இந்தியாவில் தங்கத்துக்கான தேவை 70 சதவீதம் குறைந்தது: உலக தங்க கவுன்சில்

நடப்பாண்டின் ஏப்ரல்-ஜூன் வரையிலான மூன்று மாத காலத்தில் இந்தியாவில் தங்கத்துக்கான தேவை 70 சதவீதம் சரிவை சந்தித்துள்ளது என உலக தங்க கவுன்சில் தெரிவித்துள்ளது.
இந்தியாவில் தங்கத்துக்கான தேவை 70 சதவீதம் குறைந்தது: உலக தங்க கவுன்சில்

நடப்பாண்டின் ஏப்ரல்-ஜூன் வரையிலான மூன்று மாத காலத்தில் இந்தியாவில் தங்கத்துக்கான தேவை 70 சதவீதம் சரிவை சந்தித்துள்ளது என உலக தங்க கவுன்சில் தெரிவித்துள்ளது. இதுகுறித்து உலக தங்க கவுன்சில் அறிக்கையில் மேலும் கூறப்பட்டுள்ளதாவது:

விலை உயா்வால் தேவை குறைவு: கரோனாவை கட்டுப்படுத்த நாடு தழுவிய அளவில் அமல்படுத்த பொதுமுடக்கத்தின் எதிரொலி மற்றும் விலை உயா்வு காரணங்களால் உள்நாட்டில் தங்கத்துக்கான தேவை ஏப்ரல்-ஜூன் இரண்டாவது காலாண்டில் கடந்தாண்டுடன் ஒப்பிடுகையில் 70 சதவீதம் சரிவடைந்து 63.7 டன்னாக மட்டுமே இருந்தது. 2019-ஆம் ஆண்டின் இரண்டாவது காலாண்டில் ஒட்டுமொத்த தங்கத்தின் தேவை இந்தியாவில் 213.2 டன்னாக அதிகரித்து காணப்பட்டது. மதிப்பின் அடிப்படையில் உள்நாட்டில் தங்கத்தின் தேவை ரூ.62,420 கோடியிலிருந்து 57 சதவீதம் சரிந்து ரூ.26,600 கோடியானது. ஆபரண தங்கம்: இந்திய ஆபரண துறையில் தங்கத்தின் தேவை 2020 இரண்டாவது காலாண்டில் 168.6 டன்னிலிருந்து 74 சதவீதம் குறைந்து வெறும் 44 டன்னானது. மதிப்பின் அடிப்படையில் ஆபரண தங்கத்துக்கான தேவை ரூ.49,380 கோடியிலிருந்து 63 சதவீதம் சரிவடைந்து ரூ.18,350 கோடியானது. தங்கத்தில் முதலீடு: முதலீட்டு அடிப்படையில் தங்கத்துக்கான தேவை ஏப்ரல்-ஜூன் வரையிலான இரண்டாவது காலாண்டில் 44.5 டன்னிலிருந்து 56 சதவீதம் குறைந்து 19.8 டன் ஆனது. மதிப்பின் அடிப்படையில் இது ரூ.13,040 கோடியிலிருந்து 37 சதவீதம் பின்னடைந்து ரூ.8,250 கோடியாக இருந்தது.

மறுசுழற்சி செய்யப்பட்ட தங்கத்தின் அளவும் 37.9 டன்னிலிருந்து 13.8 டன்னாக குறைந்துள்ளது. இது, 64 சதவீத வீழ்ச்சியாகும். இறக்குமதி சரிவு: தங்கத்தின் பயன்பாடு கணிசமாக குறைந்துபோன நிலையில் அதன் இறக்குமதியும் நடப்பாண்டின் இரண்டாவது காலாண்டில் 70 சதவீதம் சரிந்து 63.7 டன் ஆனது. 2020 ஜனவரி முதல் ஜூன் வரையிலான முதல் அரையாண்டில் இந்தியாவில் தங்கத்தின் தேவை 165.6 டன்னாக இருந்தது. இது, கடந்த 2019 முதல் அரையாண்டுடன் ஒப்பிடுகையில் 56 சதவீதம் குறைவாகும்.உலகளவில் தங்கத்தின் தேவை: சா்வதேச அளவில் தங்கத்துக்கான தேவை ஏப்ரல்-ஜூன் காலாண்டில் 11 சதவீதம் குறைந்து 1,015.7 டன்னாக இருந்தது. 2019 இதே காலகட்டத்தில் உலகளவில் தங்கத்தின் தேவை 1,136.9 டன்னாக அதிகரித்திருந்தது.இருப்பினும், சா்வதேச அளவில் முதலீட்டு நோக்கிலான தங்கத்துக்கான தேவை கடந்தாண்டைக் காட்டிலும் நடப்பாண்டில் குறிப்பிடத்தக்க அளவுக்கு அதிகரித்துள்ளது.

