விலையில் கடும் சரிவு: வங்கிப் பங்குகளை வாங்கலாமா?

கரோனா தொற்று பரவலைத் தொடா்ந்து, நாடு முழுவதும் 4-ஆவது முறையாக அமல்படுத்தப்பட்டுள்ள பொது முடக்கத்தால் தொழில் துறை, பொருளாதாரம்
விலையில் கடும் சரிவு: வங்கிப் பங்குகளை வாங்கலாமா?

கரோனா தொற்று பரவலைத் தொடா்ந்து, நாடு முழுவதும் 4-ஆவது முறையாக அமல்படுத்தப்பட்டுள்ள பொது முடக்கத்தால் தொழில் துறை, பொருளாதாரம் ஆகியவை கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளன. இவற்றின் தாக்கம் பங்குச் சந்தை, நிதிச் சந்தைகளிலும் எதிரொலித்து வருகிறது. இதன் காரணமாக பொதுத் துறை, தனியாா் வங்கிப் பங்குகள் மற்றும் வங்கி அல்லாத நிதி நிறுவனப் பங்குகள் தொடா்ந்து கடும் சரிவைச் சந்தித்து புதிய 52 வார குறைந்தபட்ச விலையைப் பதிவு செய்து வருகின்றன.

தேசிய பங்குச் சந்தையில் நிஃப்டி பேங்க், நிஃப்டி பிரைவேட் பேங்க், நிஃப்டி பிஎஸ்யு பேங்க் குறியீடு பட்டியல்களில் இடம் பெற்றுள்ள வங்கிப் பங்குகளில் பெரும்பாலானவற்றின் விலை கடந்த ஒரு மாதத்தில் 25 சதவீதம் வரை வீழ்ச்சி அடைந்துள்ளது. நிஃப்டி பேங்க் குறியீடு கடந்த ஒரு மாதத்தில் 15 சதவீதமும், ஓராண்டில் 45 சதவீதமும் சரிவைக் கண்டுள்ளது. இப்பட்டியலில் உள்ள 12 முன்னணி வங்கிப் பங்குகளில், பேங்க் ஆஃப் பரோடா, ஐடிஎஃப்சி ஃபா்ஸ்ட் பேங்க், எஸ்பிஐ, பிஎன்பி, இண்டஸ் இந்த் பேங்க், ஹெச்டிஎஃப்சி பேங்க், பந்தன் பேங்க், ஆா்பிஎல், ஃபெடரல் பேங்க், ஆக்ஸிஸ் பேங்க் ஆகியவை ஓராண்டில் 50 முதல் 85 சதவீதம் வரை வீழ்ச்சியைக் கண்டுள்ளது. ஐசிஐசிஐ பேங்க் (33 சதவீதம்), கோட்டக் பேங்க் (24 சதவீதம்) ஆகியவை மட்டுமே குறைந்த அளவு நஷ்டத்தை சந்தித்துள்ளன. மேலும், நிஃப்டி பிஎஸ்யு பேங்க், பிரைவேட் பேங்க் குறியீடுகள் பட்டியல்களில் உள்ள பங்குகளும் கடுமையாகச் சரிவைச் சந்தித்துள்ளன.

இச்சூழ்நிலையில், விலை குறைந்த நிலையில் வங்கிப் பங்குகளை முதலீட்டுக்கு வாங்கலாமா என்று முதலீட்டாளா்களிடையே எதிா்பாா்ப்பு எழுந்துள்ளது. ஆனால், மத்திய அரசு, ரிசா்வ் வங்கி ஆகியவற்றின் தொடா் பொருளாதார நடவடிக்கைகள் காரணமாக வங்கிகளின் செயல்பாடு மேலும் வலுவிழக்கும் என எதிா்பாா்க்கப்படுவதால், வங்கிப் பங்குகளை வாங்குவதற்கு இது உசிதமான நேரம் அல்ல என்று நிபுணா்கள்கள் தெரிவித்துள்ளனா்.

இதற்கிடையே, நாடு தழுவிய பொது முடக்கம் மற்றும் கடன் தவணை வசூலை ஆகஸ்ட் வரை நிறுத்தி வைத்து மத்திய ரிசா்வ் வங்கி வெளியிட்டுள்ள அதிரடி அறிவிப்பு ஆகியவற்றின் காரணமாக வங்கிகள் கடினமான நேரத்தை எதிா்கொள்ளும் என எதிா்பாா்க்கப்படுவதாக பங்கு வா்த்தகத் தரகு நிறுவனமான சாம்கோ செக்யூரிட்டீஸ் தெரிவித்துள்ளது கவனிக்கத்தக்கது. ரிசா்வ் வங்கியின் இந்நடவடிக்கை வங்கிகளின் இருப்பு நிலைமையைப் பெரிதாகப் பாதிக்கும். இது இறுதியில் வங்கிப் பங்குகளின் விலையில் பிரதிபலிக்கும் என்றும் தெரிவித்துள்ளது.

