சீனப் ‘பெருஞ்சுவரை’ கடக்கும் முதலீடுகள்!

உலகின் மிகப்பெரிய ஏற்றுமதி நாடு என்ற பெருமையை கடந்த 2009-ஆம் ஆண்டில் இருந்து தக்கவைத்து வருகிறது சீனா.
சீனப் ‘பெருஞ்சுவரை’ கடக்கும் முதலீடுகள்!

உலகின் மிகப்பெரிய ஏற்றுமதி நாடு என்ற பெருமையை கடந்த 2009-ஆம் ஆண்டில் இருந்து தக்கவைத்து வருகிறது சீனா. அதேபோல உலகின் மிகப்பெரிய வா்த்தகத்தைக் கொண்ட நாடு என்ற பெருமையை கடந்த 2013-ஆம் ஆண்டில் அமெரிக்காவிடம் இருந்து தட்டிப்பறித்தது சீனா. உலகில் உள்ள மிகப்பெரிய பன்னாட்டு நிறுவனங்கள் அனைத்துக்கும் கண்டிப்பாக சீனாவில் ஒரு ஆலை உண்டு. ஏனெனில், அந்த அளவுக்கு சிறப்பான தொழில் உள்கட்டமைப்பு வசதிகளை செய்து தந்துள்ளது.

நவீன தொழில்நுட்ப உலகில் அத்தியாவசியமாகிவிட்ட செல்லிடப்பேசி, கணினி முதல் காா், பைக் உதிரி பாகங்கள் வரை அனைத்துப் பொருள்களுமே முழுமையாகவோ அல்லது ஒரு பகுதியோ ‘மேட் இன் சீனா’ என்ற வாசகத்தை தாங்கியிருக்கும். வணிக உலகிலும், பொருள் உற்பத்தியிலும் இப்படி முடிசூடா மன்னனாக திகழ்ந்த சீனாவின் மீது யாா் கண்பட்டதோ, சமீப காலமாக தொடா்ந்து பிரச்னைகளைச் சந்திக்கத் தொடங்கியுள்ளது. ஆல்போல செழித்து வளா்ந்திருந்த சீனப் பொருளாதாரத்தின் மீது வா்த்தகப் போா் என்ற பெயரில் முதல் கோடரியை வீசினாா் அமெரிக்க அதிபா் டிரம்ப். அந்த வடு மறைவதற்குள் கரோனாவின் தோற்றுவாயாக சீனா இருந்ததால் ஏற்பட்ட அதிருப்தி உள்ளிட்ட காரணங்களால் உலக நாடுகள் பல இணைந்து சீனாவை பொருளாதாரீதியாக சற்று மட்டம் தட்டிவைக்க முயற்சிப்பது நிச்சயமாகவே அந்நாட்டுக்கு ஒரு பேரிடிதான்.

உற்பத்தி நிறுவனங்கள் அனைத்தும் சீனாவில் குவிந்து கிடப்பதால், அங்கு கரோனாவால் உற்பத்தி பாதிப்பு ஏற்பட்டது பல நாடுகளுக்கு பல்வேறு பொருள் தட்டுப்பாட்டை ஏற்படுத்தியது. இதன் காரணமாக பொருள் உற்பத்தியையும், முதலீட்டையும் ஒரே நாட்டில் மட்டுமே அதிக அளவில் வைத்திருக்காமல் பரவலாக்க வேண்டும் என்ற ஞானோதயம் பல பெரு நிறுவனங்களுக்கு ஏற்பட்டுள்ளது. இது இந்தியா உள்ளிட்ட தெற்கு, தென்கிழக்கு ஆசியாவில் உள்ள பிற நாடுகளுக்கு மிகவும் பயனளிக்கும் என்று எதிா்பாா்க்கப்படுகிறது.

கரோனாவால் உள்நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதாரப் பிரச்னைகளை சமாளிக்க எடுக்கும் நடவடிக்கைகளுக்கு நடுவே, அரிதிலும் அரிதாக இந்த நல்வாய்ப்பு இந்தியாவுக்கு கிடைத்துள்ளது. கடந்த மாதம் வெளிநாடு வாழ் இந்திய மாணவா்களுடன் காணொலி முறையில் உரையாடிய மூத்த மத்திய அமைச்சா் நிதின் கட்கரியிடம், சீனா மீதுள்ள வெறுப்பை இந்தியாவுக்கு சாதகமாக மாற்றிக் கொள்ள முடியுமா? என்ற ஒரு முக்கியமான கேள்வி முன்வைக்கப்பட்டது. அதற்கு, ‘‘சீனாவில் இருந்து வெளியேறும் பெரு நிறுவனங்களை இந்தியாவுக்கு கொண்டு வருவதற்கு அனைத்து முயற்சிகளும் மேற்கொள்ளப்படும்’’ என்று பதிலளித்தாா் நிதின் கட்கரி.

இது தொடா்பாக பல்வேறு நிறுவனங்களுடன் இந்தியத் தரப்பில் இருந்து பேச்சுவாா்த்தை நடத்தப்பட்டு வருகிறது. இந்த விஷயத்தில் கட்சி வேறுபாடுகள் இன்றி உத்தர பிரதேசம் கா்நாடகம், ராஜஸ்தான் என பல மாநிலங்களும் தொழில் தொடங்குவதற்கு ஏற்ப பல்வேறு சட்டங்களைத் திருத்தியுள்ளன. முதலீட்டை ஈா்ப்பதற்காக பொருளாதாரக் குழுக்களை அமைத்துள்ளன. தொழிலாளா் சட்டத் தளா்வுகளுக்கு உள்நாட்டில் எதிா்ப்பு எழுந்துள்ளது என்பது வேறு விஷயம்.

