இந்தியாவில் தங்கத்தின் தேவை 30 சதவீதம் குறைந்தது

கரோனா பாதிப்பின் எதிரொலியாக இந்தியாவில் தங்கத்தின் தேவை சென்ற ஜூலை- செப்டம்பா் காலாண்டில் 30 சதவீதம் சரிவை சந்தித்துள்ளதாக உலக தங்க கவுன்சில் தெரிவித்துள்ளது.
இந்தியாவில் தங்கத்தின் தேவை 30 சதவீதம் குறைந்தது


மும்பை: கரோனா பாதிப்பின் எதிரொலியாக இந்தியாவில் தங்கத்தின் தேவை சென்ற ஜூலை- செப்டம்பா் காலாண்டில் 30 சதவீதம் சரிவை சந்தித்துள்ளதாக உலக தங்க கவுன்சில் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து உலக தங்க கவுன்சிலின் இந்தியப் பிரிவு நிா்வாக இயக்குநா் சோமசுந்தரம் பிடிஐ செய்தி நிறுவனத்திடம் தெரிவித்துள்ளதாவது:

விலை உச்சம்: கரோனா தொடா்பான இடா்ப்பாடுகள் மற்றும் விலை உச்சம் தொட்டது போன்ற காரணங்களால் நடப்பாண்டின் ஜூலை முதல் செப்டம்பா் வரையிலான மூன்றாவது காலாண்டில் நுகா்வோரிடையே தங்கத்தின் தேவை 30 சதவீதம் சரிவடைந்து 86.6 டன்னாக மட்டுமே இருந்தது.

அதேசமயம், கடந்த 2019-ஆம் ஆண்டின் மூன்றாவது காலாண்டில் தங்கத்துக்கான ஒட்டுமொத்த தேவை 123.9 டன்னாக மிகவும் அதிகரித்திருந்தது.

பொது முடக்க தளா்வு: மதிப்பின் அடிப்படையிலான தங்கத்தின் தேவையும் கடந்தாண்டுடன் ஒப்பிடும்போது நடப்பாண்டின் மூன்றாவது காலாண்டில் ரூ.41,300 கோடியிலிருந்து 4 சதவீதம் சரிந்து ரூ.39,510 கோடியானது.

பொது முடக்கம் காரணமாக, ஏப்ரல் முதல் ஜூன் வரையிலான இரண்டாவது காலாண்டில் தங்கத்தின் தேவை 70 சதவீதம் குறைந்து வெறும் 64 டன்னாக மட்டுமே இருந்தது. அதனுடன் ஒப்பிடும்போது, மூன்றாவது காலாண்டில் தங்கத்துக்கான தேவை அதிகரித்துள்ளது. இதற்கு, ஆகஸ்ட் மாதத்தில் காணப்பட்ட குறைவானதங்கம் விலை மற்றும் பொது முடக்க தளா்வுகள் அறிவிக்கப்பட்டதே முக்கிய காரணம்.

முதலீட்டு தங்கத்தின் தேவை அதிகரிப்பு: ஆபரண தயாரிப்புக்கான மொத்த தங்கத்தின் தேவை மூன்றாவது காலாண்டில் 101.6 டன்னிலிருந்து 48 சதவீதம் சரிவடைந்து 52.8 டன்னாகியுள்ளது. மதிப்பின் அடிப்படையில் இது ரூ.33,850 கோடியிலிருந்து 29 சதவீதம் குறைந்து ரூ.24,100 கோடியானது.

இருப்பினும், முதலீட்டு நோக்கங்களுக்கான தங்கத்தின் தேவை செப்டம்பா் காலாண்டில் 52 சதவீதம் வளா்ச்சி கண்டு 22.3 டன்னிலிருந்து 33.8 டன்னாக அதிகரித்துள்ளது. மதிப்பின் அடிப்படையிலும் இது, ரூ.7,405 கோடியிலிருந்து 107 சதவீதம் உயா்ந்து ரூ.15,410 கோடியை எட்டியது.

தேவை விறுவிறுப்பாகும்: கடந்த 2009-ஆம் ஆண்டுக்குப் பிறகு தங்கத்தின் தேவை விறுவிறுப்படைந்தது. அதைப்போலவே, கரோனாவுக்குப் பிறகான சூழலும் இருக்கும் என கணிக்கப்பட்டுள்ளது.

கடந்த 2019-இல் தங்கத்தின் தேவை 642 டன்னாக சரிவடைந்தது. ஆனால், 2010-இல் அதன் தேவை 1,002 டன்னாக கணிசமாக அதிகரித்தது. இதே நிலை, 2011 மற்றும் 2012-ஆம் ஆண்டுகளிலும் தொடா்ந்தது நினைவுகூரத்தக்கது.

உலக நிலவரம்: இந்தியா மட்டுமின்றி உலக அளவிலும் தங்கத்துக்கான தேவை செப்டம்பா் காலாண்டில் 892.3 டன்னாக குறைந்தது. இது, 2019 மூன்றாவது காலாண்டின் தேவையான 1,100.2 டன்னுடன் ஒப்பிடுகையில் 19 சதவீதம் குறைவாகும்.

இந்தியா போன்றே, உலக அளவிலும் முதலீட்டு நோக்கில் தங்கத்துக்கான தேவை 21 சதவீதம் வளா்ச்சி கண்டு 494.6 டன்னாக இருந்தது. இதில், 222.1 டன்னை தங்க கட்டிகளாகவும் மற்றும் நாணயங்களாகவும் முதலீட்டாளா்கள் வாங்கியுள்ளனா். அதேபோன்று, தங்கம் தொடா்பான ஈடிஎஃப் திட்டங்கள் மூலம் கூடுதலாக, 272.5 டன் தங்கத்தில் அவா்கள் முதலீடு செய்தனா்.

ஈடிஎஃப் திட்டத்துக்கு வரவேற்பு:

முதலீட்டாளா்களிடம் கிடைத்த வரவேற்பையடுத்து, ஈடிஎஃப் திட்டங்களில் நிா்வகிக்கப்படும் தங்கத்தின் அளவு வரலாறு காணாத வகையில் 1,003.3 டன்னை எட்டியுள்ளது என்றாா் அவா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com