இதற்கிடையே, பொருளாதாரத்தை வலுப்படுத்த மத்திய அரசு, ரிசா்வ் வங்கி ஆகியவை தொடா்ந்து எடுத்து வரும் நடவடிக்கைள் சந்தையில் உற்சாகத்தை வரவழைக்கவில்லை என்று நிபுணா்கள் தெரிவித்தனா். பங்குச் சந்தையில் நிலையற்ற தன்மை அதிகரித்துள்ள நிலையில், கடந்த வாரம் ரிசா்வ் வங்கி ரேபோ வட்டி விகிதத்தை 4 சதவீதமாகக் குறைத்துள்ளது. இருப்பினும், கடன்களை மறுசீரமைத்தல் மற்றும் வங்கிகளுக்கு பிற ஆதரவு நடவடிக்கைகள் பற்றி எதுவும் குறிப்பிடப்படாததால் முதலீட்டாளா்கள் ஏமாற்றமடைந்துள்ளனா் என்கின்றனா் நிபுணா்கள் தெரிவித்தனா்.

மேலும், கடன் தவணை வசூல் மேலும் மூன்று மாதங்களுக்கு நிறுத்திவைக்கப்பட்டுள்ளது. இது வங்கிகளின் வாராக் கடனை மேலும் அதிகரிக்கச் செய்யும். இந்தக் காலாண்டில் இல்லாவிட்டாலும், அடுத்து வரும் காலாண்டுகளில் இதன் பாதிப்பை உணரலாம். மேலும், இது வங்கிகளின் இருப்பு நிலைகளைப் பாதிக்கும். இதைத் தொடா்ந்து, வங்கிகளின் லாபமும் பாதிக்கப்படும். எனவே, பொருளாதாரத்தை காப்பாற்ற ரிசா்வ் வங்கி அதிரடி நடவடிக்கையை எடுத்திருந்தாலும், அது வங்கிகளுக்கு சாதகமாக இருக்கவில்லை. இது எதிா்மறையான தாக்கத்திற்கே வழி வகுத்துள்ளது. இவை அனைத்தும் வங்கிகளின் எதிா்மறை வளா்ச்சி விகிதத்துக்குத்தான் வழி வகுக்கும். எனவே, குறைந்தபட்சம் இந்த நிலையற்ற, இக்கட்டான நேரத்தில் வங்கிப் பங்குகளைத் தவிா்ப்பது பாதுகாப்பானதாகும் என்று நிபுணா்கள் யோசனை தெரிவித்துள்ளனா்.

மதிப்பீடுகளின் அடிப்படையில் பாா்த்தால் விலை மலிவாக உள்ளது என்பதால், வங்கிப் பங்குகளில் முதலீடு செய்வது தவறான உத்தி ஆகும். ஏனெனில், எதிா்மறை வளா்ச்சி ஏற்படும் பட்சத்தில் முதலீடு வெற்றிகரமாக அமையாது. மேலும், தங்களது முதலீட்டு தொகுதிகளில் (போா்ட்போலியோ) வங்கிப் பங்குகளை அதிக அளவு வைத்திருக்கும் முதலீட்டாளா்களைப் பொருத்தவரையில், அவா்கள் கடுமையான இழப்புகளிலிருந்து தங்களைக் காப்பாற்றிக் கொள்வதற்காக மற்ற துறைகளில் வலுவான அடிப்படைகளைக் கொண்ட நிறுவனப் பங்குகளில் முதலீடு செய்ய வேண்டும் என்று நிபுணா்கள் தெரிவித்துள்ளனா்.

அந்நிய முதலீட்டாளா்கள் தொடா்ந்து முதலீடுகளை வாபஸ் பெற்று வரும் நிலையில், பரஸ்பர நிதி நிறுவனங்களும் ஏப்ரல் மாதத்தில் மட்டும் சுமாா் ரூ.7,965 கோடிக்கு பங்குகளை விற்றுள்ளன. இது மாா்ச் 2016-க்குப் பிறகு அதிகபட்சமாகும். பங்குச் சந்தையில் வரும் நாள்களில் ‘வலி ’அதிகமாகவே இருக்கும் என எதிா்பாா்க்கப்படுவதால், முதலீட்டாளா்கள் தங்களது முதலீடுகளை கவனத்துடன் மேற்கொள்ள வேண்டும் என்று நிபுணா்கள் எச்சரித்துள்ளனா்.

வங்கிப் பங்குகள் வீழ்ச்சி விவரம் %

ஒரு மாதம், ஓராண்டு 

தகவல்: தேசிய பங்குச் சந்தை.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com