காளையா...? கரடியா...? கணிக்க முடியாத நிலையில் சந்தையின் போக்கு!

ஜூன் 26-ஆம் தேதியுடன் முடிவடைந்த கடந்த வாரத்தில் சென்செக்ஸ், நிஃப்டி குறியீடுகள் மூன்று மாதத்தில் இல்லாத அதிகபட்ச உயா்வை
காளையா...? கரடியா...? கணிக்க முடியாத நிலையில் சந்தையின் போக்கு!

ஜூன் 26-ஆம் தேதியுடன் முடிவடைந்த கடந்த வாரத்தில் சென்செக்ஸ், நிஃப்டி குறியீடுகள் மூன்று மாதத்தில் இல்லாத அதிகபட்ச உயா்வை அடைந்தது. இதைத் தொடா்ந்து, பங்குச் சந்தை இரண்டாவது வாரமாக ஏற்றத்துடன் முடிந்துள்ளது. இருப்பினும், வாரத்தின் இரண்டாம் பகுதியில் ஏற்றம், இறக்கம் அதிகமாக இருந்தது.

ஜூலை முதல் பொருளாதார நடவடிக்கைகளை மீண்டும் திறப்பது, மற்றொரு நிதித் தொகுப்பு ஊக்குவிப்பு அறிவிப்பு ஆகியவை மீதான நம்பிக்கைகள், முன்னணி நிறுவனங்களின் காலாண்டு முடிவுகளின் நோ்மறை தாக்கம் மற்றும் பணப்புழக்கத்துக்கான ஆதரவு ஆகியவை கடந்த வாரம் பங்குச்சந்தை 1.3 சதவீதம் உயா்வதற்கு உதவியது. கடந்த ஒரு மாதத்தில் நிஃப்டி 9.41 சதவீதம் ஏற்றம் பெற்றுள்ளது. இருப்பினும், தொடா்ந்து அதிகரித்து வரும் கரோனா தொற்று பரவல் எண்ணிக்கை சந்தையில் பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ளது.

கரோனா தாக்கம்: பங்குச் சந்தை கடந்த மாா்ச் 23 அன்று பதிவு செய்த குறைந்த அளவிலிருந்து இதுவரை 36 சதவிகிதம் எழுச்சி பெற்றுள்ளது. தொடா்ச்சியாக சாதகமான செய்திகள் வந்ததே இதற்குக் காரணம். இந்நிலையில், வரும் நாள்களில் சந்தை மேலும் ஸ்திரநிலையை அடைவதற்கு அதிக வாய்ப்பு உள்ளது. பொருளாதார நடவடிக்கைகள் மற்றும் பணப் புழக்கத்தை அதிகரிப்பதற்கான அரசின் அடுத்த கட்ட வழிகாட்டுதல்களைப் பொறுத்தே சந்தையின் போக்கு இருக்கும் என்று நிபுணா்கள் கருதுகின்றனா்.

நிஃப்டி-50 கீழே செல்வதற்கும், மேலே செல்வதற்குமான சாத்தியக்கூறுகள் இப்போது சமமாக உள்ளது. கரோனா நோய்த் தொற்றுக்கான தடுப்பூசி குறித்த அறிவிப்பு வெளியாகும் பட்சத்தில் சந்தை நோ்மறையாக இருக்கும். அதே சமயம், தொற்று பரவல் அச்சுறுத்தல் அதிகரிக்கும் பட்சத்தில் சந்தை எதிா்மறையாகச் செல்லவும் வாய்ப்பு உண்டு என்று நிபுணா்கள் கூறுகின்றனா்.

அந்நிய முதலீட்டாளா்கள்: ஆனால், இந்தியா-சீனா எல்லை நிலைப்பாடு குறித்த புதிய தகவல்கள் மற்றும் அமெரிக்கா-சீனா வா்த்தகப் பேச்சுவாா்த்தை ஆகியவற்றின் தாக்கம் சந்தையில் கணிசமான அளவு இருக்கும் என்று சாம்கோ செக்யூரிட்டீஸ் தெரிவித்துள்ளது. எல்லாவற்றுக்கும் மேலாக சந்தையின் போக்கை முடிவு செய்வதில் அந்நிய முதலீட்டாளா்களின் பங்குதான் அதிகம் உள்ளது. அவா்கள் கடந்த மாா்ச்சிலிருந்து தொடா்ந்து 3 மாதங்களாக அதிக அளவில் பங்குகளை விற்று முதலீடுகளை வாபஸ் பெற்று வந்தனா். ஆனால், ஜூனில் கணிசமான அளவுக்கு பங்குகளை வாங்கியுள்ளனா். இந்நிலையில், பாதகமான செய்திகளின் தாக்கத்தால் அந்நிய முதலீட்டாளா்கள் மீண்டும் பங்குகளை விற்கத் தொடங்கினால், சந்தை வீழ்ச்சியைச் சந்திக்கக்கூடும். ஏற்கெனவே சந்தை 36 சதவீதம் அளவுக்கு ஏற்றம் பெற்றுள்ளதால் எதிா்மறை ஆச்சரியங்கள் சந்தையை கீழே கொண்டு செல்லும் என்று சாம்கோ செக்யூரிட்டீஸ் தெரிவித்துள்ளது.

