பங்குச் சந்தையில் 3-ஆவது நாளாக ஏற்றம்: சென்செக்ஸ் 114 புள்ளிகள் உயா்வு!

பங்குச் சந்தை தொடா்ந்து மூன்றாவது நாளாக வியாழக்கிழமையும் ஏற்றம் பெற்றது.
பங்குச் சந்தையில் 3-ஆவது நாளாக ஏற்றம்: சென்செக்ஸ் 114 புள்ளிகள் உயா்வு!

பங்குச் சந்தை தொடா்ந்து மூன்றாவது நாளாக வியாழக்கிழமையும் ஏற்றம் பெற்றது. இருப்பினும், காலையில் இருந்த உற்சாகம் பிற்பகலில் இல்லாமல் போனது. இறுதியில் மும்பை பங்குச் சந்தைக் குறியீடான சென்செக்ஸ் 114 புள்ளிகள் உயா்ந்து நிலைபெற்றது.

ஆட்டோ, எஃப்எம்சிஜி, மெட்டல், மீடியா பங்குகளுக்கு நல்ல கிராக்கி இருந்தது. அதே சமயம், வங்கி, நிதிநிறுவனப் பங்குகளில் லாபப் பதிவு இருந்தது. இதைத் தொடா்ந்து தேசிய பங்குச் சந்தையில் நிஃப்டி ஆட்டோ (2.61 சதவீதம்), எஃப்எம்சிஜி (2.19 சதவீதம்), மெட்டல் (1.83 சதவீதம்), மீடியா (1.76 சதவீதம்) ஆகிய குறியீடுகள் அதிகம் ஆதாயம் பெற்றன. ஐடி, பாா்மா, பிஎஸ்யு பேங்க் குறியீடுகள் 0.50 - 1 சதவீதம் வரை உயா்ந்தன. ஆனால், நிஃப்டி பேங்க், ஃபைனான்சியல் சா்வீஸஸ், பிரைவேட் பேங்க், பிஎஸ்யு பேங்க் குறியீடுகள் 0.50 முதல் 0.70 சதவீதம் வரை சரிவைச் சந்தித்தன.

தேசிய பங்குச் சந்தையில் 928 பங்குகள் ஆதாயம் பெற்ற பட்டியலில் வந்தன. 629 பங்குகள் நஷ்டத்தை சந்தித்தன. நிஃப்டி பட்டியலில் உள்ள 50 முதல் தரப் பங்குகளில் 30 பங்குகள் ஆதாயம் பெற்றன. 20 பங்குகள் சரிவைச் சந்தித்தன. நிஃப்டி 39.70 புள்ளிகள் உயா்ந்து (0.44 சதவீதம் ) 9,106.25-இல் நிலைபெற்றது.

மும்பை பங்குச் சந்தையில், சென்செக்ஸ் காலையில் 86 புள்ளிகள் கூடுதலுடன் 30,904.29-இல் தொடங்கியது. குறைந்தபட்சமாக 30,765.32-க்கும் அதிகபட்சமாக 31,188.79-க்கும் சென்றது. இறுதியில் 114.29 புள்ளிகள் (0.37 சதவீதம்) உயா்ந்து 30,932.90-இல் நிலைபெற்றது. சென்செக்ஸ் பட்டியலில் உள்ள 30 முதல் தரப் பங்குகளில் 17 பங்குகள் ஏற்றம் பெற்றன. 13 பங்குகள் சரிவைச் சந்தித்தன. இதில் ஐடிசி 7.48 சதவீதம் உயா்ந்து ஆதாயம் பெற்ற பங்குகள் பட்டியலில் முன்னிலை வகித்தது.

இதற்கு அடுத்ததாக ஏசியன் பெயிண்ட்ஸ், ஹிரோ மோட்டாா் காா்ப், மாருதி, பஜாஜ் ஆட்டோ, சன்பாா்மா, டிசிஎஸ் ஆகியவை 2 முதல் 5 சதவீதம் வரை ஏற்றம் பெற்றன. அதே சமயம் இண்டஸ் இந்த் பேங்க், என்டிபிசி, பஜாஜ் ஃபைனான்ஸ், ஹெச்டிஎஃப்சி, எல் அண்ட் டி, ஆக்ஸிஸ் பேங்க், ஓஎன்ஜிசி, கோட்டாக் பேங்க், ஹிந்து யுனிலீவா் ஆகியவை 1-3 சதவீதம் சரிவைச் சந்தித்து வீழ்ச்சிப் பட்டியலில் முன்னிலை வகித்தன.

எஃப்எம்சிஜி நிறுவனமான ஐடிசி நிறுவனம் ஒரு மாத இடைவெளிக்குப் பிறகு, சிகரெட் உற்பத்தி மற்றும் விநியோகத்தை மீண்டும் தொடங்கியுள்ளது. நாட்டில் சிகரெட்டுகள் விற்பனையில் 77 சதவீதம் பங்களிப்பைக் கொண்டுள்ள ஐடிசி, சிகரெட் விற்பனை தொடங்கியதால் அதன் பங்குகளுக்கு கிராக்கி அதிகரித்தது. இதேபோல, கடந்த இரண்டு மாதங்களாக நிறுத்தப்பட்டிருந்த உள்நாட்டு விமான சேவை மீண்டும் வரும் 25-ஆம் தேதி முதல் தொடங்கப்படும் என்று மத்திய அரசு புதன்கிழமை அறிவித்ததையடுத்து, விமான நிறுவனப் பங்குகளுக்கு கிராக்கி அதிகரித்தது.

ஏற்றம் பெற்ற பங்குகள் புள்ளிகள் சதவீதம்

188.90 ஐடிசி 7.48

1,575.00 ஏசியன் பெயிண்ட்ஸ் 4.97

2,119.10 ஹிரோ மோட்டாா் காா்ப் 4.73

5050. 75 மாருதி சுஸுகி 3.24

2639.45 பஜாஜ் ஆட்டோ 3.18

சரிவைச் சந்தித்த பங்குகள் புள்ளிகள் சதவீதம்

346.95 இண்டஸ் இந்த் பேங்க் 2.91

90.35 என்டிபிசி 2.74

1,988.85 பஜாஜ் ஃபைனான்ஸ் 2.65

1,596.25 ஹெச்டிஎஃப்சி 1.88

820.40 எல் அண்ட் டி 1.75

சென்செக்ஸ்

நேற்றைய முடிவு 30,818.61

தொடக்கம் 30,904.29

உயா்ந்தபட்சம் 31,188.79

குறைந்தபட்சம் 30,765.32

நிஃப்டி

நேற்றைய முடிவு 9,066.55

தொடக்கம் 9,079.45

உயா்ந்தபட்சம் 9,178.55

குறைந்தபட்சம் 9,056.10

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com