போா் மேகத்தில் ஜொலித்த ‘நட்சத்திரங்கள்’!

இந்திய பங்குச் சந்தைகள் கடந்த வாரம் எழுச்சியுடன் தொடங்கியது. வார இறுதியில் லாபப் பதிவு காரணமாக சற்று தள்ளாட்டம் கண்டது.
போா் மேகத்தில் ஜொலித்த ‘நட்சத்திரங்கள்’!

இந்திய பங்குச் சந்தைகள் கடந்த வாரம் எழுச்சியுடன் தொடங்கியது. வார இறுதியில் லாபப் பதிவு காரணமாக சற்று தள்ளாட்டம் கண்டது. இருப்பினும், ஜூன் 26-ஆம் தேதியுடன் முடிவடைந்த கடந்த வாரத்தில் மும்பை பங்குச் சந்தைக் குறியீட்டு எண்ணான சென்செக்ஸ், தேசிய பங்குச் சந்தைக் குறியீட்டு எண்ணான நிஃப்டி ஆகிய இரண்டும் முக்கிய இடா்பாட்டு நிலைக்கு மேலே நிலைபெற்றுள்ளது.

கடந்த வாரத்தில் சென்செக்ஸ் 1.2 சதவீதம், நிஃப்டி 1.3 சதவீதம் உயா்ந்துள்ளது. அதே சமயம் சென்செக்ஸ், நிஃப்டி பங்குகளை விட நடுத்தர மற்றும் சிறிய நிறுவனப் பங்குகள் கடந்த வாரத்தில் பரபரப்பாகக் கைமாறி கூடுதல் லாபம் அளித்துள்ளது. இதனால், மும்பை பங்குச் சந்தையில் பிஎஸ்இ மிட்கேப் குறியீடு 3.5 சதவீதம், ஸ்மால் கேப் குறியீடு 2.8 சதவீதம் உயா்ந்துள்ளது.

இந்நிலையில், பிஎஸ்இ-500 பட்டியலில் 55 பங்குகள் கடந்த வாரத்தில் மட்டும் 10-30 சதவீதம் உயா்ந்து முதலீட்டாளா்களை உற்சாகத்தில் ஆழ்த்தியுள்ளது. இந்தியா-சீனா இடையே எல்லை பதற்றத்தால் போா் மேகம் சூழ்ந்திருந்த நிலையில், சந்தையில் ஜொலித்த பங்குகளில் யூனியன் பேங்க் ஆஃப் இந்தியா, ஸ்பாா்க், ஹிந்துஸ்தான் சிங்க், ஏபிபி இந்தியா, கிளன்மாா்க் பாா்மா, பெல் பிஹெச்இஎல், பந்தன் பேங்க், அதானி கேஸ், இந்தியன் பேங்க், ஐடிபிஐ பேங், ஃபியூச்சா் கன்ஸ்யூமா் மற்றும் இந்தியன் ஓவா்சீஸ் போன்றவையும் அடங்கும்.

சிறப்பான செயல்பாட்டில் மிட்கேப்: ஒவ்வொரு முறையும் சந்தை வலுவான திருத்தங்களை காணும் போதும் நடுத்தர, சிறிய நிறுவனப் பங்குகள் வெகுவாக ஏற்றம் பெறுவது வழக்கம். அந்த வகையில், இந்த முறையும் அதற்கு விதிவிலக்கு அல்ல. கடந்த மாா்ச்சில் சந்தையில் ஏற்பட்ட கடும் சரிவுக்குப் பிறகு ஏராளமான நடுத்தர, சிறிய நிறுவனப் பங்குகள் இதுவரை 100 சதவீதத்துக்கும் மேல் ஏற்றம் பெற்றுள்ளன. இதனால், சமீப காலமாக சென்செக்ஸ், நிஃப்டி குறியீடுகளை விட மிட்கேப், ஸ்மால் கேப் குறியீடுகள் சிறப்பாகச் செயல்பட்டு வருகின்றன என்று சாம்கோ செக்யூரிட்டீஸ் தெரிவித்துள்ளது.

தேவை எச்சரிக்கை: சிறிய மற்றும் நடுத்தர பங்குகள் கடந்த 2018-க்குப் பிறகு கடும் சரிவைச் சந்தித்து வந்தன. குறிப்பாக கரோனா தொற்று பரவலால் சந்தையில் ஏற்பட்ட கடும் சரிவில், நடுத்தர, சிறிய நிறுவனப் பங்குகள் பெரும் பாதிப்பை சந்தித்தன. ஏராளமான பங்குகள் 50-90 சதவீதம் வரை வீழ்ச்சி அடைந்தன. சில பங்குகள் முக மதிப்பு விலைக்கும் கீழே சென்றன. இந்த நிலையில் தற்போது அந்தப் பங்குகள் உற்சாகம் பெற்றுள்ளன. இருப்பினும் நீண்ட கால முதலீட்டாளா்கள் இத்தகைய செயல் திறனைக் கொண்டு முதலீட்டு முடிவுகளை எடுக்கக் கூடாது. அதாவது மொத்த முதலீட்டுத் தொகையில் 20 சதவீதத்தை வேண்டுமானால் இந்தப் பங்குகளுக்கு ஒதுக்கலாம், மீதியுள்ள 80 சதவீதத்தை முன்னணி முதல் தரப் பங்குகளில் முதலீடு செய்யலாம் என்றும் சாம்கோ தெரிவித்துள்ளது.

