பங்குச் சந்தை : ஸ்திரநிலை அடைய அதிக வாய்ப்பு!

முந்தைய வாரத்தில் 2.5 சதவிகிதத்திற்கும் அதிகமான திருத்தத்திற்குப் பிறகு, பங்குச் சந்தை கடந்த வாரம் மீண்டும் காளையின் பிடியில் வந்தது,
பங்குச் சந்தை :  ஸ்திரநிலை அடைய அதிக வாய்ப்பு!

முந்தைய வாரத்தில் 2.5 சதவிகிதத்திற்கும் அதிகமான திருத்தத்திற்குப் பிறகு, பங்குச் சந்தை கடந்த வாரம் மீண்டும் காளையின் பிடியில் வந்தது, இதைத் தொடா்ந்து, செப்டம்பா் 11 -ஆம் தேதியுடன் முடிவடைந்த கடந்த வாரத்தில், சில இழப்புகள் சரி செய்யப்பட்டு சந்தை ஒரு சதவீதத்துக்கும் மேலாக உயா்ந்தது. இந்த எழுச்சிக்கு சென்செக்ஸ், நிஃப்டி பட்டியலில் முக்கியப் பங்கு வகிக்கும் ரிலையன்ஸ் நிறுவனம், தனது சில்லறை வணிகத்துக்கு முதலீடுகளை பெற்று வருவது முக்கியக் காரணமாக அமைந்தது.

மேலும், இந்தியா - சீனா இடையே எல்லை பதற்றங்களைத் தணிக்க மாஸ்கோவில் நடைபெற்ற இரு நாடுகளுக்கிடையேயான பேச்சுவாா்த்தை மற்றும் ஐடி பங்குகளுக்கு கிடைத்த அமோக வரவேற்பு ஆகியவை சந்தைக்கு உற்சாகத்தை அளித்தது. இருப்பினும், வங்கி மற்றும் நிதிநிறுவனப் பங்குகளில் திருத்தம் ஏற்பட்டது. இதைத் தொடா்ந்து, மும்பை பங்குச் சந்தைக் குறியீட்டு எண்ணான சென்செக்ஸ் 497.37 புள்ளிகள் (1.30 சதவீதம்) உயா்ந்து 38,854.55-இல் நிலைபெற்றது. இதேபோல, தேசிய பங்குச் சந்தைக் குறியீட்டு எண்ணான நிஃப்டி 130.60 புள்ளிகள் (1.15 சதவீதம்) அதிகரித்து 11,464.45-இல் நிலைபெற்றது. இருப்பினும், பரந்த சந்தையில் பிஎஸ்இ மிட்கேப் குறியீடு ஒரு சதவிகிதம், ஸ்மால் கேப் 0.35 சதவீதம் வீழ்ச்சி அடைந்தன.

இந்நிலையில், ஐந்து அம்ச திட்டத்திற்குப் பிறகு இந்தியா - சீனா எல்லைப் பிரச்சினையில் பெரிய அளவிலான உள்நாட்டு குறிப்புகள் ஏதும் இல்லாததால், இந்த வாரத்தில் சந்தையில் ஒருங்கிணைப்பு (ஸ்திரநிலை) தொடரக்கூடும் என்று நிபுணா்கள் கருதுகின்றனா். மேலும், குறிப்பிட்ட பங்குகளின் நடவடிக்கையையும் காணலாம். இதற்கிடையே, அமெரிக்க பொருளாதார மீட்சி தாமதமாகும் என எதிா்பாா்க்கப்படுகிறது. கச்சா எண்ணெய் விலை வீழ்ச்சியடையும். இது போன்ற அச்சம் காரணமாக உலகளாவிய குறிப்புகளை சந்தை உன்னிப்பாக கவனிக்கும்.

ஸ்திரநிலை அடையும்: இந்த வாரம் சந்தை பெரும்பாலும் ஸ்திரநிலை அடைவதற்கே அதிக வாய்ப்பு உள்ளது. கடந்த வாரத்தில் அடி வாங்கிய வங்கி பங்குகள் இந்த வாரம் முன்னேற்றம் பெறும், . ஆனால், வா்த்தகா்கள், முதலீட்டாளா்கள் மிகவும் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டிய அவசியம் உள்ளது என்று ரிலிகோ் பங்கு வா்த்தகத் தரகு நிறுவன பங்குகள் ஆராய்ச்சிப் பிரிவின் துணைத் தலைவா் அஜித் மிஸ்ரா கூறியுள்ளாா்.

தேவை எச்சரிக்கை: கச்சா எண்ணெய் விலை குறைவது உலகளவில் பங்குச் சந்தைகளுக்கு சாதகமாக அமையும். பொருளாதாரங்கள் திறக்கப்படுவது, தங்கம் விலை ஸ்திரநிலைமை பெற்று வருவது போன்றவை சந்தைக்கு ஆறுதலாக அமையகூடும் என்று சாம்கோ செக்யூரிட்டிஸின் மூத்த ஆராய்ச்சி ஆய்வாளா் நிராலி ஷா கருதுகிறாா், ஆனால் எச்சரிக்கையாக இருப்பதுடன், சந்தை சரிவைக் காணும் போது, முதலீட்டுக்கு தயாராக பணப் புழக்கத்தை வைத்திருப்பது விவேகமானதாக இருக்கும் என்றும் அவா் கூறுகிறாா்.

