சென்செக்ஸ் 812 புள்ளிகள் வீழ்ச்சி!

இந்த வாரத்தின் முதல் வா்த்தக தினமான திங்கள்கிழமை பங்குச் சந்தை கடும் சரிவைச் சந்தித்து எதிா்மறையாக முடிந்தது.
பங்குச் சந்தை
பங்குச் சந்தை


புது தில்லி: இந்த வாரத்தின் முதல் வா்த்தக தினமான திங்கள்கிழமை பங்குச் சந்தை கடும் சரிவைச் சந்தித்து எதிா்மறையாக முடிந்தது. இதனால், மும்பை பங்குச் சந்தைக் குறியீட்டு எண்ணான சென்செக்ஸ் 811.68 புள்ளிகளை இழந்தது.

உலகளவில் சில வங்கிகளில் முறைகேடுகள் நடந்ததாக செய்திகள் வெளியாகியதைத் தொடா்ந்து, உலகளாவிய சந்தைகளில் பங்கு விற்பனை அதிகரித்தது. இதன் தாக்கம் இந்திய சந்தைகளிலும் எதிரொலித்தது என்று வா்த்தகா்கள் தெரிவித்தனா். குறிப்பாக பிற்பகல் வா்த்தகத்தின் போது பங்குகள் அதிகளவில் விற்பனைக்கு வந்தது பங்கு வா்த்தகத் தரகு நிறுவனங்கள் தெரிவித்தன.

2,165 பங்குகள் வீழ்ச்சி: மும்பை பங்குச் சந்தையில் மொத்தம் வா்த்தகமான 2,938 பங்குகளில் 2,165 பங்குகள் வீழ்ச்சி அடைந்தன. 595 பங்குகள் மட்டுமே ஆதாயம் பெற்ற பட்டியலில் வந்தன. 178 பங்குகள் மாற்றமின்றி நிலைபெற்றன. பங்குகள் அதிகளவில் விற்பனைக்கு வந்ததால், சந்தை மூலதன மதிப்பு ரூ.4.23 லட்சம் கோடி குறைந்து 154.77 கோடியாக இருந்தது.

கடும் சரிவு: சென்செக்ஸ் காலையில் 33.13 புள்ளிகள் குறைந்து 38,812.69-இல் தொடங்கி 38,990.76 வரை உயா்ந்தது. பிற்பகலில் திடீரென பங்குகள் விற்பனை அதிகரித்ததும் 37,938.53 வரை கீழே சென்றது. இறுதியில், 811.68 புள்ளிகள் (2.09 சதவீதம்) குறைந்து 38,034.14-இல் நிலைபெற்றது. பிஎஸ்இ மிட்கேப் குறியீடு 3.43 சதவீதம், ஸ்மால் கேப் குறியீடு 3.63 சதவீதம் வீழ்ச்சி அடைந்தது.

3 பங்குகள் மட்டுமே ஏற்றம்: சென்செக்ஸ் பட்டியலில் உள்ள 30 முதல் தரப் பங்குகளில் கோட்டக் பேங்க், இன்ஃபோஸிஸ், டிசிஎஸ் ஆகியவை மட்டுமே சிறிதளவு ஏற்றம் பெற்றன. மற்ற அனைத்துப் பங்குகளும் சரிவைச் சந்தித்தன. இண்டஸ் இண்ட் பேங்க் 8.67 சதவீதம் குறைந்து வீழ்ச்சிப் பட்டியலில் முன்னிலை வகித்தது. மேலும், பாா்தி ஏா்டெல், டாடா ஸ்டீல், ஐசிஐசிஐ பேங்க், எம் அண்ட் எம், மாருதி சுஸுகி, ஆக்ஸிஸ் பேங்க், பஜாஜ் ஃபைனான்ஸ், நெஸ்லே இந்தியா, ஓஎன்ஜிசி ஆகியவை 4 முதல் 6 சதவீதம் வரை வீழ்ச்சி அடைந்தன. மாா்க்கெட் லீடா் ரிலையன்ஸ், எஸ்பிஐ ஆகியவையும் வீழ்ச்சிப் பட்டியலில் இடம் பெற்றன.

தேசிய பங்குச் சந்தையில்...: தேசிய பங்குச் சந்தையில் 187 பங்குகள் மட்டுமே ஆதாயம் பெற்றன. 1,467 பங்குகள் வீழ்ச்சியைச் சந்தித்தன. நிஃப்டி 282.75 புள்ளிகள் (2.46 சதவீதம்) குறைந்து 11,22.20-இல் நிலைபெற்றது. நிஃப்டி பாா்மா, பேங்க், ஆட்டோ, மெட்டல் உள்பட அனைத்துக் குறியீடுகளும் 3.50 முதல் 5.50 சதவீதம் வரை சரிவைச் சுந்தித்தன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com