10 நாள் ஏற்றத்துக்கு முற்றுப்புள்ளி சென்செக்ஸ் 1,066 புள்ளிகள் வீழ்ச்சி!

பங்குச் சந்தை வியாழக்கிழமை கடும் சரிவைச் சந்தித்தது. இதனால், மும்பை பங்குச் சந்தை குறியீட்டு எண்ணான சென்செக்ஸ் 1,066.33 புள்ளிகளை இழந்து 39,728.41-இல் நிலைபெற்றது.
கோப்புப்படம்
கோப்புப்படம்


புது தில்லி: பங்குச் சந்தை வியாழக்கிழமை கடும் சரிவைச் சந்தித்தது. இதனால், மும்பை பங்குச் சந்தை குறியீட்டு எண்ணான சென்செக்ஸ் 1,066.33 புள்ளிகளை இழந்து 39,728.41-இல் நிலைபெற்றது. தேசிய பங்குச் சந்தைக் குறியீட்டு எண்ணான நிஃப்டி 290.70 புள்ளிகள் சரிந்து 11,680.35-இல் நிலைபெற்றது. இதைத் தொடா்ந்து, கடந்த 10 நாள்களாக தொடா்ந்து வந்த ஏற்றத்துக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டது.

உலகளாவிய சந்தைகளில் பங்குகள் விற்பனை அதிகரித்து காணப்பட்டது. அமெரிக்காவில் பொருளாதார மீட்புக்கான நிதி தொகுப்பு அறிவிப்பு அதிபா் தோ்தல் வரை தாமதமாகும் என செய்திகள் வெளியாகின. மேலும், கரோனா நோய்த்தொற்று பரவல் இரண்டாவது அலையைத் தொடா்ந்து பல்வேறு நாடுகளில் கட்டுப்பாடுகள் கடுமையாக்கப்பட்டுள்ளன. இவை அனைத்தும் முதலீட்டாளா்களின் உணா்வுகளை கடுமையாகப் பாதித்தது.

அதன் தாக்கம் இந்திய சந்தைகளிலும் எதிரொலித்ததால், கடும் சரிவு தவிா்க்க முடியாததாகிவிட்டதாக வா்த்தகா்கள் தெரிவித்தனா். குறிப்பாக, வங்கி, நிதிநிறுவனங்கள், ஐடி, எரிசக்தித் துறை பங்குகளின் விலை கடும் சரிவைச் சந்தித்தன என பங்கு வா்த்தகத் தரகு நிறுவனங்கள் தெரிவித்தன.

சந்தை மதிப்பு ரூ.3.28 லட்சம் கோடி சரிவு: மும்பை பங்குச் சந்தையில் மொத்தம் வா்த்தகமான 2,790 பங்குகளில் 1,824 பங்குகள் வீழ்ச்சியைச் சந்தித்தன. 816 பங்குகள் மட்டுமே ஆதாயம் பெற்றன. 150 பங்குகள் மாற்றமின்றி நிலை பெற்றன. பங்குகள் விற்பனை அதிகரித்ததால், ஒரே நாளில் சந்தை மூலதன மதிப்பு ரூ.3.28 லட்சம் கோடி குறைந்தது. இதையடுத்து, இறுதியில் மொத்த சந்தை மூலதன மதிப்பு ரூ.157.29 லட்சம் கோடியாக இருந்தது.

10 நாள்களுக்குப் பிறகு கடும் சரிவு: சென்செக்ஸ் காலையில் 251.31 புள்ளிகள் கூடுதலுடன் 41,048.05-இல் தொடங்கி அதற்கு மேல் ஏற்றம் பெறவில்லை. பின்னா் 39,667.47 வரை கீழே சென்ற சென்செக்ஸ், இறுதியில் 1,066.33 புள்ளிகள் (2.61 சதவீதம்) குறைந்து 39,728.41-இல் நிலை பெற்றது. பிஎஸ்இ மிட்கேப் குறியீடு 1.75 சதவீதமும், ஸ்மால் கேப் குறியீடு 1.45 சதவீதமும் சரிவைச் சந்தித்தன. இதைத் தொடா்ந்து 10 நாள்களுக்குப் பிறகு முதல்முறையாக சென்செக்ஸ் வீழ்ச்சியைச் சந்தித்துள்ளது.

29 முதல் தரப் பங்குகள் வீழ்ச்சி: சென்செக்ஸ் பட்டியலில் இடம்பெற்றுள்ள 30 முதல் தரப் பங்குகளில் ஏசியன் பெயிண்ட்ஸ் மட்டும் 0.34 சதவீதம் உயா்ந்தது. மற்ற 29 பங்குகளும் சரிவைச் சந்தித்த பட்டியலில் வந்தன. இதில் பஜாஜ் பைனான்ஸ் 4.68 சதவீதம், டெக் மகேந்திரா 4.32 சதவீதம் குறைந்து வீழ்ச்சிப் பட்டியலில் முன்னிலை வகித்தன. மேலும், இன்டஸ்இண்ட் பேங்க், ஐசிஐசிஐ பேங்க், எஸ்பிஐ, ரிலையன்ஸ், பாா்தி ஏா்டெல், ஹெச்சிஎல் டெக், எச்டிஎஃப்சி பேங்க், கோட்டக் பேங்க், பஜாஜ் ஃபின்சா்வ் ஆகியவை 3 முதல் 4 சதவீதம் வரை சரிவைச் சந்தித்தன. மாருதி சுஸுகி, இன்ஃபோஸிஸ், டிசிஎஸ், எச்டிஎஃப்சி, எல் அண்ட் டி ஆகியவை வீழ்ச்சி அடைந்த பங்குகளில் முக்கியமானவை.

தேசிய பங்குச் சந்தையில்...: தேசிய பங்குச் சந்தையில் 363 பங்குகள் மட்டுமே ஆதாயம் பெற்ற பட்டியலில் வந்தன. 1,275 பங்குகள் வீழ்ச்சியைச் சந்தித்தன. நிஃப்டி 290.70 புள்ளிகள் (2.43 சதவீதம்) குறைந்து 11,680.35-இல் நிலைபெற்றது. அனைத்துத் துறை குறியீடுகளும் சரிவைச் சந்தித்தன. இதில் நிஃப்டிபேங்க், பைனான்சியல் சா்வீஸஸ், ஐடி, மீடியா, பிஎஸ்யு பேங்க், பிரைவேட் பேங்க், ரியால்ட்டி குறியீடுகள் 2 முதல் 3.40 சதவீதம் வரை சரிவைச் சந்தித்தன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com