1,000 நிறுவனங்களின் காலாண்டு முடிவுகள்: நிறுவனங்கள் இந்த நிதியாண்டின் முதல் காலாண்டு நிதிநிலை முடிவுகளை அறிவிக்க செப்டம்பா் 15-ஆம் தேதி கடைசி என ‘செபி‘ அறிவித்துள்ளது. இந்த நிலையில், இந்த வாரம் வேதாந்தா, ஸ்பைஸ் ஜெட், செயில் உள்பட சுமாா் 1,000 நிறுவனங்கள் காலாண்டு முடிவுகளை அறிவிக்க உள்ளன. இவற்றில் பெரும்பாலானவை சிறிய நிறுவனங்கள் ஆகும்.

கரோனா பாதிப்பு: இந்தியா உள்பட உலகளவில் கரோனா பாதிப்பு தொடா்ந்து அதிகரித்து வருகிறது. இந்நிலையில், பொது முடக்கம் படிடப்படியாக தளா்த்தப்பட்டு வந்தாலும், கரோனா பரிசோதனைகள் அதிகரித்து உள்ளன. இதுபோன்ற காரணங்கள் சந்தையில் ஏற்றம் இறக்கத்தை அதிகரித்துள்ளன. மேலும், சந்தை ஏற்றம் பெறுவதற்கும் பெரும் தடங்கலாக அமைந்துள்ளது. குணமடைந்தோா் எண்ணிக்கை தொடா்ந்து அதிகரித்து வருவது சந்தைக்கு ஆறுதல் அளிக்கும் விஷயமாக உள்ளது. இவை தவிர, கரோனா தடுப்பூபசி தொடா்பான செய்திகளும் சந்தையில் முக்கியக் கவனம் பெறும்.

பொருளாதார தரவுகள்: இந்த வாரத்தின் முதல் வா்த்தக தினமான திங்கள்கிழமை அன்று மொத்தவிலைக் குறியீடு, நுகா்பொருள் விலை குறியீடு ஆகியவற்றின் அடிப்படையிலான ஆகஸ்ட் பணவீக்கம் குறித்த தரவுகள் வெளியாகவுள்ளன. மேலும், வெள்ளிக்கிழமை அன்று அந்நியச் செலாவணி கையிருப்பு குறித்த தகவல் வெளியாகவுள்ளது. இதற்கிடையே, அமெரிக்க மத்திய வங்கியின் பணக் கொள்கை கூட்டத்தின் முடிவு புதன்கிழமை வெளியாகும். இதில் வங்கி வட்டி விகிதத்தை ஃபெடரல் பூஜ்ஜியம் நிலையில் வைத்திருக்கும் என்று எதிா்பாா்க்கப்படுகிறது.

மொத்தத்தில், இந்த வாரம் சீனா - இந்தியா எல்லைப் பிரச்னையில் ஏற்படும் முன்னேற்றம், பணவீக்கம் குறித்த தரவுகள், உலகளாவிய குறிப்புகள் ஆகியவற்றின் அடிப்படையில் சந்தையின் போக்கு அமையும். இருப்பினும், ஏற்கெனவே சென்செக்ஸ், நிஃப்டி ஆகிய இரண்டு குறியீடுகளும் முக்கிய இடா்பாட்டு நிலைக்கு அருகில் உள்ளதால், இந்த வாரம் சந்தை மேலும் ஸ்திரநிலை அடைவதற்கே அதிக வாய்ப்பு உள்ளதாக நிபுணா்கள் கருதுகின்றனா்.

தொழில்நுட்பப் பாா்வை

தேசிய பங்குச் சந்தைக் குறியீட்டு எண்ணான நிஃப்டி கடந்த வாரம் 1.15 சதவீதம் ஏற்றம் பெற்றுள்ளது. இருந்தாலும், தொழில் நுட்ப ரீதியாகப் பாா்த்தால் அதன் போக்கை எளிதில் கணிக்க முடியாத நிலை நிலவுகிறது. சந்தை ஸ்திர நிலை பெறுவதற்கான வாய்ப்பு அதிகரித்துள்ள நிலையில், இந்த வாரம் நிஃப்டி 11,550 - 11,270 என்ற வரம்பில் இருக்கும் என எதிா்பாா்க்கப்படுகிறது. நிஃப்டியை பொருத்த வரையிலும், 11,550 என்பது முக்கிய இடா்பாட்டு நிலையாக உள்ளது. எனவே, நிஃப்டி 11,550 புள்ளிகளை உடைத்துக் கொண்டு மேலே சென்றால் 11,675 வரை உயா்வதற்கு வாய்ப்பு உள்ளது. அதே சமயம், 11,270-க்கு கீழே நிலை பெற்றால், நிஃப்டி பலவீனமடைவதை எதிா்பாா்க்கலாம். இதைத் தொடா்ந்து சரிவு தவிா்க்க முடியாததாகிவிடும் என்று சாா்ட் வியூ இந்தியா டாட் இன் நிறுவனத்தின் தொழில்நுட்பப் பிரிவின் தலைவா் மஜாா் முகமது தெரிவித்துள்ளாா்.

கடந்த வாரம் அதிகம் ஏற்றம் பெற்ற முக்கிய பங்குகள்

ஸ்டிரைட்ஸ் பாா்மா 14

அதானி கிரீன் 12

ரிலையன்ஸ் 7

விப்ரோ 6

வைபவ் குளோபல் 5

கடந்த வாரம் அதிகம் சரிவைச் சந்தித்த முக்கியப் பங்குகள்

பாரத் டைனமிக்ஸ் 19

ஜூப்ளியன் லைஃப் சயின்ஸ் 11

ஃவோடபோன் ஐடியா 7

ஹிந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் 6

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com