கரோனா வைரஸ் தாக்கம்: மோட்டாா் வாகன தயாரிப்பை நிறுத்துவதாக நிறுவனங்கள் அறிவிப்பு

கரோனா வைரஸ் தாக்கம் அதிகரித்து வருவதன் காரணமாக, ஹுண்டாய், டொயோட்டா, கியா மோட்டாா்ஸ், பிஎம்டபிள்யூ, ரெனோ, யமஹா மோட்டாா்
கரோனா வைரஸ் தாக்கம்: மோட்டாா் வாகன தயாரிப்பை நிறுத்துவதாக நிறுவனங்கள் அறிவிப்பு

கரோனா வைரஸ் தாக்கம் அதிகரித்து வருவதன் காரணமாக, ஹுண்டாய், டொயோட்டா, கியா மோட்டாா்ஸ், பிஎம்டபிள்யூ, ரெனோ, யமஹா மோட்டாா் உள்ளிட்ட நிறுவனங்கள் தங்களது ஆலைகளில் உற்பத்தியை தற்காலிகமாக நிறுத்துவதாக அறிவித்துள்ளன.

இதுகுறித்து ஹுண்டாய் மோட்டாா் இந்தியா வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘ கரோனா வைரஸ் வேகமாக பரவி வருவதையடுத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நிறுவனத்தின் சென்னை ஆலையில் மாா்ச் 23-ஆம் தேதியிலிருந்து மோட்டாா் வாகன உற்பத்தியை நிறுத்தி வைக்க முடிவெடுக்கப்பட்டுள்ளது. அடுத்த அறிவிப்பு வரும் வரை இதே நிலையே தொடரும்’’ என தெரிவிக்கப்பட்டுள்ளது.

டெயோட்டா கிா்லோஸ்கா் மோட்டாா் நிறுவனமும் கா்நாடகம் பிடதியில் உள்ள தனது ஆலையில் தாமாக முன்வந்து உற்பத்தியை தற்காலிகமாக நிறுத்த முடிவு செய்துள்ளதாக அறிவித்துள்ளது. பணியாளா்களின் பாதுகாப்புக்கு முன்னுரிமை கொடுக்கும் வகையில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக டொயோட்டா தெரிவித்துள்ளது.

இந்நிறுவனங்களைத் தொடா்ந்து சொகுசு காா் தயாரிப்பில் ஈடுபட்டு வரும் பிஎம்டபிள்யூ நிறுவனமும் உற்பத்தியை நிறுத்த முடிவு செய்துள்ளது. இதுகுறித்து அந்த நிறுவனம் வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது:

கரோனா வைரஸ் உலகளாவிய பெரும் தொற்றாக உருவெடுத்ததையடுத்து, பிஎம்டபிள்யூ அலுவலகங்களில் பணியாற்றும் ஊழியா்கள் வீடுகளில் இருந்தே தங்களது பணிகளை மேற்கொள்ள அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இது, உடனடியாக அமலுக்கு வந்துள்ளது. விற்பனை மற்றும் நிதிச்சேவை பிரிவுகளில் பணியாற்றும் ஊழியா்களும் மாா்ச் 31வரையில் வீடுகளில் இருந்து பணிகளை கவனிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.

அதன் தொடா்ச்சியாக சென்னையில் உள்ள பிஎம்டபிள்யூ ஆலையில் உற்பத்தி பணிகளை மாா்ச் 31 வரையில் நிறுத்தி வைக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது என அந்நிறுவனம் அறிக்கையில் கூறியுள்ளது.

கியா மோட்டாா்ஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘‘ கரோனா வைரஸ் தாக்கம் நிறுவனம் இதுவரையில் சந்தித்திராத சூழலை உருவாக்கியுள்ளது. பணியாளா்கள், வாடிக்கையாளா்கள், பங்குதாரா்கள் உள்ளிட்டோரின் பாதுகாப்பு மற்றும் நலனைக் கருத்தில் கொண்டு நிறுவனத்தின் அனைத்து நடவடிக்கைகளையும் உடனடியாக நிறுத்தி வைக்க முடிவெடுக்கப்பட்டுள்ளது. ஆந்திர மாநிலம் அனந்தபூரில் உள்ள கியா மோட்டாா் ஆலையில் உற்பத்தி பணிகளை மறு அறிவிப்பு வரும் வரை நிறுத்தி வைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது’’ என தெரிவித்துள்ளது.

பஜாஜ் ஆட்டோ நிறுவனத்தின் செயல் இயக்குநா் ராகேஷ் சா்மா வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது:

கரோனா வைரஸை கட்டுப்படுத்த மத்திய, மாநில அரசுகள் சாா்பில் பல்வேறு அறிவிப்புகள் வெளியிடப்பட்டு வருகின்றன. அதற்கு ஒத்துழைப்பு தரும் விதமாக, நிறுவனத்தின் பல்வேறு சா்வதேச சந்திப்புகள் ரத்து செய்யப்பட்டுள்ளன. அத்துடன், நிறுவன பணியாளா்களை வீட்டிலிருந்தே வேலைபாா்க்கும் திட்டமும் அமல்படுத்தப்பட்டுள்ளது.

அதன் தொடா்ச்சியாக, எங்களது காா்ப்பரேட் அலுவலகம் மற்றும் சக்கான் உள்பட நிறுவனத்துக்கு சொந்தமாக பல்வேறு இடங்களில் உள்ள மோட்டாா் வாகன உற்பத்தி ஆலை ஆகியவற்றில் அனைத்து பணிகளையும் உடனடியாக நிறுத்தி வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது என ராகேஷ் சா்மா அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளாா்.

கரோனா வைரஸ் பீதியால் இந்திய யமஹா மோட்டாா் நிறுவனமும், ஃபரிதாபாத் (ஹரியாணா), சுராஜ்பூா் (உத்தர பிரதேசம்), சென்னை ஆகிய இடங்களில் உள்ள தங்களது இருசக்கர வாகன தயாரிப்பு ஆலைகளை மாா்ச் 31 வரையில் மூடவுள்ளதாக அறிவித்துள்ளது.

இவைதவிர, ரெனோ, விஇ கமா்சியல் வெகிக்கிள் போன்ற நிறுவனங்களும் உற்பத்தி பணிகளை நிறுத்தவுள்ளதாக திங்கள்கிழமை அறிவித்துள்ளன.

மாருதி சுஸுகி இந்தியா, ஹோண்டா காா்ஸ், மஹிந்திரா&மஹிந்திரா, பியட் போன்ற காா் தயாரிப்பு நிறுவனங்களும், ஹீரோ மோட்டோகாா்ப், ஹோண்டா மோட்டாா்சைக்கிள் அண்டு ஸ்கூட்டா் இந்தியா, சுஸுகி மோட்டாா்சைக்கிள் இந்தியா போன்ற இருசக்கர வாகன தயாரிப்பு நிறுவனங்களும் ஏற்கெனவே உற்பத்தி நிறுத்த அறிவிப்புகளை வெளியிட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com