பொது முடக்கம் நீட்டிப்பு: ஏலக்காய் விவசாயிகளுக்கு சிக்கல்

கரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கையாக பொது முடக்கம் நீட்டிக்கப்பட்டுள்ளதால், ஏலக்காய் தோட்டங்களில் பயிர் பராமரிப்புப் பணிகளை மேற்கொள்வதில் தமிழக விவசாயிகளுக்குச் சிக்கல் ஏற்பட்டுள்ளது. 
இடுக்கி  மாவட்டத்திலுள்ள ஏலக்காய்  தோட்டம்.
இடுக்கி  மாவட்டத்திலுள்ள ஏலக்காய்  தோட்டம்.



கரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கையாக பொது முடக்கம் நீட்டிக்கப்பட்டுள்ளதால், ஏலக்காய் தோட்டங்களில் பயிர் பராமரிப்புப் பணிகளை மேற்கொள்வதில் தமிழக விவசாயிகளுக்குச் சிக்கல் ஏற்பட்டுள்ளது. 

கேரள மாநிலம், இடுக்கி மாவட்டத்தில் 1. 25 லட்சம் ஏக்கர் பரப்பளவில் ஏலக்காய் விவசாயம் நடைபெற்று வருகிறது. இதில் வண்டிப் பெரியாறு, பீர்மேடு, தேவிகுளம், உடும்பன்சோலை ஆகிய பகுதிகளில் தமிழகத்தைச் சேர்ந்த 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட விவசாயிகள் ஏலக்காய் சாகுபடியில் ஈடுபட்டு வருகின்றனர். இவர்கள், தமிழகப் பகுதிகளிலிருந்து தேனி மாவட்டம் குமுளி, கம்பம் மெட்டு, போடி மெட்டு வழியாக கேரளத்தில் உள்ள ஏலக்காய் தோட்டங்களுக்குச் சென்று வருகின்றனர்.

தமிழக-கேரள எல்லைகள் மூடல்:   இந்த நிலையில், கரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கையாக கடந்த மார்ச் 23 ஆம் தேதி முதல் குமுளி, கம்பம்மெட்டு, போடிமெட்டு ஆகிய பகுதிகளில் தமிழக-கேரள எல்லைகள் மூடப்பட்டு, இரு மாநிலங்களிடையே போக்குவத்து தடை செய்யப்பட்டுள்ளது. இதனால்,  தமிழகத்தைச் சேர்ந்த விவசாயிகள் கடந்த 50 நாள்களுக்கும் மேலாக ஏலக்காய் தோட்டங்களுக்கு சென்று வர முடியாத நிலையில் உள்ளனர். அவர்கள் தங்களது சொந்த ஊர்களில் இருந்தவாறு செல்லிடப்பேசி மூலம் தோட்டத் தொழிலாளர்களுக்கு ஆலோசனை வழங்கியும், வங்கிக் கணக்கு மூலம் சம்பளம் வழங்கியும் நிலைமையை சமாளித்து வருகின்றனர்.

பருவமழை தொடங்கும் வாய்ப்பு:    தற்போது கேரளத்தில் வரும் ஜூன் 5 ஆம் தேதி தென்மேற்கு பருவமழை தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த மழைக்கு முன்னர், தற்போது காய்பிடிக்கும் பருவத்தில் உள்ள ஏலக்காய் தோட்டங்களில் பயிர் பாதுகாப்பு, பயிர் ஊக்கி மருந்துகள் தெளித்தல், உரமிடுதல், வேர் அழுகல் தடுப்பு மற்றும் மறு நடவுப் பணிகள் ஆகியவற்றை மேற்கொள்ள வேண்டியுள்ளது. ஏலக்காய்கள் தோட்டங்களை நேரில் சென்று பார்வையிட்டும், மண் மற்றும் செடிகளின் தன்மைக்கு ஏற்பவும் விவசாயிகளின் நேரடிப் பார்வையில் மட்டுமே பணிகளை மேற்கொள்ள முடியும். 