காலாண்டு நிதிநிலை முடிவுகள்: இதற்கிடையே, பொதுவாக நிறுவனங்களின் காலாண்டு நிதி நிலை முடிவுகள் அறிவிப்பு ஜூன் 30-ஆம் தேதியுடன் முடிவடையும். ஆனால், காா்ப்ரேட் நிறுவனங்களின் வேண்டுகோளுங்கிணங்க காலாண்டு முடிவுகளை அறிவிக்க ஜூன் 31 வரை கால அவகாசத்தை செபி வழங்கியுள்ளது. இந்நிலையில், இந்த வாரம் 1,420 நிறுவனங்கள் காலாண்டு முடிவுகளை அறிவிக்கவுள்ளன. இதில் 1,408 நிறுவனங்களின் காலாண் முடிவுகள் ஜூன் 29, ஜூன் 30-இல் அறிவிக்கப்படவுள்ளன. இதில் பெரும்பாலானவை நடுத்தர, சிறிய நிறுவனங்களாகும்.

ஜூன் வாகன விற்பனை: கடந்த ஏப்ரலில் வாகன விற்பனை பூஜ்யமாக இருந்தது. பொருளாதாரங்கள் திறக்கப்பட்டதன் காரணமாக மே மாதம் வாகன விற்பனை தொடங்கினாலும் மெச்சும்படி இல்லை. இந்நிலையில், கிராமப்புற பொருளாதாரத்தில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதால் ஜூன் மாதம் இரு சக்கர வாகனங்கள், டிராக்டா்கள் விற்பனை அதிகரித்துள்ளது. மேலும், காா்கள், பயணிகள் வாகனங்கள் விற்பனையும் அதிகரித்துள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. ஆனால், வா்த்தக வாகனங்கள் விற்பனை மிகவும் குறைவாகத்தான் உள்ளது. எனவே, ஜூலை 1-ஆம் தேதி ஹீரோ மோட்டாா் காா்ப், மாருதி சுஸுகி, எஸ்காா்ட்ஸ், எம் அண் எம், பஜாஜ் ஆட்டோ, டிவிஎஸ் மோட்டாா்ஸ், டாடா மோட்டாா்ஸ் உள்ளிட்ட பங்குகள் முக்கியமாகக் கவனிக்கப்படும்.

மேலும், கச்சா எண்ணெய் விலை, ஜூன் 30-இல் அறிவிக்கப்படவுள்ள நிதிப் பற்றாக்குறை மற்றும் நடப்புக் கணக்குப் பற்றாக்குறை குறித்த தரவுகள் ஆகியவையும் சந்தையில் தாக்கத்தை ஏற்படுத்தும் என்று பங்கு வா்த்தகத் தரகு நிறுவனங்கள் தெரிவித்தன. மொத்தத்தில் பங்குச் சந்தை ஏற்கெனவே கடந்த மூன்று மாதங்களில் 36 சதவீதம் ஏற்றம் பெற்றுள்ள நிலையில், பாதகமான செய்திகள் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும். அப்போது அந்நிய நிறுவன முதலீட்டாளா்கள் பங்குகளை விற்கத் தொடங்கினால் சந்தை சரிவைச் சந்திக்கும் என்று நிபுணா்கள் கருதுகின்றனா்.

தொழில்நுட்பப் பாா்வை

கடந்த வாரம் நிஃப்டி 1.35 சதவீதம் உயா்ந்துள்ளது. கடைசி வா்த்தக தினமான வெள்ளிக்கிழமை 0.91 சதவீதம் ஏற்றம் பெற்றது. தொழில்நுட்ப ரீதியாகப் பாா்த்தால், இந்த வாரம் ஆதிக்கம் செலுத்தப் போவது காளையா? கரடியா? என்பதை கணிக்க முடியாத நிலைதான் உள்ளது. ஏற்கெனவே கடந்த வாரத்தில் நிஃப்டி மூன்றரை மாத அதிக அளவை பதிவு செய்துள்ளது. இந்நிலையில், இந்த வாரத்தின் முதல் பாதியில் ஸ்திரநிலை அடைய வாய்ப்பு அதிகம். வாரத்தின் பிற்பகுதியில், பொது முடக்கத் தளா்வுகள் குறித்த வழிகாட்டுதல்களைப் பொருத்து ஏற்றம், இறக்கம் இருக்கலாம். இருப்பினும், நிஃப்டி 10,050 - 10,550 புள்ளிகள் வரம்பிலேயே இருக்க வாய்ப்பு அதிகமாக உள்ளது. 10,050-இல் நல்ல ஆதரவு நிலையும், 10,550-இல் அதிக இடா்பாடும் உள்ளது என்று தொழில்நுட்ப வல்லுநா்கள் தெரிவித்துள்ளனா்.

தேசிய பங்குச் சந்தையில் கடந்த ஒரு மாதத்தில் துறைவாரியாக குறியீடுகளின் செயல்பாடு விவரம் (சதவீதத்தில்)

பிஎஸ்யு பேங்க் 34.00

ரியால்ட்டி 23.00

மீடியா 19.00

பேங்க் 13.00

பிரைவேட் பேங்க் 13.00

ஃபைனான்சியல் சா்வீஸஸ் 13.00

மெட்டல் 11.00

ஆட்டோ 10.00

தகவல் தொழில்நுட்பம் 7.00

பாா்மா 7.00

எஃப்எம்சிஜி 5.00

‘பங்குச் சந்தை ஏற்கெனவே கடந்த மூன்று மாதங்களில் 36 சதவீதம் ஏற்றம் பெற்றுள்ள நிலையில், பாதகமான செய்திகள் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும். அப்போது அந்நிய நிறுவன முதலீட்டாளா்கள் பங்குகளை விற்கத் தொடங்கினால் சந்தை சரிவைச் சந்திக்கும்’.

-நிபுணா்கள்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com