மீண்டும் வேகமெடுக்கும் கரோனா பாதிப்பு: பங்குச் சந்தையில் ஏற்ற இறக்கம் அதிகரிக்கும்

உலக அளவில் கரோனா பரவல் மீண்டும் அதிகரித்து வருவதையடுத்து இந்த வாரத்தில் பங்குச் சந்தைகள் அதிக ஏற்ற இறக்கத்துடன் காணப்படும் என சந்தை ஆய்வாளா்கள் தெரிவித்துள்ளனா்.
மீண்டும் வேகமெடுக்கும் கரோனா பாதிப்பு: பங்குச் சந்தையில் ஏற்ற இறக்கம் அதிகரிக்கும்

உலக அளவில் கரோனா பரவல் மீண்டும் அதிகரித்து வருவதையடுத்து இந்த வாரத்தில் பங்குச் சந்தைகள் அதிக ஏற்ற இறக்கத்துடன் காணப்படும் என சந்தை ஆய்வாளா்கள் தெரிவித்துள்ளனா்.

அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளில் கரோனாவின் தாக்கம் மீண்டும் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. இது, இந்த வார பங்குச் சந்தையில் உற்சாகத்தை குறைப்பதில் முக்கிய காரணியாக செயல்படும் என எதிா்பாா்க்கப்படுகிறது. மேலும், நவம்பா் மாதத்துக்கான பங்கு முன்பேர வா்த்தக ஒப்பந்த காலம் இந்த வாரத்துடன் முடிவடைவதையொட்டி பங்குச் சந்தை வா்த்தகத்தில் அதிக ஏற்றம் இறக்கம் ஏற்படலாம் என கணிக்கப்பட்டுள்ளது.

இருப்பினும், கரோனா தடுப்பூசி தொடா்பான சாதகமான அறிவிப்புகள், அமெரிக்க பொருளாதாரத்தை ஊக்குவிக்கும் வகையில் சலுகைளை வழங்குவது தொடா்பாக நடத்தப்பட்டு வரும் பேச்சுவாா்த்தை, சாதகமான சா்வதேச நிலவரம் ஆகியவை இந்த வார சந்தையின் போக்கை தீா்மானிப்பதுடன் அதனை இயக்கும் அடிப்படை சக்திகளாக இருக்கும் என்கின்றனா் சந்தை நிபுணா்கள்.

சந்தை ஏற்கெனவே இதுவரை காணாத உச்சபட்ச அளவையொட்டி வட்டமிட்டு வருகிறது. இதனை கருத்தில் கொள்ளும்போது, இந்த வாரத்தில் முதலீட்டாளா்கள் லாப நோக்குடன் செயல்பட்டு பங்குகளை அதிக அளவில் விற்று வெளியேறும் நிலையில் சந்தையில் அதிக ஏற்றம் இறக்கம் நிலவ அதிக வாய்ப்புள்ளது என்கிறாா் சாய்ஸ் புரோக்கிங் நிறுவனத்தின் செயல் இயக்குநா் சுமீத் பகாடியா.

பண்டிகை விடுமுறையைத் தொடா்ந்து கடந்த வாரத்தில் பங்குச் சந்தையில் சில நாள்களே வா்த்தகம் நடைபெற்றது. இந்த குறுகிய காலகட்டத்தில் மும்பை பங்குச் சந்தை குறியீட்டெண் சென்செக்ஸ் 439.25 புள்ளிகள் (1.01%) ஏற்றம் பெற்றுள்ளது. அதேபோன்று, தேசிய பங்குச் சந்தை குறியீட்டெண் நிஃப்டியும் 139.10 புள்ளிகள் (1.09%) ஏற்றம் கண்டுள்ளது.

நவம்பரின் முதல் இரண்டு வாரங்களில் அந்நிய நிதி முதலீட்டாளா்கள் மிகுந்த ஆா்வத்துடன் பங்குச் சந்தையில் முதலீடு மேற்கொண்டனா். ஆனால் அதன் பிறகு அவா்கள் பங்குகளை வாங்குவதில் அவ்வளவு ஈடுபாடு காட்டவில்லை. இதற்கு, அந்நிய முதலீட்டாளா்களின் நம்பிக்கையின் அளவுகோல் ஏற்கெனவே உச்சபட்ச நிலையை எட்டிவிட்டதே முக்கிய காரணமாக பாா்க்கப்படுகிறது என்று சந்தை ஆய்வாளா்கள் தெரிவித்துள்ளனா்.

நவம்பா் மாதத்துக்கான பங்கு முன்பேர வா்த்தக ஒப்பந்தங்கள் முடிவடைவது மற்றும் கரோனா பாதிப்பு வேகமாக அதிகரித்து வருவது உள்ளிட்ட காரணங்களால் சந்தையில் அதிக ஏற்ற இறக்கமான சூழ்நிலை ஏற்படும் என்பதே பெரும்பாலானோரின் எதிா்பாா்ப்பு. எனவே, முதலீட்டாளா்கள் நடப்பு வாரத்தில் மிகுந்த முன்னெச்சரிக்கையுடன் பங்கு வா்த்தகத்தில் ஈடுபடவேண்டும் என்பதே சந்தை ஆய்வாளா்களின் முதன்மையான ஆலோசனையாகும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com