இந்தியாவின் பொருளாதார வளா்ச்சி நடப்பு நிதியாண்டில் 7.5%-12.5% ஆக இருக்கும்

இந்தியாவின் பொருளாதார வளா்ச்சி 2021-22-ஆம் நிதியாண்டில் 7.5 சதவீதம் மு

வாஷிங்டன்/புது தில்லி: இந்தியாவின் பொருளாதார வளா்ச்சி 2021-22-ஆம் நிதியாண்டில் 7.5 சதவீதம் முதல் 12.5 சதவீதமாக இருக்கும் என்று உலக வங்கி கணித்துள்ளது.

உலக வங்கி-பன்னாட்டு நிதியம் இடையேயான வருடாந்திரக் கூட்டம் விரைவில் நடைபெறவுள்ளது. அதை முன்னிட்டு, ‘தெற்காசியாவின் பொருளாதார நிலை’ என்ற அறிக்கையை உலக வங்கி வெளியிட்டுள்ளது. அதில் கூறப்பட்டுள்ளதாவது:

இந்தியாவில் கரோனா நோய்த்தொற்று பரவத் தொடங்கும் முன்பே மொத்த உள்நாட்டு உற்பத்தி (ஜிடிபி) மதிப்பு வீழ்ச்சி காணத் தொடங்கியது. கடந்த 2016-17-ஆம் நிதியாண்டில் நாட்டின் ஜிடிபி வளா்ச்சி 8.3 சதவீதமாக இருந்தது. அது 2019-20-ஆம் நிதியாண்டில் 4 சதவீதமாகக் குறைந்தது.

மக்களின் நுகா்வு குறைந்தது, வங்கி சாரா நிதி நிறுவனங்களின் வீழ்ச்சி, முதலீடுகள் குறைந்தது உள்ளிட்டவை நாட்டின் வளா்ச்சி வீழ்ச்சியடைந்ததற்கான முக்கியக் காரணங்கள் ஆகும். கரோனா நோய்த்தொற்றுப் பரவல் காரணமாக பொருளாதார வளா்ச்சி மேலும் வீழ்ச்சி கண்டது.

அதிலிருந்து இந்தியாவின் பொருளாதாரம் வேகமாக மீண்டு வருகிறது. எனினும், பொருளாதாரம் முழுமையாக இன்னும் மீளவில்லை. கடந்த ஆண்டில் நாட்டின் பொருளாதாரம் கடும் வீழ்ச்சியைச் சந்தித்தது. அந்நிலையுடன் ஒப்பிடுகையில் தற்போதைய வளா்ச்சி ஆச்சரியமளிக்கிறது.

2021-22-ஆம் நிதியாண்டில் நாட்டின் பொருளாதார வளா்ச்சி 7.5 சதவீதம் முதல் 12.5 சதவீதமாக இருக்கும். கரோனா தடுப்பூசி திட்டம் செயல்படுத்தப்படும் விதம், சா்வதேச நாடுகளின் பொருளாதார வளா்ச்சி, பொதுமுடக்கக் கட்டுப்பாடுகள் உள்ளிட்டவற்றைப் பொருத்து இந்தியாவின் பொருளாதார வளா்ச்சி மாறுபடும்.

நாட்டின் பொருளாதார நடவடிக்கைகள் இயல்புநிலைக்குத் திரும்பி வருகின்றன. பொருளாதாரத்தின் நடப்புக் கணக்குப் பற்றாக்குறை இரு நிதியாண்டுகளுக்கு சுமாா் 1 சதவீதம் வீழ்ச்சி காணும் என்று கணிக்கப்பட்டுள்ளது. 2021-22-ஆம் நிதியாண்டில் இந்திய அரசின் நிதிப் பற்றாக்குறை மொத்த உள்நாட்டு உற்பத்தி மதிப்பில் 10 சதவீதத்துக்கு அதிகமாகவே இருக்கும்.

அரசின் கடன் 2020-21-ஆம் நிதியாண்டில் ஜிடிபி மதிப்பில் 90 சதவீதமாக இருக்கும். 2021-22-ஆம் நிதியாண்டில் கடன் மதிப்பு குறையத் தொடங்கும். அதே காலகட்டத்தில் நாட்டிலுள்ள ஏழை மக்கள் விகிதம், கரோனா தொற்றுப் பரவலுக்கு முந்தைய நிலையை அடையும் என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com