ஆனால், பொது முடக்க நீடிப்பால் தமிழக-கேரள எல்லைகள் வழியாக தேனி மாவட்டத்திலிருந்து இடுக்கி மாவட்டப் பகுதிகளுக்குச் சென்று வருவதிலும், சந்தை வாய்ப்பிற்கு ஏற்ப ஏற்றுமதி தரத்திலான ஏலக்காய்களை உற்பத்தி செய்வதிலும் தமிழகத்தைச் சேர்ந்த விவசாயிகளுக்குச் சிக்கல் ஏற்பட்டுள்ளது. 

3 ஆவது ஆண்டாக தொடரும் சிக்கல்:  இடுக்கி மாவட்டத்தில் கடந்த 2018-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் தொடங்கி  செப்டம்பர் மாதம் பெய்த கன மழையால் ஏலக்காய் தோட்டங்கள் தண்ணீரில் மூழ்கி விவசாயிகள் பெரும் நஷ்டத்தைச் சந்தித்தனர். அதையடுத்து கடந்த 2019-ம் ஆண்டில் தென்மேற்கு பருவமழை பொய்த்ததால் செடிகள் கருகியும், மகசூல் குறைந்தும் தொடர்ந்து நஷ்டம் ஏற்பட்டது. நடப்பு ஆண்டில், கரோனா தடுப்பு பொது முடக்கத்தால் தமிழக-கேரள எல்லைகள் மூடப்பட்டுள்ள நிலையில் வரும் ஜூன் மாதம் தென்மேற்குப் பருவமழையை எதிர்நோக்கி பயிர் பராமரிப்பு பணிகளை மேற்கொள்ள முடியாமல் தமிழகத்தைச் சேர்ந்த விவசாயிகள் கலக்கத்தில் உள்ளனர்.

2, 500 டன் ஏலக்காய் தேக்கம்:    பொது முடக்கம் காரணமாக நறுமணப் பொருள் வாரியம் சார்பில் இடுக்கி மாவட்டத்தில் புத்தடி, தேனி மாவட்டத்தில் போடி ஆகிய இடங்களில் கடந்த மார்ச் 19-ம் தேதி முதல் ஏலக்காய் மின்னணு ஏல வர்த்தகம் நிறுத்தப்பட்டது. இதனால், ஏலக்காய் விவசாயிகளிடம் 2, 500 டன் வரை ஏலக்காய் விற்பனை செய்ய முடியாமல் தேங்கியுள்ளது. 

இந்த நிலையில், ஏலக்காய் மின்னணு ஏல வர்த்தக நடைமுறையை மாற்றி, "இ-நாம்' (E-NAM) என்ற புதிய வர்த்தக நடைமுறையை செயல்படுத்த நறுமணப் பொருள் வாரியம் திட்டமிட்டு வருகிறது. 

விவசாயிகள் மற்றும் வர்த்தகர்கள் நேரடி பங்கேற்பு இல்லாத "இ-நாம்' வர்த்தக முறைக்கு விவசாயிகள் மற்றும் வியாபாரிகள் மத்தியில் பலத்த எதிர்ப்பு கிளம்பியுள்ளது. மேலும், தமிழக-கேரள மாநிலங்களிடையே போக்குவரத்து முடக்கப்பட்டுள்ள நிலையில், தமிழகத்தைச் சேர்ந்த ஏலக்காய் விவசாயிகள் ஏலக்காய்களை விற்பனைக்கு கொண்டு வருவதிலும், வியாபாரிகள் வர்த்தகத்தில் பங்கேற்பதிலும் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

இப் பிரச்சனை குறித்து தமிழக மற்றும் கேரள அரசுகள் பேச்சுவார்த்தை நடத்தி, தமிழகத்தைச் சேர்ந்த ஏலக்காய் விவசாயிகள் மற்றும் வியாபாரிகள் பருவமழை முன்னேற்பாடு பராமரிப்பு பணிகளை மேற்கொள்ளவதற்கும், வர்த்தக நடைமுறையில் பங்கேற்கவும் இடுக்கி மாவட்டத்திற்குச் சென்று வர அனுமதி வழங்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com