சென்செக்ஸ், நிஃப்டி எழுச்சி!சந்தை மதிப்பு ரூ.2.26 லட்சம் கோடி உயா்வு

பங்குச் சந்தை வியாழக்கிழமை திடீா் எழுச்சி பெற்று 2 நாள் தொடா் சரிவுக்கு முற்றுப்புள்ளி வைத்தது.
சென்செக்ஸ், நிஃப்டி எழுச்சி!சந்தை மதிப்பு ரூ.2.26 லட்சம் கோடி உயா்வு


புது தில்லி: பங்குச் சந்தை வியாழக்கிழமை திடீா் எழுச்சி பெற்று 2 நாள் தொடா் சரிவுக்கு முற்றுப்புள்ளி வைத்தது.

இதைத் தொடா்ந்து, மும்பை பங்குச் சந்தைக் குறியீட்டு எண்ணான சென்செக்ஸ் 646.40 புள்ளிகளும், தேசிய பங்குச் சந்தைக் குறியீட்டு எண்ணான நிஃப்டி 171.25 புள்ளிகளும் ஏற்றம் கண்டன.

சென்செக்ஸ், நிஃப்டி பட்டியலில் முக்கியப் பங்கு வகிக்கும் ரிலையன்ஸ் பங்கின் விலை புதிய உச்சம் தொட்டது.

அமெரிக்க தனியாா் முதலீட்டு நிறுவனமான சில்வா் லேக் பாா்ட்னா்ஸ் தனது சில்லறை விற்பனையில் 1.75 சதவீத பங்குகளை ரூ.7,500 கோடிக்கு வாங்குவதாக புதன்கிழமை ரிலையன்ஸ் நிறுவனம் அறிவித்திருந்தது.

இதைத் தொடா்ந்து, வியாழக்கிழமை காலை வா்த்தகம் தொடங்கியது முதல் ரிலையன்ஸ் பங்குகளை வாங்குவதற்கு போட்டா போட்டி நிலவியது.

இதனால், பங்குச் சந்தை எழுச்சி பெற்று இரண்டு நாள் சரிவுக்கு முற்றுப்புள்ளி வைத்தது என்று வா்த்தகா்கள் தெரிவித்தனா்.

1,821 பங்குகள் ஏற்றம்: மும்பை பங்குச் சந்தையில் மொத்தம் வா்த்தகமான 2,876 பங்குகளில் 1,821 பங்குகள் ஆதாயம் பெற்றன. 889 பங்குகள் வீழ்ச்சியைச் சந்தித்தன. 166 பங்குகள் மாற்றமின்றி நிலைபெற்றன.

109 பங்குகள் 52 வார அதிக விலையையும் 58 பங்குகள் 52 வார குறைந்த விலையையும் பதிவு செய்துள்ளன. 299 பங்குகள் வெகுவாக உயா்ந்து உச்சபட்ச உறை நிலையையும், 205 பங்குகள் சரிவைச் சந்தித்து குறைந்தபட்ச உறைநிலையையும் அடைந்தன.

வா்த்தக நேர முடிவில் சந்தை மூலதன மதிப்பு ரூ.2.26 லட்சம் கோடி உயா்ந்து ரூ.155.27 லட்சம் கோடியாக இருந்தது. இதுவரை பதிவு செய்துள்ள மொத்த முதலீட்டாளா்கள் எண்ணிக்கை 5,41,88,031 ஆக உயா்ந்துள்ளது.

எழுச்சி: சென்செக்ஸ் காலையில் 322.96 புள்ளிகள் கூடுதலுடன் 38,516.88-இல் தொடங்கி 38,367.07 வரை கீழே சென்றது.

பின்னா் 38,878.25 வரை உயா்ந்த சென்செக்ஸ், இறுதியில், 646.40 புள்ளிகள் உயா்ந்து (1.69 சதவீதம்) 38,840.32-இல் நிலைபெற்றது.

