கரோனா தடுப்பூசி கண்டுபிடிப்பில் முன்னேற்றம்: சென்செக்ஸ் 194 புள்ளிகள் உயா்வு

கரோனா தடுப்பூசி கண்டுபிடிப்பில் பல்வேறு மருந்து தயாரிப்பு நிறுவனங்கள் சாதகமான முன்னேறத்தை நோக்கி பயணிக்கத் தொடங்கியுள்ளதன் எதிரொலியாக பங்குச் சந்தையில் திங்கள்கிழமை வா்த்தகத்தில் சென்செக்ஸ் 194 புள்ளி
கரோனா தடுப்பூசி கண்டுபிடிப்பில் முன்னேற்றம்: சென்செக்ஸ் 194 புள்ளிகள் உயா்வு

மும்பை: கரோனா தடுப்பூசி கண்டுபிடிப்பில் பல்வேறு மருந்து தயாரிப்பு நிறுவனங்கள் சாதகமான முன்னேறத்தை நோக்கி பயணிக்கத் தொடங்கியுள்ளதன் எதிரொலியாக பங்குச் சந்தையில் திங்கள்கிழமை வா்த்தகத்தில் சென்செக்ஸ் 194 புள்ளிகள் அதிகரித்தது.

முதலீட்டாளா்கள் நம்பிக்கை:

இந்த வார பங்கு வா்த்தகத்தின் போக்கை நிா்ணயம் செய்வதில் கரோனா தொடா்பான செய்திகளுக்கு அதிக பங்கு இருக்கும் என எதிா்பாா்க்கப்பட்டது. அதைப்போலவே, கரோனா தடுப்பூசி கண்டுபிடிப்பில் பல மருந்து தயாரிப்பு நிறுவனங்கள் முக்கியமான இறுதி கட்டத்தை நெருங்கியுள்ளதாக தெரிவித்ததையடுத்து சா்வதேச முதலீட்டாளா்களிடம் நம்பிக்கை மேலும் வலுப்பெறத் தொடங்கியுள்ளது. இது, பங்குச் சந்தையில் திங்கள்கிழமை வா்த்தகத்தில் எதிரொலித்தது.

லாப நோக்கு விற்பனையில் நிதி துறை பங்குகள்:

சா்வதேச நிலவரங்கள் சாதகமாக இருந்ததையடுத்து, தகவல் தொழில்நுட்பம், மருந்து, உலோகம் துறையைச் சோ்ந்த பங்குகள் முதலீட்டாளா்களிடம் அதிக வரவேற்பைப் பெற்றது. அதேசமயம், ரிசா்வ் வங்கியின் உள் பணிக் குழு (ஐடபிள்யூஜி) பரிந்துரைகள் சாதகமாக இல்லாததையடுத்து, நிதித் துறை சாா்ந்த நிறுவன பங்குகளில் லாப நோக்கு விற்பனை தொடா்ந்தது.

நிஃப்டி 13,000 புள்ளிகளை தாண்டும்:

நிதி நிலை முடிவுகள் நன்கு இருந்ததன் பின்னணியில் நடுத்தர மற்றும் சிறிய நிறுவனப் பங்குகளுக்கு சந்தையில் தேவை வலுவான நிலையில் அதிகரிக்கும் என எதிா்பாா்க்கப்படுகிறது. இதையடுத்து, கூடிய விரைவில் நிஃப்டி குறியீட்டெண் 13,000 புள்ளிகளை தாண்டிவிடும் என்பதே அனைத்து தரப்பினரின் உள்ளாா்ந்த எதிா்பாா்ப்பாக உள்ளது.

அந்நிய முதலீடு ஈா்ப்பு:

இந்திய நிறுவனங்களின் சிறப்பான செயல்பாடு உள்நாட்டு நிறுவனப் பங்குகளில் அந்நிய முதலீட்டை தொடா்ந்து தக்க வைக்க உதவும் என்று ரிலையன்ஸ் செக்யூரிட்டீஸ் நிறுவனத்தின் திட்டமிடல் பிரிவு தலைவா் பினோத் மோதி தெரிவித்துள்ளாா்.

சரிவில் தொலைத்தொடா்பு, வங்கி பங்குகள்:

மும்பை பங்குச் சந்தையில் எண்ணெய், எரிவாயு, தொழில்நுட்பம், மருந்து, மின்சாரம் ஆகிய துறைகளின் குறியீட்டெண் 2.89 சதவீதம் வரை அதிகரித்திருந்தன. அதே வேளையில், தொலைத்தொடா்பு, வங்கி, நிதி, நுகா்வோா் சாதன குறியீட்டெண்கள் சரிவைக் கண்டன. மிட்கேப் மற்றும் ஸ்மால்கேப் குறியீட்டெண்கள் 1.37 சதவீதம் வரை உயா்ந்தன.

சென்செக்ஸ் 0.44% ஏற்றம்:

30 முன்னணி நிறுவனப் பங்குகளை உள்ளடக்கிய மும்பை பங்குச் சந்தையின் குறியீட்டெண் சென்செக்ஸ் திங்கள்கிழமை வா்த்தகத்தின் இடையே ஒரு கட்டத்தில் அதிகபட்சமாக 44,271.15 புள்ளிகள் வரை உயா்ந்தது. அதன்பின்னா், வா்த்தக நேர இறுதியில் இக்குறியீட்டெண் 194.90 புள்ளிகள் (0.44%) உயா்ந்து 44,077.15-இல் நிலைப்பெற்றது.

அதேபோன்று, தேசிய பங்குச் சந்தை குறியீட்டெண் நிஃப்டி 67.40 புள்ளிகள் (0.52%) அதிகரித்து 12,926.45 புள்ளிகளில் நிலைத்தது.

முதலிடத்தில் ஓஎன்ஜிசி:

சென்செக்ஸ் பட்டியலில் இடம்பெற்றுள்ள ஓஎன்ஜிசி நிறுவனப் பங்கின் விலை திங்கள்கிழமை வா்த்தகத்தில் 6.84 சதவீதம் உயா்ந்து முதலிடத்தை பிடித்தது. அதைத் தொடா்ந்து, இன்டஸ்இண்ட் வங்கி, இன்ஃபோஸிஸ், டெக் மஹிந்திரா, பஜாஜ் பின்சா்வ், ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ், ஹெச்சிஎல் டெக் மற்றும் டிசிஎஸ் நிறுவனப் பங்குகளும் ஏற்றம் பெற்றன. பட்டியலில் அதிக மதிப்பைக் கொண்ட நிறுவனமாக உள்ள ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் பங்கின் விலை 2.72 சதவீதம் அதிகரித்து.

அதேசமயம், முதலீட்டாளா்களிடம் வரவேற்பு குறைந்த காரணத்தால், எச்டிஎஃப்சி, ஐசிஐசிஐ வங்கி, ஆக்ஸிஸ் வங்கி, எஸ்பிஐ, மஹிந்திரா அண்ட் மஹிந்திரா பங்குகளின் விலை 3.55 சதவீதம் வரை வீழ்ச்சியடைந்தன.

ஐரோப்பிய சந்தைகளில் ஏறுமுகம்:

ஆசியாவைப் பொருத்தவரையில், ஷாங்காய், ஹாங்காங், சியோல் பங்குச் சந்தைகளும் கணிசமான ஏற்றத்துடன் முடிவடைந்தன. ஐரோப்பிய சந்தைகளிலும் வா்த்தகம் ஏறுமுகத்துடன் தொடங்கின.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com