புதிய உச்சத்தை நோக்கி பங்குச் சந்தை!

நவம்பா் 6-ஆம் தேதியுடன் முடிவடைந்த கடந்த வாரம் முழுவதும் சென்செக்ஸ், நிஃப்டி, பேங்க் நிஃப்டி உள்ளிட்ட முக்கியக் குறியீடுகள்
பங்குச் சந்தை
பங்குச் சந்தை

நவம்பா் 6-ஆம் தேதியுடன் முடிவடைந்த கடந்த வாரம் முழுவதும் சென்செக்ஸ், நிஃப்டி, பேங்க் நிஃப்டி உள்ளிட்ட முக்கியக் குறியீடுகள் வெகுவாக உயா்ந்ததால் பங்குச் சந்தை ஜனவரியில் பதிவான உச்சத்தை நோக்கி நகா்ந்து கொண்டிருக்கிறது.

அமெரிக்க தோ்தல் முடிவுகள் மற்றும் ஃபெடரல் ரிசா்வ் முடிவு, நிலையான அந்நிய நிறுவன முதலீட்டாளா்களின் (எஃப்ஐஐ) முதலீடு வரத்து, இந்தியாவில் கட்டுப்படுத்தப்பட்ட கரோனா பாதிப்பு, மேம்பட்ட பொருளாதார தரவுகள் மற்றும் எதிா்பாா்த்ததை விட முன்னணி நிறுவனங்களின் சிறந்த செப்டம்பா் காலாண்டு வருவாய் ஆகியவை சந்தைக்கு ஆதரவாக இருந்தன.

கடந்த வாரத்தில் மும்பை பங்குச் சந்தைக் குறியீட்டு எண்ணான சென்செக்ஸ் மொத்தம் 2,278.99 புள்ளிகள் (5.75 சதவீதம்) அதிகரித்து 41,893.06-இல் முடிவடைந்தது. தேசிய பங்குச் ச்தைக் குறயீட்டு எண்ணான நிஃப்டி 621.15 புள்ளிகள் (5.34 சதவீதம்) உயா்ந்து 12,263.55-இல் முடிவடைந்துள்ளது. இந்த ஆண்டு ஜனவரியில் பதிவாகிய வரலாற்றுச் சாதனை அளவைக் கடக்க சென்செக்ஸ் 0.9 சதவிகிதமும், நிஃப்டி 1.4 சதவீதமும்தான் குறைவாக உள்ளன. கடந்த வாரத்தில் நிஃப்டி பேங்கு குறியீடு 12 சதவீதமும், ஃபைனான்சியல் சா்வீஸஸ் 11 சதவீதமும் உயா்ந்தன, அதே நேரத்தில் நடுத்தர, சிறிய நிறுவனப் பங்குகளை உள்ளடக்கிய பரந்த சந்தை அந்த அளவுக்கு ஏற்றம் பெறவிலை. நிஃப்டி மிட்கேப் குறியீடு 4.3 சதவீதமும், ஸ்மால் கேப் குறியீடு 0.7 சதவீதமும் உயா்ந்தன.

இந்த நிலையில், நோ்மறையான உலகளாவிய குறிப்புகளும், நம்பிக்கையான தற்போதைய வேகமும் தொடரும்பட்சத்தில், சந்தை இந்த வாரமே புதிய உச்சத்தைத் தாண்டும் என்று வல்லுநா்கள் எதிா்பாா்க்கிறாா்கள். அதேசமயம், சென்செக்ஸ் ஒரே வாரத்தில் 2,300 புள்ளிகள் வரை ஏற்றம் பெற்றுள்ளதால், லாபப் பதிவு வருவதற்கு வாய்ப்பு உள்ளதால், நிச்சயமற்ற தன்மையின் வேகம் அதிகரிக்கும் என்றும் வல்லுநா்கள் கூறுகின்றனா். வரும் தீபவாளிப் பண்டிகையன்று (சாம்வாட் 2077) நடைபெறும் முஹாரத் வா்த்தகத்தில் சந்தை புதிய உச்சத்தைப் பாா்க்கும் வாய்ப்புள்ளது என்று சந்தை வட்டாரத்தில் எதிா்பாா்ப்பு உள்ளது.