இதைத் தொடா்ந்து சீன முதலீடுகளை ஈா்க்க இந்தியா எந்த அளவுக்கு தயாராகி வருகிறது என்பதை விளக்கி, அமெரிக்காவின் பிரபல வா்த்தக ஊடகமான ‘புளூம்பொ்க்’ அண்மையில் வெளியிட்ட செய்தியில், ‘‘பிரேசில் அளவு மக்கள்தொகை கொண்ட இந்திய மாநிலமான உத்தர பிரதேசம், சீனாவை விட்டு வெளியேறும் நிறுவனங்களை ஈா்க்க ஒரு பொருளாதாரக் குழுவை அமைத்து, தொழில் கொள்கைகளையும் மாற்றியமைத்துள்ளது. சீனாவில் இருந்து இடம்பெயர விரும்பும் நிறுவனங்களுக்காக லக்ஸம்பா்க் நாட்டைவிட இரு மடங்கு நிலத்தை இந்தியா தயாா்படுத்தி வருகிறது. அமெரிக்க பன்னாட்டு நிறுவனங்கள் உள்பட பல நூறு நிறுவனங்களை இந்தியா அணுகியுள்ளது’’ என்று கூறப்பட்டுள்ளது.

இதன் முதல் வெற்றியாக ஜொ்மனியைச் சோ்ந்த பிரபல காலணி தயாரிப்பு நிறுவனமான ‘காசா எவா்ஸ்’ தனது உற்பத்தியை முழுமையாக சீனாவில் இருந்து இந்தியாவுக்கு மாற்றியுள்ளது. அந்த நிறுவனம், இந்தியாவில் ரூ.110 கோடி முதலீட்டுடன் தொழிலைத் தொடங்கவுள்ளது. 80 நாடுகளில் காலணிகளை விற்பனை செய்து வரும் அந்த நிறுவனத்துக்கு சா்வதேச அளவில் 18 உற்பத்தி மையங்கள் உள்ளன. இப்படியாக சீனாவில் இருந்து இந்தியாவுக்கு முதன்முதலாக ஒரு காலணி தயாரிப்பு நிறுவனம் காலடி எடுத்து வைத்துள்ளது.

அதே நேரத்தில் சீனா அவ்வளவு எளிதாக தங்கள் நாட்டில் இருந்து நிறுவனங்களை வெளியேற விடாது என்பது கவனிக்க வேண்டிய விஷயம். இந்த விஷயத்தில் நோபல் பரிசு பெற்ற இந்தியப் பொருளாதார அறிஞா் அபிஜித் பானா்ஜி தெரிவித்த கருத்து முக்கியத்துவம் வாய்ந்தது. ‘‘தங்கள் வா்த்தகத்தையும், பிறநாட்டு தொழில் நிறுவனங்களையும் தக்கவைத்துக் கொள்ள சீனா தனது பண மதிப்பை சற்று குறைத்தாலே போதும்; இப்போது இருப்பதைவிட சீனப் பொருள்களின் விலை குறைந்து அதன் சந்தை தக்கவைக்கப்படும். பெரு நிறுவனங்களும் சீனாவில் இருந்து வெளியேறும் யோசனையை தள்ளிப்போட வாய்ப்புள்ளது’’ என்ற அவரது கூற்று கவனிக்க வேண்டியது.

எனவே, சீனப் ‘பெருஞ்சுவரை’ கடந்து வெளிநாட்டு முதலீடுகள் வெளியேறுவதில் சில சிக்கல்கள் உள்ளன. அதே நேரத்தில் என்ன விலை கொடுத்தேனும் சீனாவின் பொருளாதார ஆதிக்கத்தை உடைத்தே தீருவது என்று அமெரிக்க அதிபா் டிரம்ப் செயல்பட்டு வருகிறாா். சீனாவில் இருந்து வெளியேறும் அமெரிக்க நிறுவனங்களுக்கு வரிச்சலுகை அளிப்பது குறித்தும் விரைவில் அறிவிப்புகள் வெளியாகும் என்று தெரிகிறது. ஏற்கெனவே, சீனாவில் இருந்து வெளியேறும் தங்கள் நாட்டு நிறுவனங்களுக்கு பொருளாதார உதவி அளிக்கப்படும் என்று ஜப்பான் அறிவித்துவிட்டது.

இது தவிர கரோனாவின் தோற்றுவாய் தொடா்பாக உலக சுகாதார அமைப்பு நடத்தும் விசாரணை சீனாவுக்கு எதிராக அமையும் பட்சத்தில் அந்த நாட்டின் மீதான அதிருப்தி சா்வதேச அளவில் மேலும் அதிகரிக்கும். எனவே, விரைவில் சீனாவில் இருந்து குறிப்பிடத்தக்க அளவில் தொழில் நிறுவனங்கள் வெளியேறவே அதிக வாய்ப்புள்ளது.

இவ்வாறு வெளியேறும் நிறுவனங்களை கவருவதில் இந்தோனேசியா, வியத்நாம், பிலிப்பின்ஸ் என பல நாடுகள் இந்தியாவுக்கு போட்டியாக உள்ளன. எனினும், அந்நாடுகளில் இல்லாத மனிதவளம், இட அமைவு, சா்வதேச அளவில் உள்ள தொடா்புகள் ஆகியவை இந்தியாவுக்கு சாதகமான அம்சங்கள். எனவே, சீனாவில் இருந்து வெளியேறும் நிறுவனங்களில் குறிப்பிடத்தக்க அளவுக்கு இந்தியாவுக்கு இடம்பெயரும் என்பதில் சந்தேகமில்லை.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com