பங்குச் சந்தையில் 3 நாள் சரிவுக்கு முற்றுப்புள்ளி: சென்செக்ஸ் 144 புள்ளிகள் ஏற்றம்

இந்த வாரத்தின் முதல் வர்த்தக தினமான திங்கள்கிழமை பங்குச் சந்தை  நேர்மறையாக முடிந்தது. இதைத் தொடர்ந்து, மும்பை பங்குச் சந்தைக் குறியீட்டு எண்ணான சென்செக்ஸ்  143.51 புள்ளிகள் உயர்ந்தது.
பங்குச் சந்தையில் 3 நாள் சரிவுக்கு முற்றுப்புள்ளி: சென்செக்ஸ் 144 புள்ளிகள் ஏற்றம்

புது தில்லி:  இந்த வாரத்தின் முதல் வர்த்தக தினமான திங்கள்கிழமை பங்குச் சந்தை  நேர்மறையாக முடிந்தது. இதைத் தொடர்ந்து, மும்பை பங்குச் சந்தைக் குறியீட்டு எண்ணான சென்செக்ஸ்  143.51 புள்ளிகள் உயர்ந்தது. இதன்மூலம்,  கடந்த மூன்று நாள்களாக தொடர்ந்து வந்த சரிவுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டது.

அமெரிக்க அதிபர் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், சந்தை ஏற்ற, இறக்கத்தில் இருந்தது. வங்கிப் பங்குகளுக்கு நல்ல ஆதரவு இருந்தது.  எரிசக்தி, ஐடி பங்குகள் விற்பனையை எதிர்கொண்டன.  அதேசமயம், மார்க்கெட் லீடரான ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் பங்கு விலை கடும் சரிவைச் சந்தித்தது. இருப்பினும் சென்செக்ஸ், நிஃப்டி ஏற்றம் பெற்று நேர்மறையாக முடிந்தது என்று பங்கு வர்த்தகத் தரகு நிறுவனங்கள் தெரிவித்தன.

1,563 பங்குகள் ஏற்றம்:  மும்பை பங்குச் சந்தையில் மொத்தம் வர்த்தகமான 2,811 பங்குகளில் 1,099 பங்குகள் ஆதாயம் பெற்ற பட்டியலில் வந்தன. 1,563 பங்குகள் நஷ்டத்தை சந்தித்தன. 149 பங்குகள் மாற்றமின்றி நிலைபெற்றன. வர்த்தக நேர முடிவில் சந்தை மூலதன மதிப்பு ரூ. 76 ஆயிரம் கோடி குறைந்து  ரூ.157.19 லட்சம் கோடியாக இருந்தது.

3 நாள் சரிவுக்கு முற்றுப்புள்ளி:  சென்செக்ஸ்  காலையில்  266.31 புள்ளிகள் கூடுதலுடன்  39,880.38இல் தொடங்கி  39,334.92 வரை கீழே சென்றது. பின்னர் அதிகபட்சமாக 39,968.03 வரை உயர்ந்த சென்செக்ஸ், இறுதியில் 143.51 புள்ளிகள் (0.36 சதவீதம்) உயர்ந்து 39,757.58-இல் நிலைபெற்றது. வர்த்தகத்தின் போது ஒரு கட்டத்தில் சென்செக்ஸ் உச்சபட்ச நிலையிலிருந்து 633.11 புள்ளிகளை இழந்திருந்தது.  இறுதியில் நேர்மறையாக முடிந்து மூன்று நாள் சரிவுக்கு முற்றுப்புள்ளி வைத்தது.

வங்கிப் பங்குகள் முன்னேற்றம்:  சென்செக்ஸ் பட்டியலில் உள்ள 30 முதல் தரப் பங்குகளில் 19 பங்குகள் ஆதாயம் பெற்றன. 11 பங்குகள் சரிவைச் சந்தித்தன. இதில்,  இன்டஸ்இண்ட் பேங்க் 7.01 சதவீதம் உயர்ந்து ஆதாயப் பட்டியலில் முன்னிலை வகித்தது. மேலும், ஐசிஐசிஐ பேங்க், ஆக்ஸிஸ் பேங்க், எச்டிஎஃப்சி, பார்தி ஏர்டெல் ஆகியவை 5.50 முதல் 6.20 சதவீதம் வரை உயர்ந்தன.
ரிலையன்ஸ் கடும் சரிவு: அதேசமயம்,  கடந்த வெள்ளிக்கிழமை சந்தை முடிந்த பிறகு ரிலையன்ஸின் காலாண்டு முடிவுகள் வெளியாகின.அதன் தாக்கம் திங்கள்கிழமை காலையில் சந்தையில் எதிரொலித்தது. இதில் ரிலையன்ஸ் 8.62 சதவீதம் குறைந்து  வீழ்ச்சிப் பட்டியலில் முன்னிலை வகித்தது. இதற்கு அடுத்ததாக ஹெச்சிஎல் டெக், டிசிஎஸ், ஏசியன் பெயிண்ட்ஸ், டாடா ஸ்டீல், பஜாஜ் ஆட்டோ, மாருதி சுஸூகி ஆகியவை 1.30 முதல் 2.50 சதவீதம் வரை சரிவைச் சந்தித்தன. 

தேசிய பங்குச் சந்தையில்...:  தேசிய பங்குச் சந்தையில் 566 பங்குகள்  ஆதாயம் பெற்ற பட்டியலில் வந்தன.   1034 பங்குகள் வீழ்ச்சியைச் சந்தித்தன. நிஃப்டி 26.75  புள்ளிகள் (0.23  சதவீதம்) உயர்ந்து 11,669.10-இல் நிலைபெற்றது.
 நிஃப்டி பட்டியலில் உள்ள 50 முதல் தரப் பங்குகளில் 23 பங்குகள் ஏற்றம் பெற்றன. 26 பங்குகள் வீழ்ச்சியைச் சந்தித்தன. எம் அண்ட் எம் மாற்றமின்றி ரூ.594 -இல் நிலைபெற்றது.  நிஃப்டி பேங்க் 3.89 சதவீதம், பைனான்சியல் சர்வீஸஸ் 3.53, பிரைவேட் பேங்க் 4.24, பிஎஸ்யு பேங்க் 3.36   சதவீதம் உயர்ந்தன.
அதே சமயம், ஐடி, பார்மா, மீடியா, மெட்டல் குறியீடுகள் சரிவைச் சந்தித்தன.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com