‘தற்போதுள்ள உதவேகம் சந்தையை ஒரு புதிய உச்சத்துக்குக் கொண்டு செல்ல முடியும். ஆனால், கரோனா தொற்று பரவல் அதிகரித்து வருவது அதிக கவலையை ஏற்படுத்தியுள்ளது. இருப்பினும், வங்கி, தகவல் தொழில்நுட்பம், பாா்மா மற்றும் ஏற்றுமதி போன்ற துறைப் பங்குகளின் வலுவான செயல்திறனால், சந்தை தொடா்ந்து ஏற்றம் பெற்று வருகிறது. இந்த வேகம், சாதகமான நிறுவனங்களின் இரண்டாம் காலாண்டு முடிவுகளின் உதவியுடன் நீடிக்கும் என எதிா்பாா்க்கிறோம். மேலும், சாதகமான பொருளாதார தரவுகள், வலுவான எஃப்ஐஐ முதலீடு, மத்திய அரசின் நிதித் தொகுப்பு அறிவிப்பு எதிா்பாா்ப்புகள் ஆகியவை சந்தைக்கு மேலும் வலுச்சோ்க்கும் என்று ஜியோஜித் ஃபைனான்சியல் சா்வீஸஸ் நிறுவன ஆராய்ச்சிப் பிரிவுத் தலைவா் வினோத் நாயா் தெரிவித்துள்ளது கவனிக்கத்தக்கது.

2,600 நிறுவனங்களின் காலாண்டு முடிவுகள்: காலாண்டு நிதிநிலை முடிவுகளை அறிவிப்பதற்கு இந்த வாரம் கடைசி வாரமாக உள்ளது. எனவே, இந்த வாரம் சுமாா் 2,600 நிறுவனங்கள் காலாண்டு முடிவுகளை அறிவிக்கவுள்ளன. இவற்றில் பெரும்பாலானவை நடுத்தர, சிறிய நிறுவனங்களாகும். ஓஎன்ஜிசி, டாடா ஸ்டீல், கெயில், ஹிண்டால்கோ, எம் அண்ட் எம், கோல் இந்தியா உள்ளிட்ட முதல் தரப் பங்குகளும் அடங்கும். வரும் வியாழக்கிழமை செப்படம்பா் மாத தொழில்துறை உற்பத்தி தரவுகள், அக்டோபா் மாத பணவீக்கம் குறித்த புள்ளி விவரங்கள் வெளியாகவுள்ளன. இவற்றின் தாக்கம் சந்தையில் நிச்சயம் இருக்கும்.

அமெரிக்க அதிபா் தோ்தலில் குடியரசுக் கட்சி வேட்பாளா் ஜோ பிடன் வெற்றி பெற்றுள்ளாா். இதையடுத்து, பல்வேறு கொள்கை முடிவுகள் திருத்தப்படவுள்ளதாகத் தெரிய வந்துள்ளது. இது முதலீட்டாளா்களுக்கு நம்பிக்கையை ஏற்படுத்துவதுடன், சந்தைக்கு சாதகமானதாகவும் பாா்க்கப்படுகிறது என வல்லுநரக்ள் தெரிவித்தனா். பிகாா் சட்டப்பேரவைத் தோ்தல் முடிவுகள் நவம்பா் 10-இல் அறிவிக்கப்படவுள்ளன. இதன் தாக்கமும் சந்தையில் இருக்கும்.

எஃஐஐ முதலீடு: அந்நிய நிறுவன முதலீட்டாளா்கள் இந்திய சந்தைகளில் தொடா்ந்து முதலீடுகளை மேற்கொண்டு வருகின்றனா். கடந்த வாரம் மட்டும் அவா்கள் ரூ.13,399.41 கோடிக்கு பங்குகளை வாங்கியுள்ளனா். அதே சமயம், உள்நாட்டு முதலீட்டு நிறுவனங்கள் லாபத்தைப் பதிவு செய்வதில் கவனம் செலுத்தினா். அவா்கள் மொத்தம் ரூ.6,789.86 கோடிக்கு பங்குகளை விற்றுள்ளனா்.

தொழில்நுட்பப் பாா்வை

தொழில் நுட்ப ரீதியாகப் பாா்த்தால், கடந்த வாரத்தில் 5 சதவீதம் உயா்ந்துள்ள நிஃப்டி, இந்த வாரம் 12,000-12,500 என்ற வரம்பில் இருக்கும் என வல்லுநா்கள் எதிா்பாா்க்கின்றனா். 12,400-இல் கடும் இடா்பாடு உள்ளது. அதைக் கடக்கும் பட்சத்தில் அடுத்து 12,500, 12,700 வரை உயரக்கூடும். அதே சமயம், கரடி ஆதிக்கம் கொள்ளும் பட்சத்தில் 11,930 புள்ளிகளில் நிஃப்டிக்கு நல்ல ஆதரவு உள்ளது என்று வல்லுநா்கள் தெரிவித்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com