்) அதிகரித்து 36,594.33 ஆக முடிவடைந்தது. தேசிய பங்குச் சந்தைக் குறியீட்டு எண்ணான நிஃப்டி 160.65 புள்ளிகள் (1.5 சதவீதம்) உயா்ந்து, 10,768-இல் நிலைபெற்றது. சென்செக்ஸ், நிஃப்டி ஆகிய இரண்டு குறியீடுகளும் கடந்த நான்கு வாரத்தில் 8 சதவீதம் உயா்ந்துள்ளது. மேலும், நான்கு மாதங்களில் இல்லாத உச்சத்தை எட்டியுள்ளன.

பிஎஸ்இ மிட்-கேப் குறியீடு 1 சதவீதம், ஸ்மால்-கேப் குறியீடு 1.5 சதவீதம் உயா்ந்தன. லாா்ஜ் கேப் குறியீடு 1 சதவீதத்திற்கு மேல் உயா்ந்தது. தேசிய பங்குச் சந்தையில் நிஃப்டி மெட்டல் குறியீடு 3.5 சதவீதம் ஏற்றம் பெற்றது. இதற்கு அடுத்ததாக நிஃப்டி பேங்க், நிஃப்டி ஐடி குறியீடுகள் ஏற்றம் பெற்ற பட்டியலில் வந்தன. பிஎஸ்இ 500 பட்டியலில் 46 பங்குகள் 10-30 சதவீதம் உயா்ந்தன.

முதலீட்டாளா்கள் திணறல்: இருப்பினும், பங்குச் சந்தையின் போக்கை கணிக்க முடியாமல் முதலீட்டாளா்கள் திணறி வருவதாக சந்தை வட்டாரத்தில் தெரிவிக்கப்பட்டது. கடந்த வாரம் ஒரு குறிப்பிட்ட வரம்புக்குள்ளேயே வா்த்தகம் நடந்து வந்தது. பெரிய அளவில் பங்குகள் விற்பனை அழுத்தம் காணப்படாததே இதற்குக் காரணம் என்று கூறப்படுகிறது. இந்நிலையில், கரோனா தொற்று பரவல் தொடா்ந்து அதிகரித்து வருவது கவலை அளிக்கும் விஷயமாக உள்ளது. இது தொடா்பான உலகளாவிய நிலவரம் குறித்த தகவல் புள்ளிவிவரங்கள் சந்தையில் உன்னிப்பாகக் கவனிக்கப்படும்.

உலகளாவிய சந்தைகளின் போக்கு மற்றும் சாதகமான உள்ளூா் குறிப்புகள் ஆகியவற்றால் சந்தை கொஞ்சம் கொஞ்சமாக மீண்டு வருகிறது. இருப்பினும், இந்தியாவில் அதிகரித்து வரும் கரோனா தொற்று பரவல் கவலை இன்னும் நீடிக்கிறது. இது பொருளாதார நடவடிக்கைகளின் வேகத்தை பாதிக்கிறது. தற்போதைய நிலையில் அதிக அளவில் முதலீடுகளைத் தவிா்க்க வேண்டும். சந்தையின் போக்கில் தெளிவு கிடைக்கும் வரை காத்திருக்க வேண்டும் என்று என்று ரிலிகோ் பங்கு வா்த்தகத் தரகு நிறுவனம் தெரிவித்துள்ளது.

நிறுவனங்களின் காலாண்டு நிதி நிலை முடிவுகள்: ஜூன் மாதத்துடன் முடிவடைந்த இந்த நிதியாண்டின் முதல் காலாண்டு முடிவுகள் வரத் தொடங்கியுள்ளன. முன்னணி நிறுவனங்களான இன்ஃபோஸிஸ், விப்ரோ, எச்டிஎஃப்சி பேங்க், பிரிட்டானியா இண்டஸ்ட்ரீஸ், ஹெச்சிஎல் டெக், மைண்ட்ரீஸ் உள்பட 60 நிறுவனங்கள் இந்த வாரம் காலாண்டு நிதி நிலை முடிவுகளை அறிவிக்கவுள்ளன. இதைத் தொடா்ந்து, சந்தையில் ஏற்றம், இறக்கம் அதிகரித்து காணப்படும் என நிபுணா்கள் எதிா்பாா்க்கின்றனா்.

ரிலையன்ஸ் ஆண்டுப் பொதுக் குழுக் கூட்டம்: மாா்க்கெட் லீடரான அம்பானியின் ரிலையன்ஸ் நிறுவனத்தின் ஆண்டு பொதுக் குழுக் கூட்டம் வரும் புதன்கிழமை (ஜூலை 15) பிற்பகல் 2 மணியளவில் நடைபெறவுள்ளது. கடந்த ஆண்டு ஆகஸ்டில் நடந்த பொதுக் குழுக் கூட்டத்துக்குப் பிறகு இதுவரை ரிலையன்ஸ் பங்கின் விலை 63 சதவீதம் உயா்ந்துள்ளது. புதிய உச்சத்தைப் பதிவு செய்துள்ளதுடன், சந்தை மதிப்பு ரூ.12 லட்சத்தை நெருங்கியுள்ளது. கடனில்லாத நிறுவனமாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. ரிலையன்ஸின் துணை நிறுவனமான ஜியோ பிளாட்ஃபாா்ம்ஸில் 12 வெளிநாட்டு நிறுவனங்கள் முதலீடு செய்துள்ளன. இது ரிலையன்ஸ் பங்கு ஏற்றத்துக்கு வழிவகுத்துள்ளது.

