"காளை' பாய்ச்சல்: முதல் முறையாக 43,000 புள்ளிகளைக் கடந்தது சென்செக்ஸ்

பங்குச் சந்தையில் 7-ஆவது நாளாக செவ்வாய்க்கிழமையும் காளையின் பாய்ச்சல் தொடர்ந்தது
"காளை' பாய்ச்சல்: முதல் முறையாக 43,000 புள்ளிகளைக் கடந்தது சென்செக்ஸ்

பங்குச் சந்தையில் 7-ஆவது நாளாக செவ்வாய்க்கிழமையும் காளையின் பாய்ச்சல் தொடர்ந்தது. இதனால், மும்பை பங்குச் சந்தை குறியீட்டு எண்ணான சென்செக்ஸ் முதல் முறையாக 43,000 புள்ளிகளைக் கடந்தது. வர்த்தக முடிவில் 680.22 புள்ளிகள் உயர்ந்து 43,277.65-இல் நிலைபெற்றது. நிஃப்டி 170.05 புள்ளிகள் உயர்ந்து 12,600-ஐ கடந்து நிலைபெற்றது. இரண்டு குறியீடுகளும் புதிய வரலாற்று உச்சத்தில் நிலைபெற்றுள்ளன.
 கரோனா தொற்றுக்கான தடுப்பூசியின் வெற்றிகரமான 3-ஆவது கட்ட சோதனை குறித்து பயோ என்டெக் மற்றும் ஃபைசர் ஆகிய மருந்து நிறுவனங்கள் வெளியிட்ட அறிவிப்புகள் முதலீட்டாளர்களிடையே நம்பிக்கையை ஏற்படுத்தியதுடன், நிலையான பொருளாதார மீட்சிக்கான சாத்தியக்கூறுகளும் சந்தையில் உற்சாகத்தை வரவழைத்தது என்று பங்கு வர்த்தகத் தரகு நிறுவனங்கள் தெரிவித்தன.
 உலகளாவிய சந்தைகளின் நேர்மறை குறிப்புகளும், பிகார் சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜக தலைமையிலான என்டிஏ, கருத்துக் கணிப்புகளுக்கு மாறாக எதிர்பாராத முன்னிலையைப் பெற்றதும் பங்குச் சந்தை எழுச்சிக்கு மேலும் வலு சேர்த்தன. இருப்பினும், ஐடி, பார்மா பங்குகளில் லாபப் பதிவு அதிகளவில் இருந்தது என்று வர்த்தகர்கள் தெரிவித்தனர்.
 சந்தை மதிப்பு ரூ.166.29 லட்சம் கோடி: மும்பை பங்குச் சந்தையில் மொத்தம் வர்த்தகமான 2,891 பங்குகளில் 1,227 பங்குகள் ஆதாயம் பெற்றன. 1,484 பங்குகள் வீழ்ச்சியைச் சந்தித்தன. 180 பங்குகள் மாற்றமின்றி நிலை பெற்றன. சந்தை மூலதன மதிப்பு ரூ.62 ஆயிரம் கோடி உயர்ந்து வர்த்தக முடிவில் ரூ.166.29 லட்சம் கோடியாக இருந்தது.
 தொடரும் புதிய உச்சம்: சென்செக்ஸ் காலையில் 357.19 புள்ளிகள் கூடுதலுடன் 42,959.25-இல் தொடங்கி 42,660.09 வரை கீழே சென்றது. பின்னர், அதிகபட்சமாக 43,316.44 வரை உயர்ந்து புதிய வரலாற்றுச் சாதனை அளவைப் பதிவு செய்தது. இருப்பினும், இறுதியில் 680.22 புள்ளிகள் (1.60 சதவீதம்) உயர்ந்து 43,277.65-இல் நிலை பெற்றது.
 பஜாஜ் பைனான்ஸ் முன்னேற்றம்: சென்செக்ஸ் பட்டியலில் இடம்பெற்றுள்ள 30 முதல் தரப் பங்குகளில் 21 பங்குகள் ஆதாயம் பெற்றன. 9 பங்குகள் சரிவைச் சந்தித்தன.
 இதில் பஜாஜ் பைனான்ஸ் 8.84 சதவீதம் உயர்ந்து ஆதாயப் பட்டியலில் முன்னிலை வகித்தது. இதற்கு அடுத்ததாக இண்டஸ் இண்ட் பேங்க், எல் அண்ட் டி, பஜாஜ் ஃபின் சர்வ், எச்டிஎஃப்சி, எஸ்பிஐ, ஐசிஐசிஐ பேங்க் ஆகியவை 4.50 முதல் 7.70 சதவீதம் வரை உயர்ந்தன. எச்டிஎஃப்சி பேங்க், கோட்டக் பேங்க், ரிலையன்ஸ் ஆகியவையும் ஆதாயப் பட்டியலில் இடம் பெற்றன.
 ஐடி, பார்மா பங்குகள் வீழ்ச்சி:
 அதேசமயம், ஐடி நிறுவனங்களான டெக் மஹிந்திரா 5.73 சதவீதம், ஹெச்சிஎல் டெக் 5.36 சதவீதம் குறைந்து வீழ்ச்சிப் பட்டியலில் முன்னிலை வகித்தன. மேலும், நெஸ்லே இந்தியா, சன்பார்மா, இன்ஃபோஸிஸ், டிசிஎஸ், மாருதி சுஸுகி, பார்தி ஏர்டெல் ஆகியவையும் வீழ்ச்சிப் பட்டியலில் இடம் பெற்றன.
 தேசிய பங்குச் சந்தையில்...:
 தேசிய பங்குச் சந்தையில் 684 பங்குகள் ஆதாயம் பெற்ற பட்டியலில் வந்தன. 919 பங்குகள் வீழ்ச்சியைச் சந்தித்தன. நிஃப்டி 170.05 புள்ளிகள் (1.61 சதவீதம்) உயர்ந்து 12,631.10-இல் நிலைபெற்றது. வர்த்தகத்தின் போது நிஃப்டி 12,643.90 வரை உயர்ந்து புதிய வரலாற்றுச் சாதனை அளவைப் பதிவு செய்து அதற்கு அருகே நிலைபெற்றுள்ளது. நிஃப்டி பட்டியலில் உள்ள 50 முதல் தரப் பங்குகளில் 32 பங்குகள் ஆதாயம் பெற்றன. 18பங்குகள் வீழ்ச்சியைச் சந்தித்தன.
 ஐடி, பார்மா குறியீடுகள் 4 சதவீதம் வரை சரிவைச் சந்தித்தன. நிஃப்டி பேங்க், பைனான்சியல் சர்வீஸஸ் குறியீடுகள் 3-4 சதவீதம் வரை ஏற்றம் பெற்றன.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com