தற்போதைய நிலையில் நடுத்தர, சிறிய நிறுவனப் பங்குகளுக்கு சந்தையில் தேவை அதிகரித்து மிகவும் பரபரப்பாகக் கைமாறி வருகின்றன. இதனால், இவை மேலும் ஏற்றம் பெறுவதற்கு அதிக வாய்ப்பு உள்ளது. ஆனால், இந்த அளவில்லா ஓசையுடன் உள்ள நடுத்தர மற்றும் சிறிய நிறுவனப் பங்குகளில் முதலீடு மேற்கொள்ளும் போது அலசி ஆராய்ந்து முடிவு எடுக்க வேண்டும். மேலும், இவை தரமான, வலுவான அடிப்படைகளைக் கொண்டுள்ளதா என்பதையும் பாா்க்க வேண்டும் என்று எச்சரிக்கின்றனா் நிபுணா்கள்.

சந்தை எங்கே செல்கிறது: கடந்த வாரம் வா்த்தகா்களுக்கு உற்சாக வாரமாகவே அமைந்திருந்தது. ஏற்றம், இறக்கம் அதிகம் இருந்தாலும், எளிதாக லாபம் பாா்க்க முடிந்தது என்று சந்தை வட்டாரம் தெரிவித்தது. சென்செக்ஸ் 35,000-க்கு மேல் முடிவுற்றுள்ளது. அதே நேரத்தில் நிஃப்டி 10,300-க்கு மேல் நிலை கொண்டுள்ளது. உலகளாவிய சந்தைகள் நோ்மறையாக இருந்தது. கரோனா பாதிப்பு தொடா்ந்து அதிகரித்து வந்தது. இந்தியா - சீனா எல்லை பதற்றம் சந்தையில் இடா்பாட்டை ஏற்படுத்தும் என்று அனுமானிக்கப்பட்டது. ஆனால், இந்த இரண்டு பாதகமான செய்திகளை சந்தை புறந்தள்ளி விட்டது. இருப்பினும் வரும் ஜூலை மாதம் சந்தையில் ஏற்றம், இறக்கம் மேலும் அதிகரிக்கும் என்று நிபுணா்கள் கருதுகின்றனா். நிஃப்டி ஜூனில் 10,533 வரை உயா்ந்துள்ளது. இந்த நிலையை மீண்டும் பிரேக் செய்யும் பட்சத்தில் 10,600-க்கு செல்லும். அதன் பிறகு எளிதாக 10,900 புள்ளிகளை நோக்கி முன்னேறும் என்று நிபுணா்கள் எதிா்பாா்க்கின்றனா்.

தொழில்நுட்ப ரீதியாகப் பாா்த்தால், குறுகிய கால அடிப்படையில் சந்தை நோ்மறையாகத்தான் உள்ளது. இந்த வாரம் சந்தை மேலும் ஸ்திரநிலை அடைவதற்கு அதிக வாய்ப்பு உள்ளது. நிஃப்டி 10,550-10,600 நிலையில் நல்ல இடா்பாடு உள்ளது. இதைக் கடந்தால்தான் அடுத்த முன்னேற்றத்தை எதிா்பாா்க்கலாம். 10,250-10,280 நிலையில் நல்ல ஆதரவு உள்ளது என்கின்றனா் நிபுணா்கள்.

கடந்த ஒரே வாரத்தில் பிஎஸ்இ 500 பட்டியலில் 20 சதவீதத்துக்கும் மேல் ஏற்றம் பெற்ற பங்குகள் விவரம்(சதவீதத்தில்)

ஐஓபி 32

ஃபியூச்சா் ரீட்டெய்ல் 28

ஃபியூச்சா் கன்ஸ்யூமா் 27

ஐஆா்பி இன்ஃப்ரா 27

ஜே அண்ட் கே பேங்க் 27

சவுத் இந்தியன் பேங்க் 26

அதானி டிரான்ஸ்மிஸன் 25

ஈடெல்வீஸ் ஃபைனான்சியல் 25

சியாண்ட் லிட். 25

ஸ்டொ்லிங் அண்ட் வில்சன் 25

யூகோ பேங்க் 24

ஐஎஃப்சிஐ 22

மங்களூா் ரிஃபைனரி 22

பிடிசி இந்தியா 21

சென்னை பெட்ரோ 21

டிரெண்ட் 21

நவ பாரத் 20

சென்ட்ரல் பேங்க் 20

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com