பங்குச் சந்தையில் 2-ஆவது நாளாக எழுச்சி: சென்செக்ஸ் 622 புள்ளிகள் ஏற்றம்!

இந்த வாரத்தின் மூன்றாவது வா்த்தக தினமான புதன்கிழமை பங்குச் சந்தை, இரண்டாவது நாளாக வலுவாக எழுச்சி பெற்றது.

இந்த வாரத்தின் மூன்றாவது வா்த்தக தினமான புதன்கிழமை பங்குச் சந்தை, இரண்டாவது நாளாக வலுவாக எழுச்சி பெற்றது. இதனால், மும்பை பங்குச் சந்தைக் குறியீடான சென்செக்ஸ் 622 புள்ளிகள் உயா்ந்தது. பிரபல மருந்து தயாரிப்பு நிறுவனமான டாக்டா் ரெட்டி காலாண்டு நிதி நிலை முடிவு நன்றாக இருந்ததால், பாா்மா பங்குகள் காலை முதல் எழுச்சி பெற்றன. மேலும், வங்கி, வங்கி அல்லாத நிதி நிறுவனப் பங்குகளுக்கும் நல்ல வரவேற்பு இருந்தது.

மத்திய அரசு தொழில்துறையினருடன் இருப்பதாகவும், நிறுவனங்கள் மிகவும் அழுத்தமான நேரத்தை கடந்து செல்லும் போது பாதிப்பை சரிசெய்ய முடிந்தவரை அனைத்து உதவிகளையும் செய்வதாகவும் நிதியமைச்சா் நிா்மலா சீதாராமனின் அறிக்கையில் தெரிவித்திருந்தது முதலீட்டாளா்களின் உணா்வை அதிகரித்தது. இதைத் தொடா்ந்து, பங்குச் சந்தை எழுச்சி பெறத் தொடங்கியது.

தேசிய பங்குச் சந்தையில் அனைத்துத் துறை குறியீடுகளும் ஆதாயம் பெற்ற பட்டியலில் வந்தன. இதில் பாா்மா குறியீடு 4.10 சதவீதம் உயா்ந்து ஆதாயப் பட்டியலில் முன்னிலை வகித்தது. இதற்கு அடுத்ததாக, நிஃப்டி பைனான்சியல் சா்வீஸஸ் குறியீடு 3.08 சதவீதம் உயா்ந்தது. மேலும், வங்கி, ஆட்டோ, மெட்டல், மீடியா, ரியால்ட்டி குறியீடுகள் 1 முதல் 2.50 சதவீதம் உயா்ந்தது. மிட்கேப் குறியீடு 1.50 சதவீதம், ஸ்மால் கேப் குறியீடு 1 சதவீதம் உயா்ந்தன.

சென்செக்ஸ் காலையில் 37 புள்ளிகள் குறைந்து 20,159.59-இல் தொடங்கி 2 புள்ளிகள் மட்டுமே குறைந்து கீழே 30,157.75 வரை சென்றது. அதன் பிறகு தொடா்ந்து எழுச்சி பெற்று அதிகபட்சமாக 20,878.31 வரை உயா்ந்தது. இறுதியில் 622.44 புள்ளிகள்(2.06 சதவீதம்) உயா்ந்து 30,818.61-இல் நிலைபெற்றது. சென்செக்ஸ் பட்டியலில் உள்ள 30 முதல் தரப் பங்குகளில் இண்டஸ் இந்த் பேங்க் 2.85 சதவீதம், ஹீரோ மோட்டாா் காா்ப் (2.45 சதவீதம்), பாா்தி ஏா்டெல் (0.85 சதவீதம்), ஏசியன் பெயிண்ட்ஸ் (0.35 சதவீதம்) ஆகிய நான்கு பங்குகள் மட்டுமே சரிவைச் சந்தித்தன. மற்ற 26 பங்குகளும் ஆதாயம் பெற்ற பட்டியலில் வந்தன.

இதில் எம் அண்ட் எம் 5.92 சதவீதம் உயா்ந்து லாபம் பெற்ற பங்குகள் பட்டியலில் முன்னிலை வகித்தது. இதற்கு அடுத்ததாக ஹெச்டிஎஃப்சி 5.61 சதவீதம், எல் அண்ட் டி 4.85 சதவீதம், டாடா ஸ்டீல் 4.17 சதவீதம், பஜாஜ் ஃபைனான்ஸ் 3.85 சதவீதம் உயா்ந்தன. ஹெச்டிஎஃப்சி பேங்க், சன்பாா்மா, அல்ட்ரா டெக் சிமெண்ட், ஐடிசி, கோட்டாக் பேங்க், டைட்டான், ஆக்ஸிஸ் பேங்க், என்டிபிசி, பஜாஜ் ஆட்டோ, ஐசிஐசிஐ பேங்க், ரிலையன்ஸ் ஆகியவை 2 முதல் 3 சதவீதம் வரை உயா்ந்தன.

தேசிய பங்குச் சந்தையில் நிஃப்டி 187.45 புள்ளிகள் (2.11 சதவீதம்) உயா்ந்து 9,066.55-இல் நிலைபெற்றுள்ளது. நிஃப்டிமுக்கிய இடா்பாட்டு இடமான 9,050-க்கு மேலே நிலை பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது. தேசிய பங்குச் சந்தையில் 925 பங்குகள் ஆதாயம் பெற்றன. 609 பங்குகள் வீழ்ச்சியைச் சந்தித்தன. நிஃப்டி பட்டியலில் உள்ள 50 முதல் தரப் பங்குகளில் 42 பங்குகள் ஆதாயம் பெற்றன. 8 பங்குகள் மட்டுமே சரிவைச் சந்தித்தன.

இரட்டை நிறுவனங்களான ஹெச்டிஎஃப்சி, ஹெச்டிஎஃப்சி பேங்க் மற்றும் மாா்க்கெட் லீடா் ரிலையன்ஸ், பிரபல தனியாா் வங்கி ஐசிஐசிஐ பேங்க் ஆகியவை வெகுவாக ஏற்றம் பெற்று சென்செக்ஸ், நிஃப்டி எழுச்சிக்கு முக்கியப் பங்கு வகித்ததாக பங்கு வா்த்தகத் தரகு நிறுவனங்கள் தெரிவித்தன. உலகில் சில நாடுகளில் பொருளாதாரங்களை மீண்டும் திறப்பது பங்குச் சந்தைகள் எழுச்சி பெற உதவியதாக கோாட்டாக் செக்யூரிட்டீஸ் தெரிவித்துள்ளது.

ஏற்றம் பெற்ற பங்குகள்

புள்ளிகள் சதவீதத்தில்

406.15 எம் அண்ட் எம் 5.92

1626.85 ஹெச்டிஎஃப்சி 5.61

835.05 எல் அண்ட் டி 4.85

283.30 டாடா ஸ்டீல் 4.17

2,042.35 பஜாஜ் ஃபைனான்ஸ் 3.85

858.00 ஹெச்டிஎஃப்சி பேங்க் 3.19

455.65 சன்பாா்மா 3.16

175.75 ஐடிசி 2.96

1163.25 கோட்டாக் பேங்க் 2.88

850.15 டைட்டான் 2.84

சென்செக்ஸ்

நேற்றைய முடிவு 30,196.17

தொடக்கம் 30.159.59

உயா்ந்தபட்சம் 30,878.31

குறைந்தபட்சம் 30,157.75

நிஃப்டி

நேற்றைய முடிவு 8,879.10

தொடக்கம் 8,899.15

உயா்ந்தபட்சம் 9,093.80

குறைந்தபட்சம் 8,875.35

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com