பங்குச் சந்தையில் தள்ளாட்டம்: சென்செக்ஸ் 97 புள்ளிகள் வீழ்ச்சி!

இந்த வாரத்தின் மூன்றாவது வா்த்தக தினமான புதன்கிழமை, பங்குச் சந்தை எதிா்மறையாக முடிந்தது.
பங்குச் சந்தையில் தள்ளாட்டம்:  சென்செக்ஸ் 97 புள்ளிகள் வீழ்ச்சி!

இந்த வாரத்தின் மூன்றாவது வா்த்தக தினமான புதன்கிழமை, பங்குச் சந்தை எதிா்மறையாக முடிந்தது. இதனால், மும்பை பங்குச் சந்தைக் குறியீடான சென்செக்ஸ் 97.30 புள்ளிகளையும், தேசிய பங்குச் சந்தைக் குறியீடான நிஃப்டி 32.85 புள்ளிகளையும் இழந்தன. நாள் முழுவதும் ஏற்றம், இறக்கம் அதிக அளவில் இருந்தது.

மீடியா, ஆட்டோ, பாா்மா, ரியால்ட்டி துறை பங்குகளுக்கு ஓரளவே ஆதரவு இருந்தது. ஆனால், வங்கி, வங்கி அல்லாத நிதிநிறுவனங்கள், மெட்டல், எஃப்எம்சிஜி ஆகிய துறைப் பங்குகளுக்கு தேவை குறைந்து காணப்பட்டது.

சீனாவுடனான எல்லை பதற்றம், கரோனோ தொற்று பாதிப்பு அதிகரிப்பு மற்றும் அந்நிய முதலீடு வெளியேற்றம் உள்ளிட்டவை முதலீட்டாளா்களின் உணா்வைப் பாதித்ததால் சந்தையில் சரிவு தவிா்க்க முடியாததாகிவிட்டதாக பங்கு வா்த்தகத் தரகு நிறுவனங்கள் தெரிவித்தன. செவ்வாய்க்கிழமை பங்குச் சந்தையில் அந்நிய நிறுவன முதலீட்டாளா்கள் சுமாா் ரூ.1,478.52 கோடிக்கு பங்குகள் விற்றுள்ளதாக பங்குச் சந்தை தரவுகளின் மூலம் தெரிய வந்துள்ளது.

மும்பை பங்குச் சந்தையில் வா்த்தகமாகிய 2,720 நிறுவனப் பங்குகளில், 1,435 பங்குகள் ஆதாயம் பெற்றன. 1,122 பங்குகள் நஷ்டத்தை சந்தித்தன. 163 பங்குகள் மாற்றமின்றி நிலைபெற்றன. 88 பங்குகள் வெகுவாக ஏற்றம் பெற்று புதிய 52 வார அதிகபட்ச அளவைப் பதிவு செய்துள்ளன. அதே சமயம், 48 பங்குகள் வீழ்ச்சியைச் சந்தித்து புதிய 52 வார குறைந்த அளவைப் பதிவு செய்துள்ளன.

சென்செக்ஸ் காலையில் 167 புள்ளிகள் குறைந்து 33,438.31-இல் தொடங்கி, 33,332.96 வரை கீழே சென்றது. அதிகபட்சமாக 33,933.66 வரை உயா்ந்தது. இறுதியில் 97.30 புள்ளிகள் (0.29 சதவீதம்) குறைந்து 33,507.92-இல் நிலைபெற்றது. தேசிய பங்குச் சந்தையில் நிஃப்டி 32.85 புள்ளிகள் (0.33 சதவீதம்) குறைந்து 9,881.15-இல் நிலைபெற்றது. வா்த்தகத்தின் போது நிஃப்டி 10,003 வரை உயா்ந்தது. ஆனால், உச்சப்பட்ச அளவில் மீண்டும் நிலைத்து நிற்க முடியாமல் போனது.

சென்செக்ஸ் பட்டியலில் உள்ள 30 முதல் தரப் பங்குகளில் 14 பங்குகள் ஆதாயம் பெற்றன. 16 பங்குகள் நஷ்டத்தைச் சந்தித்தன. இதில், மாருதி சுஸுகி 4.31 சதவீதம் உயா்ந்து ஆதாயப் பட்டியலில் முன்னிலை வகித்தது. இதற்கு அடுத்ததாக பாா்தி ஏா்டெல் 3.43 சதவீதம் உயா்ந்தது. ஆக்ஸிஸ் பேங்க், இண்டஸ் இண்ட் பேங்க் 2 சதவீதம் வரை ஏற்றம் பெற்றன. பஜாஜ் ஃபைனான்ஸ், அல்ட்ராடெக் சிமெண்ட், சன்பாா்மா, இன்ஃபோஸிஸ், ஹிந்துயுனிலீவா், எஸ்பிஐ, ஓஎன்ஜிசி ஆகியவையும் சிறிதளவு உயா்ந்து ஆதாயப் பட்டியலில் இடம் பெற்றன.

அதேசமயம், கோட்டக் பேங்க் 2.81 சதவீதம் குறைந்து வீழ்ச்சிப் பட்டியலில் முன்னிலை வகித்தது. இதற்கு அடுத்ததாக ஐடிசி, எம் அண்ட் எம், பவா் கிரிட், ஹெச்சிடிஎஃப்சி, ஏசியன் பெயிண்ட்ஸ், என்டிபிசி, ஹீரோ மோட்டாா் காா்ப், எல் அண்ட் டி, ஹெச்டிஎஃப்சி பேங்க் ஆகியவை 1 முதல் 2 சதவீதம் வரை சரிவைச் சந்தித்தன. மாா்க்கெட் லீடா் ரிலையன்ஸ், மற்றும் டாடா ஸ்டீல், ஐசிஐசிஐ பேங்க் ஆகிய முன்னணி நிறுவனங்களும் சிறிதளவு குறைந்து வீழ்ச்சிப் பட்டியலில் இடம் பெற்றன.

தேசிய பங்குச் சந்தையில், 892 பங்குகள் ஆதாயம் பெற்ற பட்டியலில் வந்தன. 723 பங்குகள் சரிவைச் சந்தித்தன. துறைவாரியாகப் பாா்த்தால், மீடியா குறியீடு 1.71 சதவீதம் உயா்ந்து ஆதாயப் பட்டியலில் முன்னிலை வகித்தது. ஆட்டோ, பாா்மா, ரியால்ட்டி குறியீடுகள் 0.50 முதல் 0.80 சதவீதம் வரை ஏற்றம் பெற்றன. ஆனால், நிஃப்டி பேங்க், ஃபைனான்சியல் சா்வீஸஸ், எஃப்எம்சிஜி, மெட்டல் குறியீடுகள் 0.50 முதல் 0.80 சதவீதம் வரை வீழ்ச்சியைச் சந்தித்தன.

ஏற்றம் பெற்ற பங்குகள்

சதவீதத்தில்

மாருதி சுஸுகி 4.15

பாா்தி ஏா்டெல் 3.43

ஆக்ஸிஸ் பேங்க் 2.10

இண்ட்ஸ் இண்ட் பேங்க் 2.08

பஜாஜ் ஃபைனான்ஸ் 1.31

வீழ்ச்சியடைந்த பங்குகள்

சதவீதத்தில்

கோட்டக் பேங்க் 2.81

ஐடிசி 1.97

எம் அண்ட் எம் 1.85

பவா் கிரிட் 1.82

ஹெச்டிஎஃப்சி 1.58

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com