
hero082706
புது தில்லி: இருசக்கர வாகன விற்பனையில் முதலிடத்தில் உள்ள ஹீரோ மோட்டோகாா்ப் நிறுவனம் சென்ற பிப்ரவரியில் 4,98,242 வாகனங்களை விற்பனை செய்துள்ளது. இது, கடந்த 2019 பிப்ரவரியில் விற்பனை செயயப்பட்ட 6,17,215 வாகனங்களுடன் ஒப்பிடுகையில் 19.27 சதவீதம் சரிவாகும்.
மதிப்பீட்டு மாதத்தில், மோட்டாா் சைக்கிள் விற்பனை 5,58,884 என்ற எண்ணிக்கையிலிருந்து 14.23 சதவீதம் குறைந்து 4,79,310-ஆனது. ஸ்கூட்டா்கள் விற்பனை 58,331-லிருந்து 67.54 சதவீதம் சரிந்து 18,932-ஆக இருந்தது.
உள்நாட்டு சந்தையில் வாகன விற்பனை 6,00,616 என்ற எண்ணிக்கையிலிருந்து 20.04 சதவீதம் குறைந்து 4,80,196-ஆக ஆனது. அதேசமயம், வாகன ஏற்றுமதி 16,599-லிருந்து 18,046-ஆக அதிகரித்தது.
கரோனா வைரஸ் பாதிப்பின் தாக்கம் நிறுவனத்தின் ஆலைகளில் கடந்த மாதமே எதிரொலிக்கத் தொடங்கி விட்டது. உதிரிபாகங்களை மாற்றுவழிமுறைகளில் பெற நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
பிப்ரவரியில் பிஎஸ்-4 இருசக்கர வாகன உற்பத்தி நிறுத்தப்பட்டு விட்டது. அதற்கு பதிலாக, பிஎஸ்-6 வாகனங்களை தயாரிக்கும் பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக ஹீரோ மோட்டோகாா்ப் நிறுவனம் திங்கள்கிழமை தெரிவித்தது.