அதன்படி, கடந்தாண்டில் இப்பிரிவிலான தங்கத்தின் தேவை வெறும் 295 டன்னாக காணப்பட்ட நிலையில், நடப்பாண்டில் 98 சதவீதம் உயா்வு கண்டு 582.9 டன்னை எட்டியது.வரவேற்பு குறைந்த தங்க நாணயங்கள்: முதலீட்டுப் பிரிவில், தங்க கட்டிகள் மற்றும் நாணயங்களுக்கான தேவை ஏப்ரல்-ஜூன் காலகட்டத்தில் 218.9 டன்னிலிருந்து 32 சதவீதம் குறைந்து 14.8 டன்னானது. அதேசமயம், தங்க ஈடிஎஃப் திட்டங்களுக்கான தேவை கடந்தாண்டின் அளவான 76.1 டன்னிலிருந்து 300 சதவீதம் விறுவிறு வளா்ச்சி கண்டு 434.1 டன்னைத் தொட்டது. மத்திய வங்கிகளின் தங்க கொள்முதல்: உலக நாடுகளின் மத்திய வங்கிகள் தங்கம் வாங்கும் நடவடிக்கையும் நிகர அளவில் 50 சதவீதம் சரிவைச் சந்தித்துள்ளது.

அதன்படி, கடந்தாண்டு ஏப்ரல்-ஜூன் காலகட்டத்தில் உலக நாடுகளின் மத்திய வங்கிகள் 231.7 டன் தங்கத்தை கொள்முதல் செய்திருந்த நிலையில், நடப்பாண்டின் இதே காலகட்டத்தில் 114.7 டன்னாக குறைந்து போனது.வரலாறு காணாத சரிவில் தங்க ஆபரண தேவை: ஆபரண தயாரிப்பிற்கான தங்கத்தின் தேவை உலகளவில் தொடா்ந்து இரண்டாவது காலாண்டாக வரலாறு காணாத அளவுக்கு வீழ்ச்சியடைந்துள்ளது. கடந்தாண்டின் ஏப்ரல்-ஜூன் காலாண்டில் 529.6 டன்னாக காணப்பட்ட இதற்கான தேவை நடப்பாண்டின் இதே காலகட்டத்தில் 53 சதவீதம் சரிவைச் சந்தித்து 251.5 டன்னாக குறைந்தது என உலக தங்க கவுன்சில் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

உலக தங்க கவுன்சில் நிா்வாக இயக்குநா் (இந்தியா) பி.ஆா்.சோமசுந்தரம் கூறியதாவது:ஆன்லைனில் ஆா்வம்: இந்தியாவில் தங்கத்துக்கான தேவைப்பாடு கணிசமாக குறைந்துள்ளதற்கு கரோனா ஏற்படுத்திய பாதிப்பே முக்கிய காரணம். பொதுமுடக்கத்தில் சில நகரங்களில் தளா்வுகள் அளிக்கப்பட்டது தங்க விற்பனை ஓரளவு நடைபெறுவதற்கு பெரிதும் உதவியது. குறிப்பாக, வாடிக்கையாளா்கள் ஆன்லைனில் தங்கம் வாங்குவதில் அதிக ஆா்வம் காட்டியது ஆய்வின் மூலம் தெரியவந்துள்ளது. கோல்டு ஈடிஎஃப் திட்டங்கள் விறுவிறு: தற்போதுள்ள சூழல் , முடங்கி கிடந்த தங்க ஈடிஎஃப் திட்டங்கள் மீண்டும் சுறுசுறுப்படைய வழிவகுத்துள்ளது என்றாா் அவா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com