பங்குச் சந்தையில் 4-ஆவது நாளாக எழுச்சி!

இந்த வாரத்தின் முதல் வர்த்தக தினமான திங்கள்கிழமையும் பங்குச் சந்தை எழுச்சி பெற்றது. இதைத் தொடர்ந்து, மும்பை பங்குச் சந்தைக் குறியீடான சென்செக்ஸ் 879.42 புள்ளிகள் உயர்ந்தது. 
பங்குச் சந்தையில் 4-ஆவது நாளாக எழுச்சி!


புது தில்லி: இந்த வாரத்தின் முதல் வர்த்தக தினமான திங்கள்கிழமையும் பங்குச் சந்தை எழுச்சி பெற்றது. இதைத் தொடர்ந்து, மும்பை பங்குச் சந்தைக் குறியீடான சென்செக்ஸ் 879.42 புள்ளிகள் உயர்ந்தது. 

பொது முடக்கம் முக்கியக் கட்டுப்பாட்டு பகுதிகளில் ஜூன் 30-ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டாலும், பொருளாதாரத்தை மீட்டெடுக்கும் வகையில், சில முக்கிய தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. கிராமப்புற சீர்திருத்தங்கள் மற்றும் பருவமழை முன்னறிவிப்பு ஆகியவையும் காளை ஆதிக்கம் பெறுவதற்கு காரணமாக இருந்தன. இதனால், சந்தையில் முதலீட்டாளர்களிடையே உற்சாகம் இருந்ததாக பங்கு வர்த்தகத் தரகு நிறுவனங்கள் தெரிவித்தன.

வங்கி, வங்கி சாரா நிதி நிறுவனங்கள், ஆட்டோ, மெட்டல், மீடியா, ஐடி, ரியால்ட்டி பங்குகளுக்கு நல்ல வரவேற்பு இருந்தது. அதேபோன்று சிறிய மற்றும் நடுத்தர நிறுவனப் பங்குகளுக்கும் தேவை அதிகரித்து காணப்பட்டது. இதனால், அனைத்துத் துறை குறியீடுகளும் ஏற்றம் பெற்ற பட்டியலில் வந்தன. குறிப்பாக பொதுத் துறை வங்கிப் பங்குகளை வாங்குவதற்கு போட்டி நிலவியதாக சந்தை வட்டாரத்தில் தெரிவிக்கப்பட்டது.

மும்பை பங்குச் சந்தையில் சென்செக்ஸ் காலையில் 482 புள்ளிகள் கூடுதலுடன் 32,906.05-இல் தொடங்கியது. 32,876.55 வரை கீழே சென்றது. 

பின்னர், தொடர்ந்து எழுச்சி இருந்ததால், அதிகபட்சமாக 33,673.83 வரை உயர்ந்தது. இறுதியில் 879.42 புள்ளிகள் (2.71 சதவீதம்) உயர்ந்து 33,303.52-இல் நிலைபெற்றது. ஒரு கட்டத்தில் வர்த்தகத்தின் போது 1,250 புள்ளிகள் ஏற்றம் பெற்றிருந்தது. பிஎஸ்இ ஸ்மால் கேப், மிட்கேப் குறியீடுகளும் 2-3 சதவீதம் உயர்ந்தன. மொத்தம் 1,862 பங்குகள் ஆதாயம் பெற்றன. 583 பங்குகள் வீழ்ச்சியைச் சந்தித்தன. 137 பங்குகள் மாற்றமின்றி நிலைபெற்றன.

சென்செக்ஸ் பட்டியலில் உள்ள 30 முதல் தரப் பங்குகளில் சன் பார்மா, நெஸ்ட்லே இந்தியா, அல்ட்ரா டெக் சிமெண்ட், ஹீரோ மோட்டோகார்ப், எல் அண்ட் டி ஆகிய 5 நிறுவனப் பங்குகள்  மட்டும் சரிவை (0.50- 2.20 சதவீதம்) சந்தித்தன. 25 பங்குகள் ஆதாயம் பெற்ற பட்டியலில் வந்தன.

இதில்,  பஜாஜ் பைனான்ஸ் 10.62 சதவீதம் உயர்ந்து அதிகம் ஆதாயம் பெற்ற பங்குகள் பட்டியலில் முன்னிலை வகித்தது. டைட்டன், டாடா ஸ்டீல், எஸ்பிஐ, எம் அண்ட் எம், எச்டிஎஃப்சி, இன்டஸ்இண்ட் பேங்க் ஆகியவை 4 முதல் 7.60 சதவீதம் வரை உயர்ந்தன. 

மேலும், ரிலையன்ஸ், எச்டிஎஃப்சி பேங்க், டிசிஎஸ், ஆக்ஸிஸ் பேங்க், மாருதி சுஸýகி ஆகியவை 3 முதல் 4 சதவீதம் வரை  உயர்ந்தன. ஹிந்துஸ்தான் யுனிலீவர், ஐடிசி, ஐசிஐசிஐ பேங்க், கோட்டக் பேங்க், இன்ஃபோசிஸ் ஆகியவையும் ஆதாயம் பெற்ற பட்டியலில் வந்தன.

தேசிய பங்குச் சந்தையில் 1,324 பங்குகள் ஆதாயம் பெற்ற பட்டியலில் வந்தன. 271 பங்குகள் வீழ்ச்சியைச் சந்தித்தன. நிஃப்டி  245.85 புள்ளிகள் (2.57 சதவீதம்) உயர்ந்து 9,826.15-இல் நிலைபெற்றது. வர்த்தகத்தின் போது  ஒரு கட்டத்தில் 350 புள்ளிகள் ஏற்றம் பெற்றிருந்தது. 

தேசிய பங்குச் சந்தையில் அனைத்துத் துறை குறியீடுகளும் ஆதாயம் பெற்ற பட்டியலில் வந்தன.  நிஃப்டி பிஎஸ்யு பேங்க் குறியீடு 7.57 சதவீதம் உயர்ந்து ஆதாயம் பெற்ற பட்டியலில் முன்னிலை வகித்தது. இதற்கு அடுத்ததாக, மெட்டல்,  பைனான்சியல் சர்வீசஸ், மீடியா,  பேங்க், ஆட்டோ, ரியால்ட்டி குறியீடுகள் 3 முதல் 4 சதவீதம் வரை உயர்ந்தன. ஐடி குறியீடு 2.12 சதவீதம் உயர்ந்தது.

ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ், இரட்டை நிறுவனங்களான எச்.டி.எஃப்.சி, பஜாஜ் பைனான்ஸ், டி.சி.எஸ் ஆகியவை வெகுவாக உயர்ந்து சென்செக்ஸ், நிஃப்டி தொடர்ந்து 4-ஆவது நாளாக எழுச்சி பெற உதவியாக இருந்தன. 

மத்திய அரசு, பொருளாதார வளர்ச்சியை துரிதப்படுத்தும் செயல்முறைகளைத் தொடங்கியுள்ளதால்  முதலீட்டாளர்களிடம் நம்பிக்கை அதிகரித்துள்ளது. 

மேலும், உலகளாவிய சந்தைகளும் நேர்மறையாக  இருந்ததும் பங்குச் சந்தைகளுக்கு சாதகமானதாக இருந்தது என்று  சந்தை வட்டாரத்தில் தெரிவிக்கப்பட்டது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com