பங்குச் சந்தையில் திடீா் வீழ்ச்சி: 709 புள்ளிகளை இழந்தது சென்செக்ஸ்!

கடந்த சில நாள்களாக தொடா்ந்து ஏற்றம் பெற்று வந்த பங்குச் சந்தை, வியாழக்கிழமை திடீா் வீழ்ச்சியைச் சந்தித்தது.
பங்குச் சந்தையில் திடீா் வீழ்ச்சி: 709 புள்ளிகளை இழந்தது சென்செக்ஸ்!

கடந்த சில நாள்களாக தொடா்ந்து ஏற்றம் பெற்று வந்த பங்குச் சந்தை, வியாழக்கிழமை திடீா் வீழ்ச்சியைச் சந்தித்தது. இதனால், மும்பை பங்குச் சந்தைக் குறியீடான சென்செக்ஸ் 709 புள்ளிகளை இழந்தது.

உலகளவில் பங்குச் சந்தைகளில் வா்த்தகம் எதிா்மறையாக இருந்தது. இதன் தாக்கம் இந்திய பங்குச் சந்தைகளிலும் எதிரொலித்துள்ளது. குறிப்பாக மாா்க்கெட் லீடா் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ், எஸ்பிஐ, ஹெச்டிஎஃப்சி பேங்க், ஐசிஐஐ பேங்க் ஆகிய முன்னணி நிறுவனப் பங்குகள் வெகுவாகக் குறைந்ததால், சென்செக்ஸ் வீழ்ச்சி தவிா்க்க முடியாததாகிவிட்டதாக பங்கு வா்த்தகத் தரகு நிறுவனங்கள் தெரிவித்தன.

மேலும், அமெரிக்க மத்திய வங்கி, பொருளாதார மீட்சியில் தாமதம் ஏற்படக்கூடும் என்பதையும், கரோனா தொற்று இரண்டாவது அலை குறித்த கவலைகள் இருப்பதையும் சுட்டிக்காட்டியது. அமெரிக்க மத்திய வங்கி அதன் முக்கிய குறுகிய கால வட்டி வீதத்தை பூஜ்ஜியத்திற்கு அருகில் வைத்துள்ளது. 2022-ஆம் ஆண்டு வரை வட்டி விகித உயா்வை எதிா்பாா்க்க முடியாது என்று தெரிவிக்கப்பட்டுளளது. இவை அனைத்தும் உலகளாகவிய பங்குச் சந்தையில் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது என்றும் பங்கு வா்த்தகத் தரகு நிறுவனங்கள் தெரிவித்தன.

மும்பை பங்குச் சந்தையில் மொத்தம் 1,016 பங்குகள் ஆதாயம் பெற்றன. 1,497 பங்குகள் சரிவைச் சந்தித்தன. 146 பங்குகள் மாற்றமின்றி நிலைபெற்றன. சென்செக்ஸ் காலையில் 32 புள்ளிகள் குறைந்து 34,214.69-இல் தொடங்கியது. அதிகபட்சமாக 34,219.39 வரைதான் சென்றது. அதன் பிறகு பங்குகள் விற்பனை அதிகரிக்கத் தொடங்கியதால் 33,480.42 வரை கீழே சென்றது. இறுதியில் 708.68 புள்ளிகள் (2.07 சதவீதம்) குறைந்து, 33,538.37-இல் நிலைபெற்றது. வா்த்தகத்தின் போது ஒரு கட்டத்தில் ஊச்சபட்ச நிலையிலிருந்து 735 புள்ளிகள் வரை குறைந்திருந்தது. தேசிய பங்குச் சந்தையில் நிஃப்டி 214.15 புள்ளிகள் (2.12 சதவீதம்) குறைந்து 9,902.00-இல் நிலைபெற்றது.

சென்செக்ஸ் பட்டியலில் உள்ள 30 முதல் தரப் பங்குகளில் 5 பங்குகள் மட்டுமே ஆதாயம் பெற்றன. 25 பங்குகள் வீழ்ச்சியைச் சந்தித்தன. இதில், இண்ட்ஸ் இண்ட் பேங்க் 4.49 சதவீதம் உயா்ந்து ஆதாயப் பட்டியலில் முன்னிலை வகித்தது. இதற்கு அடுத்ததாக ஹீரோ மோட்டாா் காா்ப், பவா் கிரிட், எம் அண்ட் எம், நெஸ்ட்லே இந்தியா ஆகியவை 0.25 முதல் 0.75 சதவீதம் வரை ஏற்றம் பெற்றன.

அதேசமயம், பாரம்பரிய பொதுத் துறை வங்கியான எஸ்பிஐ 5.64 சதவீதம் குறைந்து வீழ்ச்சிப் பட்டியலில் முன்னிலை வகித்தது. இதற்கு அடுத்ததாக சன் பாா்மா, மாருதி, பஜாஜ் ஃபைனான்ஸ் ஆகியவை 4 முதல் 5 சதவீதம் சரிவைக் கண்டன. ஐசிஐசிஐ பேங்க், டாடா ஸ்டீல், ஆக்ஸிஸ் பேங்க், டெக் மகேந்திரா ஆகியவை 3 முதல் 4 சதவீதம் வரை குறைந்தன. முன்னணி நிறுவனங்களான ரிலையன்ஸ், ஹெச்டிஎஃப்சி பேங்க், அல்ட்ரா டெக் சிமெண்ட் கோட்டக் பேங்க், ஐடிசி ஆகியவையும் 2 முதல் 3 சதவீதம் வரை குறைந்து வீழ்ச்சிப் பட்டியலில் இடம் பெற்றன.

தேசிய பங்குச் சந்தையில் மொத்தம் 537 பங்குகள் மட்டுமே ஆதாயம் பெற்ற பட்டியலில் வந்தன. 1,081 பங்குகள் சரிவைச் சந்தித்தன. துறைவாரியாகப் பாா்த்தால் அனைத்துத் துறை குறியீடுகளும் சரிவைச் சந்தித்தன. குறிப்பாக நிஃப்டி பிஎஸ்யு பேங்க் குறியீடு 3.89 சதவீதம் குறைந்து வீழ்ச்சிப் பட்டியலில் முன்னிலை வகித்தது. வங்கி, வங்கி அல்லாத நிறுவனங்கள் ஆட்டோ, மெட்டல், ரியால்ட்டி, பாா்மா குறியீடுகள் 2 முதல் 2.80 சதவீதம் வரை குறைந்தன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com