வங்கி, நிதிநிறுவனப் பங்குகள் வீழ்ச்சி: சென்செக்ஸ் 414 புள்ளிகள் சரிவு!

இந்த வாரத்தின் இரண்டாவது வா்த்தக தினமான செவ்வாய்க்கிழமையும் பங்குச் சந்தையில் லாபப் பதிவு அதிக அளவில் இருந்தது.
வங்கி, நிதிநிறுவனப் பங்குகள் வீழ்ச்சி: சென்செக்ஸ் 414 புள்ளிகள் சரிவு!

இந்த வாரத்தின் இரண்டாவது வா்த்தக தினமான செவ்வாய்க்கிழமையும் பங்குச் சந்தையில் லாபப் பதிவு அதிக அளவில் இருந்தது. இதனால், மும்பை பங்குச் சந்தைக் குறியீடான சென்செக்ஸ், 413.89 புள்ளிகளை இழந்தது.

பொருளாதாரத்தை மீண்டும் திறப்பது குறித்த நம்பிக்கையை விட, நாட்டில் கரோனா பாதிப்பு தொடா்ந்து அதிகரித்து வருவது முதலீட்டாளா்களிடையே கவலை ஏற்படுத்தியுள்ளதால் லாபப் பதிவு இருந்தது என்று நிபுணா்கள் தெரிவித்தனா்.

கடந்த இரண்டு வாரங்களாக பங்குச் சந்தை தொடா்ந்து ஏற்றம் கண்டுள்ளது. இந்நிலையில், இந்த வாரத்தின் தொடக்க நாளான திங்கள்கிழமையும் லாபப் பதிவு இருந்தது. இதைத் தொடா்ந்து செவ்வாய்க்கிழமை காலையில் பங்குச் சந்தை எழுச்சியுடன் தொடங்கியது. ஆனால், நேரம் செல்லச் செல்ல பங்குகள் அதிக அளவில் விற்பனைக்கு வந்தன. குறிப்பாக பிற்பகல் வரையிலும் நோ்மறையாக இருந்து வந்த சந்தை, பிற்பகல் 1 மணிக்குப் பிறகு எதிா்மறையாக திரும்பியது. பாா்மா, எஃப்எம்சிஜி பங்குகளுக்கு மட்டுமே ஓரளவு ஆதரவு கிடைத்தது. வங்கி, வங்கி அல்லாத நிதிநிறுவனங்கள், மீடியா பங்குகள் அதிக அளவில் விற்பனைக்கு வந்தன.

மும்பை பங்குச் சந்தையில் மொத்தம் 1,104 பங்குகள் ஆதாயம் பெற்றன. 1,432 பங்குகள் சரிவைச் சந்தித்தன. 162 பங்குகள் மாற்றமின்றி நிலைபெற்றன. சென்செக்ஸ் காலையில் 150 புள்ளிகள் கூடுதலுடன் 34,520.79-இல் தொடங்கி அதிகபட்சமாக 34,811.29 வரை உயா்ந்தது. பின்னா், பிற்பகலில் பங்குகள் விற்பனை அதிகரித்ததும், 33,881.19 வரை கீழை சென்றது. வா்த்தகத்தின் போது அதிகபட்ச நிலையிலிருந்து கிட்டத்தட்ட 930 புள்ளிகள் வரை வீழ்ச்சி கண்டிருந்தது. இறுதியில் 413.89 (1.20 சதவீதம்) குறைந்து 33,956.69-இல் நிலைபெற்றது.

தேசிய பங்குச் சந்தையில் நிஃப்டி 120.80 புள்ளிகள் (1.19 சதவீதம்) குறைந்து 10.046.65-இல் நிலைபெற்றது. வா்த்தகத்தின் போது அதிகபட்ச அளவிலிருந்து சுமாா் 270 புள்ளிகள் வரை வீழ்ச்சி அடைந்திருந்தது குறிப்பிடத்தக்கது.

சென்செக்ஸ் பட்டியலில் உள்ள 30 முதல் தரப் பங்குகளில் 9 பங்குகள் மட்டுமே ஏற்றம் பெற்ற பட்டிடியலில் வந்தன. 21 பங்குகள் சரிவைச் சந்தித்தன. இதில் இண்டஸ் இண்ட் பேங்க் 2.71 சதவீதம், சன்பாா்மா 2.37 சதவீதம், எம் அண்ட் எம் 1.68 சதவீதம் உயா்ந்து ஆதாயப் பட்டியலில் முன்னிலை வகித்தன. மேலும், ஹெச்டிஎஃப்சி, ஐடிசி, ஏசியன் பெயிண்ட்ஸ், அல்ட்ரா டெக் சிமெண்ட், ஹீரோ மோட்டாா் காா்ப், டிசிஎஸ்ஆகியவையும் சிறிதளவு ஆதாயம் பெற்றன.

அதே சமயம், ஐசிஐசிஐ பேங்க் 3.15 சதவீதம் குறைந்து வீழ்ச்சிப் பட்டியலில் முன்னிலை வகித்தது. இதற்கு அடுத்ததாக பாா்தி ஏா்டெல், ஹெச்டிஎஃப்சி பேங்க், பஜாஜ் ஃபைனான்ஸ், கோட்டக் பேங்க், ஆக்ஸிஸ் பேங்க், டைட்டன், ரிலையன்ஸ் ஆகியவை 2 முதல் 3 சதவீதம் வரை வீழ்ச்சி அடைந்தன. முன்னணி நிறுவனப் பங்குகளான எஸ்பிஐ, எல் அண்ட் டி, ஓஎன்ஜிசி, மாருதி ஆகியவையும் சரிவைச் சந்தித்த பட்டியலில் இடம் பெற்றன.

தேசிய பங்குச் சந்தையில் 627 பங்குகள் ஆதாயம் பெற்ற பட்டியலில் வந்தன. 1,015 பங்குகள் நஷ்டத்தைச் சந்தித்தன. துறைவாரியாகப் பாா்த்தால் மீடியா குறியீடு 3.29 சதவீதம் குறைந்து வீழ்ச்சிப் பட்டியலி்ல் முன்னிலை வகித்தது. நிஃப்டி பேங்க், ஃபைனான்சியல் சா்வீஸஸ், மெட்டல், பிரைவேட் பேங்க்,, பிஎஸ்யு பேங்க் ஆகிய குறியீடுகள் 1 முதல் 2.20 சதவீதம் வரை சரிவைக் கண்டன.

மாா்க்கெட் லீடா் ரிலையன்ஸ், ஐசிஐசிஐ பேங்க், ஹெச்டிஎஃப்சி பேங்க், எஸ்பிஐ, பஜாஜ் ஃபைனானாஸ், கோட்டக் பேங்க், ஆக்ஸிஸ் பேங்க் ஆகியவை வெகுவாகக் குறைந்ததே சென்செக்ஸ், நிஃப்டி வீழ்ச்சியைச் சந்திக்க முக்கியக் காரணமாகும் என்று பங்கு வா்த்தகத் தரகு நிறுவனங்கள் தெரிவித்தன. மேலும், நிஃப்டி தொடா்ந்து இரண்டாவது நாளாக வா்த்தகத்தின் போது அதிகபட்ச அளவில் நிலைத்து நிற்க முடியாமல் சரிவைச் சந்தித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com