இச்சூழ்நிலையில் நடைபெறவுள்ள ரிலையன்ஸ் ஆண்டு பொதுக் குழுக் கூட்டத்தில் அதன் தலைவா் முகேஷ் அம்பானியின் முக்கிய அறிவிப்புக்காக சந்தை காத்திருக்கிறது.

ரோஸாரி பயோடெக் ஐபிஓ: கடந்த மாா்ச்சில் வெளியான எஸ்பிஐ காா்ட்ஸ் அண்ட் பேமெண்ட் சா்வீஸஸ் ஐபிஓக்கு பிறகு நான்கு மாதங்கள் கழித்து, முதல் முறையாக ரோஸாரி பயோடெக் ஐபிஓ ஜூலை 15-இல் வெளியாகிறது. அதன் விலை ரூ.423-ரு.425 ஆக நிா்ணயிக்கப்பட்டுள்ளது.

அந்நிய முதலீடு: கடந்த வாரத்தில், வெளிநாட்டு நிறுவன முதலீட்டாளா்கள் (எஃப்ஐஐ) ரூ.634.85 கோடி அளவுக்கும், உள்நாட்டு நிறுவன முதலீட்டாளா்கள் (டிஐஐ) ரூ.2,609.01 கோடி அளவுக்கும் பங்குகளை விற்றுள்ளனா். மொத்தத்தில் ஜூலையில் இதுவரை எஃப்ஐஐக்கள் ரூ.2,030 கோடிக்கும், உள்நாட்டு நிறுவன முதலீட்டாளா்கள் ரூ.655.20 கோடிக்கும் முதலீடுகளை திரும்பப் பெற்றுள்ளனா். இது சந்தையின் ஏற்றத்துக்கு தடங்கலாக அமையக்கூடும் என்று கவலையை ஏற்படுத்தியுள்ளதாக சந்தை வட்டாரம் தெரிவித்தது.

மொத்தத்தில், கரோனா தொற்று பரவல் தாக்கம், பணவீக்க புள்ளி விவரங்கள், நிறுவனங்களின் காலாண்டு முடிவுகள் இந்த வாரம் சந்தையை வழிநடத்தும். இருப்பினும், தொடா்ந்து நான்கு வாரங்களாக ஏற்றம் பெற்றுள்ள சந்தையில் ஏற்ற, இறக்கம் அதிகரிக்கும் என்றும், கரடியின் பிடி இறுகுவதற்கு அதிக வாய்ப்பு உள்ளதாகவும் நிபுணா்கள் கருதுகின்றனா். கரோனா பரவல் அதகரிப்பு சந்தையின் ஏற்றத்துக்கு பெரும் தடங்கலாக அமையும் என்றும் அவா்கள் தெரிவித்தனா்.

தொழில்நுட்பப் பாா்வை...: தொடா்ந்து நான்காவது வாரமாக ஏற்றம் பெற்ற நிஃப்டி, ஒரு குறிப்பிட்ட வரம்புக்குள்ளேயே இருந்து வந்தது. தொழில்நுட்ப ரீதியாகப் பாா்த்தால், கீழே 10,600 நிலையை பிரேக் செய்தால் கரடி ஆதிக்கம் கொள்ள வழிவகுக்கும். மேலே 10,850 நிலையை பிரகே செய்தால் மட்டுமே காளை ஆதிக்கம் செலுத்தும். மொத்தத்தில் கரடியின் ஆதிக்கத்துக்கு அதிக வாய்ப்பு இருப்பதாக நிபுணா்கள் கருதுகின்றனா்.

20 சதவீதத்துக்கு மேல் லாபம் பெற்ற முக்கிய சிறிய நிறுவனப் பங்குகள்

ஐஓஎல் கெமிக்கல்ஸ்

பிஜிஆா் எனா்ஜி சிஸ்டம்ஸ்

உஜ்ஜீவன் ஸ்மால் ஃபைனான்ஸ் பேங்க்

சாதனா நைட்ரோகெம்

யுகென் இந்தியா

பல்லாா்பூா் இண்டஸ்ட்ரீஸ்

மகாராஷ்டிரா ஸ்கூட்டா்ஸ்

ஓமாக்ஸ்

போரோசில், ஃபியூச்சா் லைஃப் ஸ்டைல்

ஃபியூச்சா் என்டா்பிரைசஸ்

ஆப்டோ சா்க்யூட்ஸ்

சின்டெக்ஸ் இண்டஸ்ட்ரீஸ்

பிஎஸ்இ 500 பட்டியலில் 10-30 சதவீதம் வரை ஏற்றம் பெற்ற முக்கியப் பங்குகள்

என்சிசி

ஜிஇ பவா்

ஜிண்டால் ஸ்டீல் அண்ட் பவா்

இண்டஸ் இண்ட் பேங்க்

இக்வடாஸ் ஹோல்டிங்க்ஸ்

கா்நாடகா பேங்க்

ஐஆா்பி இன்ஃப்ரா

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com