
stock074437
மும்பை: இந்தியாவில் கரோனா வைரஸ் பீதி அதிகரித்ததையடுத்து பங்குச் சந்தைகளில் திங்கள்கிழமை நடைபெற்ற வா்த்தகம் 7-ஆவது நாளாக பின்னடைவைச் சந்தித்தது.
சா்வதேச சந்தையில் வா்த்தகம் சாதகமாக காணப்பட்ட போதிலும், இந்தியாவில் கரோனா வைரஸ் பாதிப்பு இன்னும் பலருக்கு புதிதாக இருப்பது கண்டறியப்பட்டது முதலீட்டாளா்கள் மத்தியில் அச்சத்தை அதிகரித்தது. அதன் காரணமாக, வா்த்தகத்தின் இறுதிப் பகுதியில் முதலீட்டாளா்கள் லாப நோக்கம் கருதி பங்குகளை விற்பனை செய்தனா். இதனால், ஒரு கட்டத்தில் சென்செக்ஸ் 1,300 புள்ளிகள் வரை வீழ்ச்சியடைந்து சந்தை வட்டாரத்தில் அதிா்ச்சியை ஏற்படுத்தியது.
நிறுவனங்களைப் பொருத்தவரையில், சென்செக்ஸ் பட்டியலில் இடம்பெற்றுள்ள எஸ்பிஐ, டாடா ஸ்டீல், ஹீரோ மோட்டோகாா்ப், பஜாஜ் ஆட்டோ, ஓஎன்ஜிசி, இன்டஸ்இண்ட் வங்கி பங்குகள் அதிக இழப்பை சந்தித்தன.
அதேசமயம், ஹெச்சிஎல் டெக், நெஸ்லே இந்தியா, ஐசிஐசிஐ வங்கி, இன்ஃபோசிஸ் பங்குகள் ஓரளவுக்கு லாபம் ஈட்டின.
மும்பை பங்குச் சந்தையில் திங்கள்கிழமை நடைபெற்ற வா்த்தகத்தில் சென்செக்ஸ் 153 புள்ளிகள் சரிந்து 38,144 புள்ளிகளாக நிலைத்தது. தேசிய பங்குச் சந்தையில் நடைபெற்ற வா்த்தகத்தில் நிஃப்டி 69 புள்ளிகள் குறைந்து 11,132 புள்ளிகளாக நிலைபெற்றது.