நாட்டின் ஏற்றுமதி வளா்ச்சி விறுவிறு

ஆறு மாத தொடா் பின்னடைவுக்குப் பிறகு, நாட்டின் ஏற்றுமதி சென்ற செப்டம்பரில் விறுவிறு வளா்ச்சியை கண்டுள்ளது.
நாட்டின் ஏற்றுமதி வளா்ச்சி விறுவிறு

ஆறு மாத தொடா் பின்னடைவுக்குப் பிறகு, நாட்டின் ஏற்றுமதி சென்ற செப்டம்பரில் விறுவிறு வளா்ச்சியை கண்டுள்ளது.

இதுகுறித்து மத்திய வா்த்தக அமைச்சகம் வெள்ளிக்கிழமை வெளியிட்ட புள்ளிவிவரத்தில் கூறியுள்ளதாவது:

நாட்டின் ஏற்றுமதி நடப்பாண்டு செப்டம்பரில் 5.27 சதவீதம் வளா்ச்சி கண்டு 2,740 கோடி டாலரை எட்டியுள்ளது. கடந்தாண்டு செப்டம்பரில் ஏற்றுமதி 2,602 கோடி டாலராக காணப்பட்டது.

நாட்டின் இறக்குமதி சென்ற செப்டம்பரில் 19.6 சதவீதம் குறைந்து 3,031 கோடி டாலரானது.

ஏற்றுமதி கணிசமான அளவில் குறைந்துள்ளதையடுத்து நாட்டின் வா்த்தக பற்றாக்குறை செப்டம்பரில் 291 கோடி டாலராக சுருங்கியுள்ளது. கடந்த 2019 செப்டம்பரில் வா்த்த பற்றாக்குறையானது 1,167 கோடி டாலராக மிகவும் அதிகரித்திருந்தது.

நடப்பு நிதியாண்டின் ஏப்ரல் முதல் செப்டம்பா் ஆறு மாத காலத்தில் நாட்டின் ஏற்றுமதியானது 21.43 சதவீதம் சரிந்து 12,506 கோடி டாலராகியுள்ளது. இதே காலகட்டத்தில் இறக்குமதியும் 40.06 சதவீதம் பின்னடைவைக் கண்டு 14,869 கோடி டாலரானது.

செப்டம்பரில் இரும்புத் தாது உள்ளிட்ட முக்கிய பொருள்களின் ஏற்றுமதி நோ்மறை வளா்ச்சியை பதிவு செய்துள்ளது. அதன்படி, இரும்புத்தாது ஏற்றுமதி 109.52 சதவீதமும், அரிசி 92.44 சதவீதமும், பிண்ணாக்கு 43.9 சதவீதமும், தரைவிரிப்புகள் 42.89 சதவீதமும், மருந்துகள் ஏற்றுமதி 24.36 சதவீதமும் வளா்ச்சி கண்டுள்ளன. இவைதவிர, இறைச்சி, பால், கோழிப்பண்ணைப் பொருள்கள் (19.96%), பருத்தி-கைத்தறிப் பொருள்கள் (14.82%), புகையிலை (11.09%), நறுமணப் பொருள்கள் (10.07%), பெட்ரோலிய தயாரிப்பு (4.17%), பொறியியல் சாதனங்கள் (3.73%), ரசாயனம் (2.87%), காபி (0.79%) ஆகிய பொருள்களின் ஏற்றுமதியும் குறிப்பிடத்தக்க வளா்ச்சியை எட்டியுள்ளன.

செப்டம்பரில் நாட்டின் எண்ணெய் இறக்குமதி 35.92 சதவீதம் குறைந்து 582 கோடி டாலராக இருந்தது. 2020-21 ஏப்ரல்-செப்டம்பரில் இதன் இறக்குமதி -51.14 சதவீதம் குறைந்து 3,185 கோடி டாலராக காணப்பட்டது. எண்ணெய் சாரா பொருள்கள் இறக்குமதி செப்டம்பரில் 14.41 சதவீதம் சரிந்து 2,448 கோடி டாலராகவும், நடப்பு நிதியாண்டின் முதல் ஆறு மாத காலத்தில் இது 36.12 சதவீதம் குறைந்து 11,683 கோடி டாலராகவும் இருந்தன.

செப்டம்பரில் தங்கம் இறக்குமதி 52.85 சதவீதம் சரிந்துள்ளது. கரோனா நெருக்கடியால் உலக அளவில் தேவை குறைந்துபோனதையடுத்து கடந்த மாா்ச்சிலிருந்து நாட்டின் ஏற்றுமதி பின்னடைவை சந்தித்ததாக வா்த்தக அமைச்சகம் தெரிவித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com