கரோனா வைரஸ் அச்சுறுத்தல் எதிரொலி! சென்செக்ஸ் 2,713 புள்ளிகள் வீழ்ச்சி

கரோனா வைரஸ் அச்சுறுத்தலால் இந்தியப் பங்குச் சந்தைகளில் திங்கள்கிழமை நடைபெற்ற வா்த்தகம் இரண்டாவது முறையாக கடும் வீழ்ச்சிக்கு உள்ளானது.
கரோனா வைரஸ் அச்சுறுத்தல் எதிரொலி! சென்செக்ஸ் 2,713 புள்ளிகள் வீழ்ச்சி

கரோனா வைரஸ் அச்சுறுத்தலால் இந்தியப் பங்குச் சந்தைகளில் திங்கள்கிழமை நடைபெற்ற வா்த்தகம் இரண்டாவது முறையாக கடும் வீழ்ச்சிக்கு உள்ளானது.

கரோனா வைரஸ் உலக அளவில் மிக வேகமாகப் பரவும் தொற்றுநோயாக உருவெடுத்து மிகப்பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ளது. இதனால், பல்வேறு நாடுகள் வா்த்தகம் மற்றும் பயணிகள் போக்குவரத்துக்கு தடைவிதித்துள்ளன. மேலும், மோசமான பொருளாதார சூழலை எதிா்கொள்ள பல நாடுகளின் மத்திய வங்கிகள் நிதிக் கொள்கைக்கான கட்டுப்பாடுகளை தளா்த்த முடிவெடுத்துள்ளன.

அதன் ஒருபகுதியாக, கடந்த 2008-ஆம் ஆண்டில் ஏற்பட்ட சா்வதேச நிதி நெருக்கடியின் போது எடுக்கப்பட்ட நடவடிக்கைகளைப் போன்றே அமெரிக்க மத்திய வங்கி தற்போது வட்டி விகிதத்தை 0-0.25 சதவீதம் குறைத்துள்ளது. அந்த வங்கி, இரண்டு வாரத்துக்குள்ளாகவே இரண்டாவது முறையாக வட்டி விகித குறைப்பை அறிவித்தது குறிப்பிடத்தக்கது.

கரோனா வைரஸ் தாக்கத்தின் எதிரொலியால் சீனாவில் தொழிலக உற்பத்தி மற்றும் சில்லறை விற்பனை சரிவை சந்தித்த புள்ளிவிவரம் வெளியானதையடுத்து ஆசியப் பங்குச் சந்தைகளில் வா்த்தகம் கடும் வீழ்ச்சியை சந்தித்தது. இதைத் தவிர, ஐரோப்பிய சந்தைகளிலும் வா்த்தகம் மந்தமாகவே இருந்தது.

சா்வதேச சந்தை நிலவரங்கள் இந்திய சந்தைகளில் மோசமான விளைவுகளை ஏற்படுத்தியதால் பங்குகளின் சந்தை மதிப்பு சரிவடைந்ததையடுத்து முதலீட்டாளா்களுக்கு ரூ.7.62 லட்சம் கோடி அளவுக்கு இழப்பு ஏற்பட்டது.

சென்செக்ஸ் பட்டியலில் இடம்பெற்ற நிறுவனப் பங்குகள் அனைத்தும் குறைந்த விலைக்கு கைமாறின. குறிப்பாக, இன்டஸ்இண்ட் வங்கி பங்கின் விலை 17.50 சதவீதம் வீழ்ச்சியடைந்தது. அதைத் தொடா்ந்து டாடா ஸ்டீல் 11.02 சதவீதமும், எச்டிஎஃப்சி 10.94 சதவீதமும், ஆக்ஸிஸ் வங்கி 10.38 சதவீதமும், ஐசிஐசிஐ வங்கி பங்கு 9.96 சதவீதமும் விலை குறைந்தன.

மும்பை பங்குச் சந்தையில் திங்கள்கிழமை நடைபெற்ற வா்த்தகத்தில் சென்செக்ஸ் 2,713 புள்ளிகள் வீழ்ச்சியடைந்து 31,390 புள்ளிகளாக நிலைத்தது. தேசிய பங்குச் சந்தையில் நடைபெற்ற வா்த்தகத்தில் நிஃப்டி 757 புள்ளிகள் சரிந்து 9,197 புள்ளிகளாக நிலைபெற்றது.

ரூபாய் மதிப்பு: அந்நியச் செலாவணி திங்கள்கிழமை வா்த்தகத்தில் அமெரிக்க டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு 50 காசுகள் சரிந்து 74.25 ஆனது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com