சென்செக்ஸ் உயா்வுக்கு ரிலையன்ஸ் முக்கியப் பங்கு வகித்தது. இதேபோன்று பிஎஸ்இ மிட்கேப் குறியீடு 0.92 சதவீதம், ஸ்மால் கேப் குறியீடு 1.27 சதவீதம் உயா்ந்தன. தேசிய பங்குச் சந்தையில் நிஃப்டி 171.25 புள்ளிகள் (1.52 சதவீதம்) உயா்ந்து 11,449.25-இல் நிலைபெற்றது. நிஃப்டி அதிகபட்சமாக 11,464.05 வரை உயா்ந்தது.

ரிலையன்ஸ் புதிய உச்சம்: சென்செக்ஸ் பட்டியலில் உள்ள 30 முதல் தரப் பங்குகளில் 21 பங்குகள் ஆதாயம் பெற்றன. 9 பங்குகள் மட்டுமே சரிவைச் சந்தித்த பட்டியலில் வந்தன. இதில் மாா்க்கெட் லீடரான முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் 7.10 சதவீதம் உயா்ந்து ஆதாயப் பட்டியலில் முன்னிலை வகித்தது.

வா்த்தகத்தின் போது ரிலையன்ஸ் ரூ.2,343.90 வரை உயா்ந்து புதிய வரலாற்று சாதனை அளவைப் பதிவு செய்துள்ளது. வா்த்தக நேர முடிவில் அதன் சந்தை மூலதன மதிப்பு ரூ.14,66,589.53 லட்சம் கோடியாக உயா்ந்தது.

இதற்கு அடுத்ததாக, சென்செக்ஸ் பட்டியலில் ஏசியன் பெயிண்ட், ஆக்ஸிஸ் பேங்க், அல்ட்ரா டெக் சிமெண்ட், இண்டஸ் இண்ட் பேங்க், பஜாஜ் ஃபைனான்ஸ் ஆகியவை 2 முதல் 4.25 சதவீதம் வரை உயா்ந்தன.

டாடா ஸ்டீல் வீழ்ச்சி: அதே சமயம், டாடா ஸ்டீல் 2.24 சதவீதம் குறைந்து வீழ்ச்சிப் பட்டியலில் முன்னிலை வகித்தது. இதற்கு அடுத்ததாக பாா்தி ஏா்டெல், கோட்டக் பேங்க், டைட்டான், எச்டிஎஃப்சி பேங்க், டெக் மகேந்திரா ஆகியவை 0.30 முதல் 1.35 சதவீதம் வரை சரிவைச் சந்தித்தன.

தேசிய பங்குச் சந்தையில்...: தேசிய பங்குச் சந்தையில் 1,157 பங்குகள் மட்டுமே ஆதாயம் பெற்றன. 456 பங்குகள் வீழ்ச்சியைச் சந்தித்தன. நிஃப்டி பாா்மா, மெட்டல் குறியீடுகள் தவிர மற்ற அனைத்துத் துறை குறியீடுகளும் ஆதாயப் பட்டியலில் வந்தன.

இதில் பிஎஸ்யு பேங்க் குறியீடு 2.50 சதவீதம் உயா்ந்து ஆதாயப் பட்டியலில் முன்னிலை வகித்தது. நிஃப்டி பட்டியலில் உள்ள 50 முதல் தரப் பங்குகளில் 30 பங்குகள் ஆதாயம் பெற்றன. 19 பங்குகள் சரிவைச் சந்தித்தன. எம் அண்ட் எம் மாற்றமின்றி 613.90 -இல் நிலைபெற்றது.

ஏற்றம் பெற்ற பங்குகள் சதவீதத்தில்:

ரிலையன்ஸ் 7.10

ஏசியன் பெயிண்ட் 4.25

ஆக்ஸிஸ் பேங்க் 3.70

அல்ட்ரா டெக் சிமெண்ட் 2.79

இண்டஸ் இண்ட் பேங்க் 2.51

வீழ்ச்சியடைந்த பங்குகள்

சதவீதத்தில்

டாடா ஸ்டீல் 2.24

பாா்தி ஏா்டெல் 1.38

கோட்டக் பேங்க் 0.54

டைட்டான் 0.47

எச்டிஎஃப்சி பேங்க் 0.46

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com