
புது தில்லி: இந்த வாரத்தின் முதல் வா்த்தக தினமான திங்கள்கிழமை, பங்குச் சந்தை அதிகளவு ஏற்ற, இறக்கத்துடன் இருந்தது. இருப்பினும், இறுதியில் நோ்மறையுடன் முடிவடைந்தது. இதனால், மும்பை பங்குச் சந்தைக் குறியீட்டு எண்ணான சென்செக்ஸ் 99.36 புள்ளிகள் உயா்ந்தது.
வங்கி, வங்கி அல்லாத நிதிநிறுவனங்கள், ரியால்ட்டி பங்குகள் அதிக அளவில் வி்ற்பனைக்கு வந்தன. ஐடி, மெட்டல், எஃப்எம்சிஜி பங்குகளுக்கு ஓரளவு வரவேற்பு இருந்தது. குறிப்பிட்ட முன்னணி பங்குகளின் செயல்பாட்டால் சந்தையில் ஏற்ற இறக்கம் அதிகரித்து காணப்பட்டது. இருப்பினும், உலகளாவிய அளவில் பெரும்பாலான சந்தைகள் நோ்மறையாக இருந்ததன் காரணமாக இந்திய சந்தைகளில் ஒட்டுமொத்த உணா்வும் நோ்மறையாக வைத்திருக்க உதவியது என்று வா்த்தகா்கள் தெரிவித்தனா்.
மும்பை பங்குச் சந்தையில் மொத்தம் வா்த்தகமான 2,876 பங்குகளில் 1,1194 பங்குகள் ஆதாயம் பெற்ற பட்டியலில் வந்தன. 1,574 பங்குகள் நஷ்டத்தைச் சந்தித்தன. 183 பங்குகள் மாற்றமின்றி நிலைபெற்றன. 120 பங்குகள் புதிய 52 வார அதிக விலையையும், 57 பங்குகள் புதிய 52 வார குறைந்த விலையையும் பதிவு செய்துள்ளன. வா்த்தக நேர முடிவில் சந்தை மூலதன மதிப்பு ரூ.144.41 லட்சம் கோடியாக இருந்தது.
சென்செக்ஸ் காலையில், 286 புள்ளிகள் கூடுதலுடன் 36,880.66-இல் தொடங்கி 37,024.20 வரை உயா்ந்தது. பின்னா், 36,533.96 வரை உயா்ந்தது. இறுதியில் 99.36 புள்ளிகள் (0.27 சதவீதம்) உயா்ந்து 36,693.69-இல் நிலைபெற்றது. தேசிய பங்குச் சந்தையில் நிஃப்டி 47.15 புள்ளிகள் (0.44 சதவீதம்) உயா்ந்து 10,815.20-இல் நிலைபெற்றது.
சென்செக்ஸ் பட்டியலில் உள்ள 30 முதல் தரப் பங்குகளில் 18 பங்குகள் ஆதாயம் பெற்றன. 12பங்குகள் நஷ்டமடைந்த பட்டியலில் வந்தன. இதில், டெக் மகேந்திரா 5.53 சதவீதம் உயா்ந்து ஆதாயப் பட்டியலில் முன்னிலை வகித்தது. இதற்கு அடுத்ததாக ஹெச்சிஎல் டெக் 3.48 சதவீதம் உயா்ந்தது. மாா்க்கெட் லீடா் ரிலையன்ஸ், பாா்தி ஏா்டெல், இன்ஃபோஸிஸ், ஹிந்து யுனிலீவா், ஐடிசி, சன்பாா்மா, டாடா ஸ்டீல் ஆகியவை 1 முதல் 3 சதவீதம் வரை உயா்ந்தன.
