சென்செக்ஸ் 288 புள்ளிகள் ஏற்றம்! வங்கிப் பங்குகளுக்கு வரவேற்பு

இந்த வாரத்தின் இரண்டாவது வர்த்தக தினமான செவ்வாய்க்கிழமை பங்குச் சந்தை நேர்மறையாக முடிந்தது
சென்செக்ஸ் 288 புள்ளிகள் ஏற்றம்! வங்கிப் பங்குகளுக்கு வரவேற்பு

இந்த வாரத்தின் இரண்டாவது வர்த்தக தினமான செவ்வாய்க்கிழமை பங்குச் சந்தை நேர்மறையாக முடிந்தது. இதனால், மும்பை பங்குச் சந்தைக் குறியீட்டு எண்ணான சென்செக்ஸ் 287.72 புள்ளிகள், தேசிய பங்குச் சந்தைக் குறியீட்டு எண்ணான நிஃப்டி 81.75 புள்ளிகள் ஏற்றம் பெற்றன.
 பார்மா, வங்கி, நிதிநிறுவனப் பங்குகளுக்கு நல்ல வரவேற்பு காணப்பட்டது. ரியால்ட்டி, மீடியா, மெட்டல் பங்குகள் அதிக அளவில் விற்பனைக்கு வந்தன.
 உலகளாவிய சந்தைகள் நேர்மறையாக இருந்த நிலையில், அந்நிய முதலீடு வரத்து நிலையாக இருந்ததும் இந்திய பங்குச் சந்தைகளுக்கு உற்சாகத்தை அளித்தது. இதனால், சந்தை ஏற்றம் கண்டது என்று வர்த்தகர்கள் தெரிவித்தனர். அந்நிய நிறுவன முதலீட்டாளர்கள் திங்கள்கிழமை சுமார் ரூ.298.22 கோடிக்கு பங்குகளை வாங்கியுள்ளதாக பங்குச் சந்தை தரவுகள் தெரிவிக்கின்றன.
 1,580 பங்குகள் ஏற்றம்: மும்பை பங்குச் சந்தையில் மொத்தம் வர்த்தகமான 2,912 பங்குகளில் 1,580 பங்குகள் ஆதாயம் பெற்றன. 1,166 பங்குகள் வீழ்ச்சியைச் சந்தித்தன. 166 பங்குகள் மாற்றமின்றி நிலைபெற்றன. 165 பங்குகள் 52 வார அதிக விலையையும் 48 பங்குகள் 52 வார குறைந்த விலையையும் பதிவு செய்துள்ளன. 312 பங்குகள் வெகுவாக உயர்ந்து உச்சபட்ச உறை நிலையையும், 216 பங்குகள் சரிவைச் சந்தித்து குறைந்தபட்ச உறைநிலையையும் அடைந்தன. வர்த்தக நேர முடிவில் சந்தை மூலதன மதிப்பு ரூ.1.14 லட்சம் கோடி உயர்ந்து ரூ.159.26 லட்சம் கோடியாக இருந்தது. இதுவரை பதிவு செய்துள்ள மொத்த முதலீட்டாளர்கள் எண்ணிக்கை 5,44,01,584 ஆக உயர்ந்துள்ளது.
 எழுச்சி: சென்செக்ஸ் காலையில் 148.04 புள்ளிகள் கூடுதலுடன் 38,904.67-இல் தொடங்கி 39,102.25 வரை கீழே சென்றது. பின்னர் பிற்பகலில் முதல் தரப் பங்குகளை வாங்குவதற்கு ஆதரவு கிடைத்ததும் 39,102.25 வரை உயர்ந்த சென்செக்ஸ், இறுதியில், 287.72 புள்ளிகள் உயர்ந்து 39,044.35-இல் நிலைபெற்றது. இதேபோல பிஎஸ்இ மிட்கேப் குறியீடு 0.85 சதவீதம், ஸ்மால் கேப் குறியீடு 1.44 சதவீதம் உயர்ந்தன. தேசிய பங்குச் சந்தையில் நிஃப்டி 81.75 புள்ளிகள் (0.71) உயர்ந்து 11,521.80-இல் நிலைபெற்றது. நிஃப்டி அதிகபட்சமாக 11,535.95 வரை உயர்ந்தது.
 இன்டஸ்இண்ட் பேங்க் முன்னேற்றம்: சென்செக்ஸ் பட்டியலில் உள்ள 30 முதல் தரப் பங்குகளில் 21 பங்குகள் ஆதாயம் பெற்றன. 9 பங்குகள் மட்டுமே சரிவைச் சந்தித்த பட்டியலில் வந்தன. இதில் இன்டஸ்இண்ட் பேங்க் 4.03 சதவீதம் உயர்ந்து ஆதாயப் பட்டியலில் முன்னிலை வகித்தது. இதற்கு அடுத்ததாக பார்தி ஏர்டெல், ஆக்ஸிஸ் பேங்க், பஜாஜ் பைனான்ஸ், ஐசிஐசிஐ பேங்க், சன்பார்மா ஆகியவை 2 முதல் 2.40 சதவீதம் வரை உயர்ந்தன. மேலும், எச்டிஎஃப்சி இரட்டை நிறுவனங்கள், எஸ்பிஐ, ரிலையன்ஸ், கோட்டக் பேங்க் ஆகியவையும் ஆதாயப் பட்டியலில் வந்தன.
 டைட்டன் வீழ்ச்சி: அதே சமயம், டைட்டன் 1.20 சதவீதம், மாருதி சுஸுகி 1.05 சதவீதம் குறைந்து வீழ்ச்சிப் பட்டியலில் முன்னிலை வகித்தன. ஐடிசி, ஏசியன் பெயிண்ட்ஸ், எம் அண்ட் எம், ஹெச்சிஎல் டெக், பஜாஜ் ஆட்டோ, நெஸ்லே இந்தியா, டிசிஎஸ் ஆகியவையும் சரிவைச் சந்தித்த பட்டியலில் வந்தன.
 தேசிய பங்குச் சந்தையில்...: தேசிய பங்குச் சந்தையில் 960 பங்குகள் ஆதாயம் பெற்றன. 661 பங்குகள் வீழ்ச்சியைச் சந்தித்தன. நிஃப்டி பேங்க், பைனான்சியல் சர்வீஸஸ், பார்மா, பிரைவேட் பேங்க் குறியீடுகள் 1.30 முதல் 2 சதவீதம் வரை ஏற்றம் பெற்றன. ஆனால், ஆட்டோ, எஃப்எம்சிஜி, மெட்டல், மீடியா ஆகியவை சிறிதளவு சரிவைச் சந்தித்தன. நிஃப்டி பட்டியலில் உள்ள 50 முதல் தரப் பங்குகளில் 32 பங்குகள் ஆதாயம் பெற்றன.18 பங்குகள் வீழ்ச்சிப் பட்டியலில் இடம் பெற்றன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com