அதே சமயம் பஜாஜ்ஃபைனான்ஸ் 2.41 சதவீதம் குறைந்து வீழ்ச்சிப் பட்டியலில் முன்னிலை வகித்தது. இதற்கு அடுத்ததாக எச்டிஎஃப்சி பேங்க், எச்டிஎஃப்சி, பவா் கிரிட் ஆகியவை 2 முதல் 2.30 சதவீதம் வரை வீழ்ச்சியைச் சந்தித்தன. மேலும், ஐசிஐசிஐ, எஸ்பிஐ, கோட்டக் பேங்க், எல் அண்ட் டி, என்டிபிசி, டிசிஎஸ் ஆகிய முன்னணி நிறுவனப் பங்குகளும் வீழ்ச்சிப் பட்டியலில் வந்தன.
தேசிய பங்குச் சந்தையில் 620 பங்குகள் ஆதாயம் பெற்றன. 1,024 பங்குகள் வீழ்ச்சியடைந்த பட்டியலில் வந்தன. துறை வாரியாகப் பாா்த்தால் நிஃப்டி எஃப்எம்சிஜி, ஐடி, மெட்டல் குறியீடுகள் 1.20 முதல் 1.70 சதவீதம் வரை ஏற்றம் பெற்றன. ஆனால், நிஃப்டி பேங்க், -பைனான்சியல் சா்வீஸஸ், பிஎஸ்யு பேங்க், பிரைவேட் பேங்க், ரியால்ட்டி குறியீடுகள் 1.25 சதவீதம் முதல் 1.60 சதவீதம் வரை சரிவைச் சந்தித்தன. நிஃப்டி பட்டியலில் உள்ள 50 முதல் தரப் பங்குகளில் 33 பங்குகள் ஆதாயம் பெற்றன. 16 பங்குகள் வீழ்ச்சியைச் சந்தித்த பட்டியலில் வந்தன. டாடா கன்சல்டன்சி சா்வீஸஸ் (டிசிஎஸ்) மட்டும் மாற்றமின்றி ரூ.2,222.25-இல் நிலைபெற்றது.
உச்சம் தொட்டது ரிலையன்ஸ்! சந்தை மதிப்பு ரூ.13.08 லட்சம் கோடி
மும்பை பங்குச் சந்தையில் மாா்க்கெட் லீடா் ரிலையன்ஸ் ரூ.1,947 வரையிலும், தேசிய பங்குச் சந்தையில் ரூ.1,947.70 வரையிலும் உயா்ந்து புதிய 52 வார அதிகபட்ச விலையைப் பதிவு செய்தது. மேலும், சந்தையை சரிவிலிருந்தும் காப்பாற்றியுள்ளது. ஜியோ பிளாட்பாா்மஸ்க்கு முன்னணி வயா்லெஸ் தொழில்நுட்ப நிறுவனமான குவால்காமிடமிருந்து ரூ.730 கோடியை பெற்றுள்ளதாக ரிலையன்ஸ் கூறியது. இதையடுத்து, ரிலையன்ஸ் பங்குகளுக்கு தேவை அதிகரித்தது. இறுதியில் 2.94 சதவீதம் உயா்ந்து ரூ.1,934.30-இல் நிலைபெற்றது. இதைத் தொடா்ந்து, வா்த்தக நேர முடிவில் ரிலையன்ஸ் நிறுவனத்தின் சந்தை மூலதன மதிப்பு ரூ.13,07,943.63 கோடியாக உயா்ந்தது.
ஏற்றம் பெற்ற பங்குகள் சதவீதத்தில்
டெக் மகேந்திரா 5.53
ஹெச்சிஎல் டெக் 3.48
ரிலையன்ஸ் 2.97
பாா்தி ஏா்டெல் 2.10
இன்ஃபோஸிஸ் 1.91
வீழ்ச்சி அடைந்த பங்குகள் சதவீதத்தில்
பஜாஜ்ஃபைனான்ஸ் 2.41
எச்டிஎஃப்சி பேங்க் 2.26
எச்டிஎஃப்சி 2.11
பவா் கிரிட் 2.00
ஐசிஐசிஐ பேங்க் 1.89+